நறுவிய வாயின வேனும் உமிழ்ந்து கடுத்தின்னும் தீய விலங்கிற் சிலர் – நீதிநெறி விளக்கம் 80
நேரிசை வெண்பா
திருவினு நல்லாண் மனைகிழத்தி யேனும்
பிறன்மனைக்கே பீடழிந்து நிற்பர் – நறுவிய
வாயின வேனும் உமிழ்ந்து கடுத்தின்னும்
தீய விலங்கிற் சிலர் 80
– நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
இனிய பொருள்கள் (தமது) வாயில் அகப்பட்டுள்ளனவாயினும் (அவற்றைத்) துப்பிவிட்டு கைப்புள்ள பொருள்களைத் தின்னும் கொடிய விலங்கு போல் தீயோர் சிலர்;
தம் மனைவி, திருமகளினுஞ் சிறந்த அழகுடையவளாய் இருப்பினும் அவளை விடுத்து பிறர் மனைவியரின் தொடர்புக்கே தம்முடைய பெருமை கெட்டு நிற்பர்.
விளக்கம்:
சில விலங்குகளென்றது, ஒட்டகம் முதலியவை. இவை உண்ணுதற்கு இனிய பொருள்கள்.பல இருக்கினும் அவற்றை விடுத்து வேப்பிலை போன்ற கசப்புடைய பொருள்களையே விரும்பும்.
அவ்வாறே மனிதருள்ளும் உரிமையின்ப முடைய மனைவி இருக்கையில் அவளை விரும்பாது அவ்வுரிமையின்பமில்லா அயலான் மனைவியை விரும்புவோரும் சிலர் உளர். கடு - கைப்பு;