கற்புடுத்து அன்பு முடித்துநாண் மெய்ப்பூசி நற்குண நற்செய்கை பூண்டாள் - நீதிநெறி விளக்கம் 81
நேரிசை வெண்பா
(’ற்’ ‘க்’ வல்லின எதுகை, ’ன்’ ’ண்’ மெல்லின எதுகை)
கற்புடுத்(து) அன்பு முடித்துநாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு – மக்கட்பே(று)
என்பதோர் ஆக்கமும் உண்டாயின் இல்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு 81
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
கற்பாகிய ஆடையை உடுத்து அன்பாகிய மலர் சூடி உடம்பில் நாணமாகிய கலவைச் சாந்து பூசி நற்குணம், நற்செய்கைகளாகிய அணிகலன்களை அணிந்த மனையாளுக்கு,
புதல்வரைப் பெறுதலான ஒப்பற்ற செல்வமும் உளதானால் அவளை மனைவியாகக் கொண்டவனுக்கு அவன் செய்ய வேண்டிய தவம் வேறு இல்லை.
விளக்கம்:
கற்பு, அன்பு, நாணம், நற்குண நற்செய்கையே ஆடை, மலர், கலவை, அணிகலன் எனக் கொள்ளப்பட்டன; அதற்கேற்ப உடுத்து, முடித்து, பூசி, பூண்டாள் என வினைகள் தந்தார்;. எனவே, இஃது உருவகவணி;
கற்பு - கணவனுக்குப் பொய்யாமல் ஒழுகும் நல்லொழுக்கம்;
அன்பு - சுற்றத்தார் முதலியோரிடங் கொள்ளும் பரிவு;
நாணம் – செய்யத்தகாதவற்றில் உள்ளத்திற்கு உண்டாவதோர் ஒடுக்கம்.
கருத்து:
கற்பு, அன்பு, நாணம், நற்குண நற்செய்கை மக்கட்பேறு முதலிய மேன்மைகளையுடைய மனையாளொடு வாழும் வாழ்க்கையே தவ வாழ்க்கையை ஒக்கும்.