பிறந்தபயன் பெற்றுப் பெருமகிமை பெற்றார் சிறந்தார் - இனிமை, தருமதீபிகை 985
நேரிசை வெண்பா
காணும் உலகினின்று காணரிய பேரின்பம்
பூணும் மனிதர் புனிதராய் - மாணப்
பிறந்தபயன் பெற்றுப் பெருமகிமை பெற்றார்
சிறந்தார் அவரே திகழ்ந்து. 985
- இனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நேரே காணுகின்ற இந்த உலகில் பிறந்த மனிதர் யாரும் எளிதே காணமுடியாத பேரின்ப உலகை அடையவுரிய புனிதராயின் பிறந்த பயனைப் பெற்ற பெருமகிமையாளராய்ச் சிறந்து திகழ்வர்; அவரது காட்சி அற்புத மாட்சியுடையது என்கிறார் கவிராஜ பண்டிதர்.
கண்டு கேட்டுக் கருதியுணரும் திறம் மனிதரிடம் தனியுரிமையாய் இனிது மருவியிருக்கின்றது. காட்சி அளவிலேயே களித்து நின்று வாழ்நாளைக் கழித்து ஒழிபவரே வையகத்தில் கலித்து வருகின்றனர். மெய்யறியுடையராய் உய்தியை நாடுபவர் மிகவும் அரியராகின்றார். சூறைக் காற்றில் அகப்பட்ட செத்தைகளைப் போல் மாயச் சுழல்களில் சிக்கி மக்கள் மாய்ந்து ஒழிகின்றனர். ஆவதை அறியாமல் சாவதையே அறிகின்றார்.
அரிய பிறவிப் பயனை அறவே மறந்து வறிதே அழிந்தொழிவது பரிதாபங்களாய் விரிந்து வருகிறது. பிறந்தவர் யாவரும் இறந்து மறைந்து போகின்றனர். தாய் தந்தை மனைவி மக்கள் ஒக்கல் எனப் பக்கத்தே வந்தவர் எல்லாரும் செத்து ஒழிவதை நேரே கண்டிருந்தும் தம்முயிர்க்கு யாதொரு உறுதியும் காணாமல் மடமையாய் மாந்தர் மாய்ந்து போவது மாய மருளாய்த் தொடர்ந்து பேயிருளாய்ப் படர்ந்து நிற்கிறது.
நீ நாளும் இறந்து கொண்டே இருக்கிறாய்; ஒவ்வொரு நிமிடமும் சாவு உன்னை நெருங்கிக் கொண்டே வருகிறது; வேகமாய்ச் சாகப் போகிறாய்; சாகு முன்னரே உன் உயிர்க்கு ஏதேனும் ஓர் உறுதியைத் தேடிக் கொள்க என்று மனிதனுக்கு அழிவு நிலையைத் தெளிவாக நினைவுறுத்தவே நிலையாமை என ஒரு தலையாய குறிப்பை நூலோர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சாவை நினைவுறுத்தி வாழ்வைத் தெளிவுறுத்துகின்றார்.
நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாள். 334 நிலையாமை
காலத்தைக் கருதியுணர்ந்து விரைந்து கதி காணும்படி இது காட்டியுள்ளது. நாள் உயிர் ஈரும் வாள் என்றது அது கழியுந்தோறும் ஆள் சாவதை அறிந்து ஆவதைக் தெளிந்து கொள்ள வந்தது. நாளை வாளா நினையின் வாழ்வு பாழாகாது.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 3
- முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை, பத்தாம் திருமுறை, திருமந்திரம்
மனித வாழ்வின் நிலைமையைத் திருமூலர் இவ்வாறு குறித்துள்ளார். இப்படி நிலையற்ற நிலையில் இருக்கின்ற நீ இறக்கு முன்னமே உயிர்க்குக் தலைமையான உறுதியைச் செய்து கொள்க என உரிமையாய் உய்தியை உணர்த்தியிருக்கிறார்,
சுடுங்கால் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள். சிலப்பதிகாரம், 10
சூறைக் காற்றின் எதிரே நீட்டிய விளக்கு அவிதல் போல் உயிர்கள் இறந்து மறைந்து போகுமென இது விளக்கியுள்ளது. இறப்பு நிலையை இங்ஙனம் குறித்தது பிறப்பின் பயனை மறந்து போகாமல் விரைந்து பெற வேண்டும் என்று கருதியேயாம்.
Death is here and death is there,
Death is busy everywhere. [Shelley]
சாவு இங்குமங்கும் எங்கும் வேகமாயிருக்கிறது என்னும் இது இங்கே அறிய வுரியது. பிறந்து வருவதும் இறந்து போவதுதம் யாண்டும் நீண்டு தொடர்ந்து நடந்த வருகின்றன.
அழிவு நிலைகளை விழி தெரிந்தும் வழி தெரியாமல் இழிந்துழலுவது ஈன மருளாய் விரிந்து நிற்கிறது. மரணத்தின் வாயிலேயே மனிதன் வாழ்ந்து வருகிறான்; வாழ்வு முடியுமுன் வந்த பிறவியின் பயனைச் சிந்தனை செய்து கொள்பவன் சிறந்த மகானாய் உயர்ந்து திகழ்கிறான். சிந்தியாதவன் சிந்தி அழிகின்றான்.
அறிய உரிய உறுதி நலனைத் தெளிவாயறிந்து கொள்வதே ஞானமாகிறது. உடம்பு அழிந்து போவது; உயிர் என்றும் நிலையாய் நிற்பது; அது தலையான இன்ப நிலையை அடையும்படி ஆற்றி வருபவன் அதனைப் போற்றி வருகிறான். புனிதமான இனிய நினைவுகளும் நல்ல செயல்களும் புண்ணியங்களாய் வருதலால் அவையே ஆன்மாவுக்கு ஆன்ற துணையாய் யாண்டும் இன்பத்தை விளைத்தருளும். நல்ல வினைகளைச் செய்பவன் அல்லல்களை நீங்கி எவ்வழியும்.செவ்வியனாய் இனிய சுகத்தை அடைகிறான்.
நேரிசை வெண்பா
தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்
(றி)யாங்கணும் தேரின் பிறிதில்லை:- ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே,
கூற்றங்கொண் டோடும் பொழுது. 120
- மெய்ம்மை, நாலடியார்
தன் உயிர்க்குறுதியாய் உடன் தொடர்ந்து வருவது தருமமே; அந்த அருமைத் துணையை விரைந்து உரிமை செய்து கொள்ளுக என மனிதனுக்கு இது இனிது போதித்துள்ளது.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
மனமொழி புனிதமாய் மருவின் மாதவம்
இனமுடன் எதிர்வரும்; இனிமை எங்கனும்
நனவிலும் கனவிலும் நணுகும் நன்மையாம்
நினைவிலே நிலையெலாம் நிலவு கின்றன.
இன்னாமை நீங்கி இனிமை ஓங்க வேண்டின் யாண்டும் ஒருவன் இதமே கருதி வர வேண்டும். நல்லதே எண்ணி நலமே புரிந்துவரின் அதிசய இன்பங்கள் விதி முறையே விளைந்து வருகின்றன. விளைவு தெரிவதே விழுமிய விவேகமாம். துன்பத் தொடர்புகள் தொடாமல் ஒதுங்கி இன்ப விளைவை எய்தி மகிழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.