அடுத்த பிறவி அடையாது உடம்பு விழுமுன் உறுதி நலனை அடைந்து மகிழ்தல் - வீடு, தருமதீபிகை 995
நேரிசை வெண்பா
எடுத்த பிறவிக்(கு) இனியபயன் என்றும்
அடுத்த பிறவி அடையா(து) - உடுத்த
உடம்பு விழுமுன் உறுதி நலனை
அடைந்து மகிழ்தல் அறிவு. 995
- வீடு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
இப்பொழுது எடுத்து வந்துள்ள இந்தப் பிறவிக்கு உரிய இனிய பயன் இனிமேல் எப்பொழுதும் அடுத்த பிறவி அடையாமல் செய்து கொள்வதேயாம்: ஆகவே உற்ற உடம்பு பிணமாய் விழுமுன்னரே உறுதி நலனை விரைந்து அடைந்து கொள்க; அவ்வாறு பெறுவதே அது பெற்ற அறிவின் பெரிய பேறாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
புழு, பூச்சி முதலிய இழிவான பிறவிகளை எல்லாம் கடந்து உயர்வான மனித உருவை மருவி வருவது அரிய பெரிய பாக்கியமாகும். அரும் பெறல் யாக்கை என்று மானிட தேகத்தை மேலோர் வியந்து புகழ்ந்துள்ளனர். பெரும் புண்ணியப் பேற்றால் கிடைத்துள்ள இப்பிறவியைக் கொண்டு உயிர்க்கு உறுதியைச் செய்து கொள்ளுபவர் உயர்ந்த உத்தம முத்தர் ஆகின்றார்.
அல்லல் யாதும் அணுகலாகாது என்று மனிதன் யாண்டும் அஞ்சுகின்றான்; நல்ல சுகங்கள் வேண்டும் என்றே எவ்வழியும் அவாவி அலைகின்றான். இயல்பான இந்த அனுபவங்களால் உயிர் துயர்களை வெறுக்கின்றது; உயர்வான இன்பங்களையே உவந்து கொள்ளுகின்றது என்னும் உண்மையை உணர்ந்து கொள்கிறோம் அனுபவ நிலை அதிசய ஞானமாய் இனிது மிளிர்கிறது.
இன்பமே வடிவமான பரமனிடமிருந்து பிரிந்து வந்துள்ளமையால் சீவனிடம் இந்த இயல்பு இயல்பாய் மேவியுள்ளது.
துன்பங்கள் யாவும் நீங்கி இன்பமடைய வேண்டுமானால் பிறப்பொழிய வேண்டும். துன்ப நிலை ஒழிய இன்பம் விளையும். பிறவி எவ்வழியும் துன்பமே; பிறவாமை என்றும் இன்பமே.
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை. (மணிமேகலை, 28)
பிறவியின் துயரையும், பிறவாமையின் உயர்வையும் புத்தர் இவ்வாறு குறித்திருக்கிறார். ஈசனைக் கருதி உலக ஆசைகளை ஒருவிப் புனித நிலையில் மருவுவதே பிறவி நீங்கவுரிய வழியாம்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
பிறப்பெனும் மாயைக் கரையதாய் எங்கும்
..பிறிவறு பெரும்பொருள் தோன்றில்
இறப்புறு மாயைக்(கு) இச்சையே வடிவாம்;
//இதனுடை நாசமே வீடு;
சிறப்பில்சங் கற்பம் சிதைந்திடில் இதுதான்
..தேய்ந்திடும்; சித்தெனும் கதிரோன்
புறப்படில் இதய விசும்பில்வா தனையாம்
..பொங்கிருள் போமெனப் புகல்.
– ஞான வாசிட்டம்
ஆசையே பிறப்புக்கு மூலம்; அது நாசமானால் அதுவே பேரின்ப விடு; ஞான சூரியன் உதயமானால் ஈன மருள் ஒழிந்து போகும்; ஈசனுக்கும் சிவனுக்கும் உள்ள நேச உறவுகள் தெரிய வரும் என்னும் இது இங்கே நன்கு அறியவுரியது.
உயிர்க்குயிர் என்.று பரமனுடைய உரிமையை உணரவே உலக உறவுகள் யாவும் துறந்து அவனையே கருதி மகான்கள் உருகுகின்றனர்; அந்தப் பேரின்பப் பொருளைச் சரியாக அடையவில்லையே என்று உள்ளத்தோடு மறுகி உரையாடுகின்றனர்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் / விளம் காய்)
(1, 5 சீர்களில் மோனை அமைதல் சிறப்பு)
ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்(கு)
..அன்பிலை என்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
..பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
..துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
..செய்வதொன் றறியேனே. 31
- 05 திருச்சதகம், எட்டாம் திருமுறை, திருவாசகம், மாணிக்கவாசகர்
ஈசனை நாடி மாணிக்கவாசகர் உருகியுள்ள நிலைகளை இவ்வுரைகளால் உணர்ந்து கொள்கிறோம். உயிர்க்கு நலமாய்த் துணை புரியவில்லையே என்று உள்ளத்தை எள்ளி இகழ்ந்திருக்கிறார். பிண நெஞ்சே! என்றது இறைவனையே எண்ணி உருகாமல் உலகப் புலைகளில் போகின்றாயே என அப்போக்கை நோக்கி வந்தது. சிவனை நாடுவதே சீவனுள்ள நெஞ்சம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் / விளம் காய்)
(1, 5 சீர்களில் மோனை அமைதல் சிறப்பு)
தேடு கின்றனை ஐம்பொறி களுக்கிரை
..தேடியும் கிடையாமல்,
வாடு கின்றனை வீடுசென்(று) என்றினி
..மருவுவை மடநெஞ்சே!
ஆடு கின்றிலை அழுகிலை தொழுகிலை
..அரங்கனைக் கரம்கூப்பிப்
பாடு கின்றிலை நினைகிலை பதின்மர்தம்
..பாடலின் படியாயே. 55
- திருவரங்கக் கலம்பகம்
மடநெஞ்சே! பொறிகளுக்கு இரை தேடுகின்றனை; இறைவனை நாடுகின்றிலை, வீடு உனக்கு எப்படிக் கிடைக்கும்? என்று மணவாளதாசர் இப்படி மனத்தோடு சினந்து மறுகியிருக்கிறார்.
பொறி நசைகளில் ஓடாமல் பரமனை நாடுகின்றவரே பேரின்ப வீடு கூடுகின்றனர்; அந்த அதிசய ஆனந்த நிலையை அடைய நேர்ந்தவர் வேறு எதையும் நாடாமல் ஈசனையே நாடி எவ்வழியும் உரிமையோடு துதிசெய்து வருகின்றனர்.
பிறவியை நீக்கத் துணிந்து துறவு நிலையை அடைந்தவர் பிறவாத பெரியோனையே உறவாய்க் கருதி அன்பு கனிந்து உள்ளமுருகி உரையாடி வருவது அவரது பரிபாக நிலையை உலகம் அறியச் செய்கிறது. சித்த சுத்தர் முத்தர் ஆகின்றார்.
எடுத்த பிறவியே இறுதியாய் அடுத்த பிறவியை அடையாத சீவன் முத்தர்க்கே ஆனந்த வீடு தனி உரிமை ஆகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.