முழுமக்கள் ஆகற்பா லார் மூவர் – திரிகடுகம் 87

இன்னிசை வெண்பா

கொல்வது தானஞ்சான் வேண்டலும், கல்விக்(கு)
அகன்ற இனம்புகு வானும், இருந்து
விழுநிதி குன்றுவிப் பானுமிம் மூவர்
முழுமக்கள் ஆகற்பா லார் 87

– திரிகடுகம்

பொருளுரை:

ஓருயிரைக் கொல்வதற்குத் தான் அஞ்சாதவனாகி அதனைச் செய்ய விரும்புதலும்,

கல்விக்கு நீக்கமாகிய கூட்டத்திலே நுழைகின்றவனும்,

ஒரு முயற்சியும் செய்யாதவனாய் இருந்து முன்னுள்ள பெருஞ் செல்வத்தைக் செலவு செய்து குறைவிப்பவனும் ஆகிய இம் மூவரும் மூடர்கள் ஆகுதலாகிய தன்மையை உடையார் ஆவர்.

கருத்துரை:

அஞ்சாது ஓருயிரைக் கொலை புரியக் கருதுவதும், படிப்பிற் பற்றற்றவரோடு சேர்வதும், முன்னோர் பொருளைப் பெருக்காமல் செலவழிப்பதும் மூடர் செய்கை என்பதாம்.

அறிவின்மையால் மக்கட் தன்மையில் குறைந்தவரை முழுமக்கள் என்றது மங்கல வழக்கு;

இதை இலக்கணமுடையதாகக் கொண்டு அறிவு நுழையப் புரையில்லாத மக்கள் எனப் பொருள் கூறுவாரும் உண்டு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-22, 3:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே