நிறை மட்டும் தானா வாழ்க்கை
பொதுவாக மக்கள் நேர்மறை எண்ணங்களை மட்டுமே அதிகம்
பார்த்தும் படித்தும் கேட்டும் வருகின்றனர். ஒருவனிடம் உள்ள
நிறைகளை மட்டுமே அறிய விரும்புகிறார்கள். நம்மில் உள்ள நல்ல
கெட்ட குணங்கள் ஒரு நாணயத்தை போல இரண்டு பக்கங்கள்
கொண்டது என்பதை நாம் அடிக்கடி மனதில் கொள்வதில்லை.
ஒவ்வொருவரை பொறுத்தவரை அவர் நல்ல மனிதர். அவருக்கு
எது பிடிக்குமோ அதுதான் நல்லது. மற்றவர்களுக்கு அது
பிடிக்கவில்லை என்றால் மற்றவர் நல்லவர் இல்லை. இதுதான்
நாம் நம்மையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு வாழ்கின்ற வாழ்க்கை.
நாம் ஒருவரிடம் எதிர்மறை விஷயங்களை மட்டும் நோக்குகையில்
அவரிடம் உள்ள நல்ல குணங்கள் நம் கண்ணுக்கு தெளிவாக
தெரியாது. இங்கே என் சொந்த அனுபவம் ஒன்றை கீழ்வரும்
வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்.
சிறு வயதில் T. M.சௌந்தரராஜன் என்கிற திரைப்பட பின்னணி
பாடகர் என்றால் என் உயிர் போல நேசிப்பேன். எங்கள் வீட்டில்
வானொலி பேட்டி இல்லாத காலங்களில், பக்கத்துக்கு வீட்டுக்கு
சென்று, தெருவில் சென்று எங்கிருந்தோ தவழ்ந்து வரும்
அவருடைய பாடல்களை கேட்டு மகிழ்ந்து லயிப்பேன். எவ்வளவு
எனக்கு அவருடைய பாடல்கள் வெறி என்றால், நானும்
அவரரைப்போலவே ஒரு திரைப்பட பாடகராக வேண்டும் என்று
கனவு காண்பேன். சிறு வயது என்பதால் அவருடைய பாடல்கள்
என் மனதில் பசுமரத்து ஆணி போல வேரூன்றியது. இந்நாளைய
பாடல்களை பலமுறை கேட்டும் என்னால் அவ்வளவு சரியாக
பாடமுடியவில்லை. நிறைய மறதியும் சேர்ந்துவிட்டது. ஆனாலும்
நான் சிறுவயதில் வானொலி மூலம் மட்டுமே கேட்டு உள்வாங்கிய
TMS பாடல்கள் இப்போதும் ஒரு வரி பிறழாமல் தெரியும், பாடுவேன்.
அவரை நான் 1978 இல் முதல் முறை நேரில் சந்தித்தேன்,
வருடைய ஆத்மார்த்தமான விசிறியாக. அப்போது எனக்கு 19 வயது.
அவர் அப்போது சொன்ன சில வார்த்தைகள் இன்னமும் நினைவில்
நிற்கிறது. " நான் எந்த பாடல் பாடினாலும் அந்த ஆண்டவன்
முருகன் பாடுவதாக நினைத்து தான் பாடி வருகிறேன். MGR
சொல்லியிருக்கிறார்" TMS ஐ போல் பாடக்கூடியவர் இந்த
உலகத்திலேயே இல்லை" என்று". இதை அப்போது நான் ரொம்ப
பொருட்டாக எடுக்கவில்லை. ஆனால் பிற்காலங்களில்
அவருடைய பேட்டிகள் மற்றும் அவருடைய எண்ணங்களை அவர்
வாய்வழியாக கேட்கும்போது " இவருக்கு பாடுவதில் மட்டும்
இல்லை, தான் என்கிற கர்வம்மும் அதிகம் இருக்கிறது" என்பதை
அறிந்து கொண்டேன். சொல்லி வைத்தாற்போல அவருடைய சில
மேடை கச்சேரிகள் சிலவற்றையும் you டியூபில் பார்த்தேன்.
அவருடைய ஒவ்வொரு பேச்சும் நான் நான் என்கிற
அகந்தையையும் மமதையையும் தான் அதிகம் பறை சாற்றின. நான் இங்கே ஒரு துளி கூட பொய் உரைக்கவில்லை. நீங்களே யூடூபில் சென்று TMS பேட்டிகளையும் அவர் மேடை கசிசேரிகள் செய்தபோது இடையில் பேசும் வார்த்தைகளையும் நன்கு கவனித்து கேளுங்கள். உங்களுக்கே நன்கு தெரிய வரும் TMS க்கு எந்த அளவுக்கு தலைகனம் இருந்தது என்று. இப்போதும் அவர் பாடல்களை மதித்து ரசித்து ஏன் வியந்தும் கேட்கிறேன். ஆனால் அவரை ஒரு பண்புள்ள எளிய மனிதராக மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இப்போது விட்ட இடத்திற்கு வருவோம். நேர்மறைகள் நினறந்தது மட்டுமே வாழ்க்கை என்றால் பின் வாழ்க்கையில், உலகத்தில் பிரச்சினைகளே இருக்காதே. ஒருவனிடம் நல்லது மட்டுமே குடியிருந்தால் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த ஞானியாகத்தானே இருக்க வேண்டும். நாம் நம்மிடம் நிறைகளை கூட்ட வேண்டும் எனில், நம்மிடம் உள்ள குறைகளை அறிய வேண்டும் அவற்றை உள்ளபடியே ஏற்று கொள்ள வேண்டும். நான் நல்லவன் என்னிடம் ஏதும் குறைகளே இல்லை என்று சொல்வது, நாம் சுவாசிக்கும் காற்றிலே அசுத்தமே இல்லை என்று சொல்வது போல். இது சாத்தியமா? இல்லவே இல்லை. எனவே வாழ்வின் எந்த ஒரு கால கட்டத்திலும் நிறைவுகளை சார்ந்த குறைகளை ஏற்று கொள்ள வேண்டும். ஆனால்முடிந்த வரையில் குறைகளை களைய ஆவனவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும். நிறைகள் மட்டுமே உள்ள மனிதனும் இல்லை அதைப்போலவே குறைகள் மட்டுமே கொண்ட மனிதனும் இல்லை. நிறைகளின் மீது அதிக கவனம் செலுத்தும்போது குறைகள் அடக்கி வாசிக்கப்படுகிறது. அதை போல் குறைகளை அதிகம் கவனிக்கையில், நிறைகள் கொஞ்சம் ஓடி ஒளிகின்றது. குறையை நிறையாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் நிறைகள் அனைத்துமே குறைகளையும் தன்னுள் தாங்கியதே என்பதை அலசி பார்த்து புரிந்து கொண்டு அதற்கேற்ப அனுசரித்து வாழ்ந்திடில் வாழ்வின் தன்மையை புரிந்து அந்த தன்மையின் அழகை ரசித்து வாழலாம்.