நிலாக்கள் மிதக்கும் தேநீர் MOONS FLOATING டி நூல் ஆசிரியர் கவிதாயினி அன்புத்தோழி ஜெயஸ்ரீ நூல் விமர்சனம் கவிஞர் இராஇரவி
நிலாக்கள் மிதக்கும் தேநீர்!
MOONS FLOATING டி.
நூல் ஆசிரியர் : கவிதாயினி அன்புத்தோழி ஜெயஸ்ரீ !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
வெளியீடு : அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408. பக்கங்கள் : 96, விலை : ரூ.100.
******
ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள் போல ஒரே நூலில் ஹைக்கூ, லிமரைக்கூ, சென்ரியூ என மூன்றுவகை பாக்களும் உள்ளன. தேநீர் குறித்து தேநீர்க்குளம் என்ற பிரிவில் 19 ஹைக்கூ கவிதைகள் உள்ளன. தேநீர் பிடிக்காதவர்களுக்கும் இந்நூல் படித்தால் தேநீர் பிடிக்கும். அப்படி தேநீரை ரசித்து ருசித்து பல்வேறு கோணங்களில் பாடி உள்ளார். பாராட்டுகள். தமிழ் மட்டுமல்ல, உஷ்ட்ரா அவர்களின் உதவியுடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து கவிதைகள் உள்ளன. இருமொழி நூலாக மலர்ந்துள்ளது.
இனிய நண்பர் மு. முருகேஷ், நா. விச்வநாதன், நாணற்காடன் ஆகியோரின் அணிந்துரை வரவேற்பு தோரணங்களாக உள்ளன. படங்கள், அச்சு என அகநி பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்து உள்ளனர்.
தேநீர் தயாரிக்கையில்
தேநீர் மட்டுமே
தயாரிக்கிறேன்!
WHEN I PREPARE TEA
AM PREPARING ONLY THE
TEA.
ஜென் தத்துவத்தை நினைவூட்டும் விதமாக ஒரு செயல் செய்யும்போது அந்த செயலில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். தேநீர் தயாரிக்கும் போதும் அதில் மட்டுமே கவனமாக இருத்தால் தேநீர் சுவையாக இருக்கும்.
நிலாக்கள் மிதந்தும்
சூடாகவே இருக்கிறது
தேநீர்!
EVEN THOUGH THE MOONS
ARE FLOATING
STILL, THE TEA IS HOT.
தேநீர் மீது மேல் இருக்கும் அழகிய நுரைகளை நிலாக்களோடு உவமைப்படுத்தியது சிறப்பு. நிலா ஒன்று தானே நிலாக்கள் என்று பன்மை வருகிறதே என ஒரு நிமிடம் திகைத்தாலும் காட்சிப்படுத்திய ஹைக்கூ நன்று.
தலைவாரிப் பூச்சூட்டி உன்னை
நகர சாலைக்குப் போகாதே
என்றாள் உன்னன்னை!
AFTER COMBING YOUR HAIR
AND ADDING FLOWERS TO IT
YOUR MOM SAID, DON’T GO TO THE CITY ROAD
தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்குப் போ என அனுப்பினாள் உன் அன்னை என்ற புகழ்பெற்ற வரிகளை மாற்றி எழுதி நகரச் சாலை தூசியாக, போக்குவரத்து நெரிசல் ஆபத்தாக உள்ளது என உணர்த்தியது சிறப்பு.
எனக்கு நிறைவாக
உங்களுக்கு வெறுமையாக
ஆளில்லா அதே சாலை!
IT’S THE SAME ISOLATED ROAD
THAT LOOKS FULL FOR ME
ADD EMPTY FOR YOU
‘காட்சி ஒன்று ; பார்வை பலவிதம்’’’ என்பது உண்மை. ‘ஆளில்லாத சாலை’ நேர்மறை சிந்தனையாளருக்கு நிறைவாகவும், எதிர்மறை சிந்தனையாளருக்கு வெறுமையாகவும் காட்சி தருவது உண்மையே.
மலர்கள் குறைய
இலைகளை ரசிக்க
ஆரம்பித்து விடுகிறது மனம்!
AS THE FLOWERS DECREASED
THE HEART STARTS
TO ADMIRE THE LEAVES.
குறிப்பிட்ட காலத்தில் மலர்கள் உதிர்வது வழக்கம். அவ்வாறு மலர்கள் உதிர்ந்து குறைந்து விட்டால் இலையை ரசிப்பது இயல்பு. ரசித்துப் பார்த்தால் இலையும் அழகு தான். மரத்துக்கு மரம் வேறுபாடாக இலைகள் உண்டு. இல்லாதவற்றிற்கு வருந்துவதை விட இருப்பதற்கு மகிழ்வதே சிறப்பு. இது ஒரு வாழ்வியல் தத்துவம். அதனை உணர்த்தும் ஹைக்கூ நன்று. பாராட்டுகள்.
பயணித்துக் கொண்டிருந்தாலும்
வெளியே ஓடும் மரங்களில் தான்
லயிக்கிறது மனம்
ALTHOUGH COMMUTING
IT’S THE RUNNING TREES
THAT COPTIVATES HEART
தொடரியில் பயணிக்கும் போதும், பேருந்தில் பயணிக்கும் போதும் கடந்து செல்லும் மரங்களின் மீது மனது ஈரக்கப்படும் இயற்கை நேசர்களுக்கு. சன்னல் வழியே இயற்கையை ரசிப்பதும் இன்பமே. உணர்வுகளை ஹைக்கூ ஆக்கி இருப்பது சிறப்பு.
நூலறிந்த பட்டமொன்று
பறந்து கொண்டே இருக்கிறது
காற்றின் போக்கில்
ALONG THE COURSE OF THE WIND
KEEPS FLYING THE KITE
WHOSE STARTING IS CUT
நூல் உள்ள பட்டம், விடுபவர் கட்டுப்பாட்டில் இருக்கும். பாதுகாப்பாக இருக்கும். ஆனால் நூல் அறுந்த பட்டம் காற்றின் போக்கில் பறந்து கொண்டே இருக்கும். நிலையாக ஒரு இடத்தில் நிற்காது. விடுதலை என்ற பெயரில் கட்டுப்பாட்டை இழப்பதையும் குறியீடாகக் கொள்ளலாம்.
மிகப் பிடித்த பொன்வண்டை
தீப்பெட்டிக்குள் அடைத்து வைக்கிறாள்
தீபாக்குட்டி!
LITTLE LADY BUG SHUTS UP
HER FAVOURITE GOLDEN BEETLE
INSIDE A MATCH BOX
அழகிய பொன்வண்டைக் கண்டதும் அதனை எடுத்து தீப்பெட்டி பெட்டிக்குள் அடைத்து வைத்து அவ்வப்பொழுது திறந்து பார்த்து ரசித்து மகிழ்வதுண்டு. வண்டுக்கு இம்சையாக இருந்தாலும் சிறுமிக்கு ஆசையாக இருக்கும்.
உப்பு தடவிய மீன்கள்
நினைவில் வருகிறது
தாத்தாவின் வாயடைத்த அரிசி
I REMEMBER THE RICE GRAIN
THAT FILLED THE MOUTH OFMY DEAD GRANDPA
WHENEVER I SEE THE SALT APPLIED TO THE DRY FISH
இறந்துவிட்ட மீனை பதப்படுத்த உப்பு தடவுவது உண்டு. இறந்து விட்டதால் மீன் உப்பை உண்ணப்போவதில்லை. இறந்து விட்ட தாத்தாவும் அரிசி உண்ணப் போவதில்லை.
வாக்கரிசி என்று வாயில் அரிசி போடுவது வழக்கம். மீனையும் தாத்தாவையும் ஒப்பிட்ட ஒப்பீடு நன்று.
கொய்யா கொத்தும் கிளியிடம்
பாடம் வடித்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை முத்தமிடுவது எப்படி?
FROM THE GUAVA PECKING PARROT
I AM LEARNING THE LESSON
OF HOW TO KISS YOU?
கொய்யாப்பழத்தைக் கொத்தும் கிளியை உற்றுநோக்கி பாடம் கற்கிறேன், காதலனை முத்தமிடுவது எப்படி? என்று. நல்ல கற்பனை. காட்சிப்படுத்தல் ஹைக்கூ சிறப்பு. பாராட்டுகள்.
விழாத மாங்காய்
கல்லெறிந்து கொண்டே இருக்கிறார்கள்
சிறுவர்கள்
THE BOYS KEEP THROWING STONES
AT THE UNFALLEN
MANGO
விளையாடும் சிறுவர்கள் மரத்தில் உள்ள மாங்காயை குறிவைத்து கல் எறிவார்கள். விழாத மாங்காயை விடுவதாக இல்லை. தொடர்ந்து முயன்று ஒருமுறை வீழ்த்தி விடுவார்கள். இதனை உற்றுநோக்கி அதனை ஹைக்கூவாக்கியது. சிறப்பு.
எங்கும் உள்ளதே நிறை
ஆதிக்கப் பிறழ்வின் அரைக் கண்ணுக்கு
தெரிவதோ வெறும்குறை
இது லிமரைக்கூ கவிதை. இதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பு பிரசுரமாகவில்லை. பார்க்கும் பார்வையே நல்ல பார்வையயாக இருக்க வேண்டும். குறை காண வேண்டும் என்ற நோக்கத்தோடு பார்த்தல் கூடாது, எதிலும் நிறை காணும் பார்வையே நேர்மறையின் பார்வையாகும்.
இப்படி நூல் முழுவதும் ஹைக்கூ விருந்து வைத்துள்ள நூலாசிரியர் கவிதாயினி அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுகள்.