சேத்திரத் திருவெண்பா - பாடல் 6 - திருக்கோடி கா

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

நேரிசை வெண்பா

காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி - மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று. 6

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, 'நீ ஒருமுறை திருக்கோடிகா சென்று கோடிகாநாதரை வணங்கு’' என்று கூறுகிறது.

பொருளுரை:

இறந்தபின் பழந்துணியின் ஓரத்திலுள்ள கரையைக் கிழித்து எடுத்த நீள்வடத்தால் தன் பிணத்தின் இரு கால் பெருவிரல்களையும் சேர்த்துக் கட்டியும், கைகளையும் ஆடவொட்டாமல் கட்டியும் தலைக்கு மாலை சூட்டி கண்ணுக்கு மை யெழுதியும் சிங்காரித்து, உடலின் மேலே ஒரு பெரிய புத்தாடையால் மூடி பலர் அழுது சுடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லும் நாள் வருவதற்கு முன் நீ ஒருமுறை திருக்கோடிகா சென்று கோடிகாநாதரை வணங்கு என்று இப்பாடலாசிரியர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அறிவுறுத்துகிறார்.

குறிப்புரை:

`காலைக் கட்டி` என்பது பழந்துணியின் ஓரத்தில் உள்ள கரையைக் கிழித்து எடுத்த நீள் வடத்தால் இறந்தோரது இரு காற் பெருவிரல்களையும் சேர்த்துக் கட்டுதல்.

`தன்` என்றது. `தன் பிணத்தினது` எனப்படும்.

ஆர்த்து – கட்டி, கைகளையும் ஆட வொட்டாமல் கட்டுவர்,

தலைக்கு மாலை சூட்டுதலும், கண்ணுக்கு மை யெழுதுதலும் பிணச் சிங்காரம்.

மேல் மூடி – உடலின் மேலே மூடி. பருக் கோடி - பெரிய புத்தாடை. `பருக் கோடியால் மூடி` எனப்படும்.

திருக்கோடிகா - சோழ நாட்டுத் தலம்.

புராண பெயர்: திருக்கோடிகா
பெயர்: திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில்
ஊர்: திருக்கோடிகாவல்
மாவட்டம்: தஞ்சாவூர்
மூலவர்: கோடீசுவரர், கோடிகாநாதர்
தாயார்: வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி
தல விருட்சம்: பிரம்பு
தீர்த்தம்: சிருங்க தீர்த்தம், காவிரி

கோடீசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இவ்வூரானது வேத்ரவனம் என்று புராணகாலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் பெரிய கோயில் என்று வழங்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 37வது தலம் ஆகும்.

மயிலாடுதுறை - கதிராமங்கலம் சாலையில் திருவிடைமருதூருக்கு வடகிழக்கில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கோடிக்காவல் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் தலவிருட்சமாக பிரம்பும், தீர்த்தமாக சிருங்கோத்பவ தீர்த்தம் மற்றும் காவிரிநதி ஆகியவையும் உள்ளன.

மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப்பாதையில் நரசிங்கன்பேட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2 கி.மீ.

இத்தலம் மூன்று கோடி முனிவர்களால் வழிபடப்பட்டதாகும். இக்கோயில் கண்டராதித்தசோழன் மனைவி செம்பியன்மாதேவியால் கற்றளியாக்கப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-22, 9:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

சிறந்த கட்டுரைகள்

மேலே