ஏர் ஒளியாம் இல்லுடையான் துப்பு – இன்னிலை 33

நேரிசை வெண்பா

மனைக்கொளிசேய் நாற்பணியோன் நாரம் புலக்கார்
வினைக்கொளியாங் கட்காம் அனலி - முனைக்கஞ்சா
வீரரொளி யாமட மேய ரிவையர்க்காம்
ஏரொளியாம் இல்லுடையான் துப்பு 33

– இன்னிலை

பொருளுரை:

வீட்டிற்கு விளக்கு மக்கள் ஆவர்.

நீர் பொருந்திய நிலத்திற்குச் செய்யும் தொழிலுக்கு விளக்கு நான்கு தொழிலும் அறிந்த உழவனே ஆவான்.

விழிகளுக்கு விளக்காவது சூரியனேயாவன்.

போர் முனைக்கு அஞ்சாத படைவீரர்களே போருக்கு விளக்கு ஆவர்.

மங்கையருக்கு விளக்கு மடமை யென்னும் பண்பே ஆகும்.

நல்ல இல்லத்தில் வாழ்வான் வலிமைக்கு விளக்கு ஏர் உழுதல் என்னுந் தொழிலேயாகும்.

அரிவை:
1. Woman between the age of 20 and 25 - இருபது வயதுமுதல் இருபத்தைந்து வயதிற்குட்பட்ட பெண் (பிங்)
2. Woman, lady - பெண் (பிங்)

கருத்து:

மனைக்கு மக்களும், நிலத்திற்கு உழவனும், கண்ணுக்குக் கதிரவனும், போருக்கு வீரரும், பெண்ணுக்கு மடமையும், இல்வாழ்வானுக்குப் பயிர்த்தொழிலும் சிறப்பைத் தருவனவாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-22, 10:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே