பர்ஸ் உள்ளே பணம் எங்கே

கொடுக்கும் மனம் படைத்தவர்கள் மிகவும் குறைவு தான். ஏனெனில் அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். கெடுக்கும் மனம் படைத்தவர்களும் குறைவே. இவர்களும் கெடுத்து வைத்தது அவ்வளவு தான். இதைப் போலவே படுத்தால் தூங்கும் சுகவாசிகளும் குறைவு தான். ஏனெனில் இவர்கள் படுத்து வைத்தது அவ்வளவு தான்.
சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். என் உறவினர்கள் சிலர் கொடுக்காமலே காலம் ஓட்ட மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இப்படி பட்ட கொடுக்கா சிகாமணி ஒருவருடன் நிகழ்ந்த ஓரிரு சுவையான சம்பவங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் சிரிப்புடன் கலந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த உறவினருக்கு மிகவும் அதிகமாகவே பணம் இருக்கிறது. ஆனால் கொடுக்கும் குணம்???? மற்றவருக்கு கையை கூட கொடுக்க யோசிக்கும் ஒருவர் என்ன தான் கொடுத்து விடுவார்.
அவர் வீட்டிற்கு சென்றால் அவர் மனைவி சமையல் செய்து விருந்தினருக்கு பரிமாறுவாள். பொரியல் கூட்டு வகைகள் கொஞ்சம் குறைவாக கிடைப்பினும், அன்னம் தேவைக்கு கிடைத்து விடும். இந்த ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர் கணவர் மனைவியை அதிகம் கண்டு கொள்ள மாட்டார். ஆனால் சமையல் செய்த எதையும் வீணடிக்க கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பார். மீதி இருப்பினும் அடுத்த நாள் அதை உபயோகித்து விடுவார்கள்.
ஒரு முறை அவர் வீட்டிற்கு அருகே உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு எல்லோரும் சென்றோம். அப்போது ஒரு கம்பெனி அங்கு வருபவர்களுக்கு அவர்களின் சில தின்பண்டங்களை கொஞ்சம் இலவசமாக கொடுத்து அந்த பொருட்களை மார்கெட்டிங் செய்து கொண்டிருந்தார்கள். என் உறவினர் வரிசையில் நெடு நேரம் நின்று அந்த தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டார். எங்களையும் அவ்வாறு வாங்கி சாப்பிட வைத்தார். அது மட்டும் இல்லை. அவரே மீண்டும் இரண்டாவது முறை வரிசையில் சென்று இன்னொரு முறை அந்த தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டார். இதன் மூலம் விருந்தினராக சென்ற எங்கள் நால்வருக்கும் அவர் வெளியே தின்பதற்கு வாங்கி கொடுத்ததாக ஆகிவிட்டது. நான் அங்கிருந்து புறப்பட்ட பின்பு " ஏதாவது குடிப்போமா , ஜில்லென்று " என்று கேட்டதற்கு " இரண்டு பாட்டில் தண்ணீர் வீட்டிலிருந்து கொண்டு வந்து விட்டேன். அதை குடித்தால் போதும். தனக்கு வேறு எதுவும் குடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு, அந்த இடத்தை விட்டு மெதுவாக நழுவி விட்டார். நானும் மற்றவர்களும் குளிர் பானங்கள் குடித்தோம், என் செலவில்.
அதன் பிறகு ஒரு கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்புகையில் நான் "மீண்டும் வீட்டில் சமைக்க வேண்டாம், ஏதாவது வெளியே ஹோட்டலில் சாப்பிடலாம்" என்று சொன்னவுடன் அவர் " மாலை கம்பெனி கொடுத்த தின்பண்டங்களை சாப்பிட்டு எனக்கு கொஞ்சம் கூட பசி இல்லை " என்றார். எனக்கு அவரது உள் எண்ணம் நன்கு புரிந்தது. ஹோட்டலுக்கு சென்றால் ஒரு வேளை அவரே பில்லுக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் தான் அவர் ஹோட்டல் வேண்டாம் என்றார். ஆனால் அதே நேரத்தில் நான் நிச்சயமாக அவர்களை ஹோட்டல் கூட்டி செல்வேன் என்பதும் அவருக்கு நன்கு தெரியும். நான் அவரிடம் சொன்னேன் " நீங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம், சும்மா எங்களுடன் உட்கார்ந்து கொள்ளுங்கள் " . பின்னர் எல்லோரும் நல்ல ஒரு ஹோட்டலுக்கு சென்று அவரவருக்கு வேண்டிய உணவு வகைகளை ஆர்டர் செய்தோம். நான் எதிர் பார்த்தது போல என் உறவினர் ஏதும் ஆர்டர் செய்யவில்லை. ஆனால் அவர் மனைவி ஆர்டர் செய்து வரவழைத்த உணவு வகைகளை அவர் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டார், சும்மா கொஞ்சம் ருசி பார்க்கிறேன், என்றபடி. இது போல எங்கள் ஐந்து பேரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சாப்பிட்டார். கடைசியில் அவர் " எனக்கு மோர் சாதம் மட்டும் போதும் " என்று சொன்னபோது நான் அதை ஆர்டர் செய்து அவருக்கு வாங்கி தந்தேன். மோர் சாதம் சாப்பிட்ட பின் அவர் கை கழுவ செல்வதை தள்ளி போட்டார். வெயிட்டர் என்னிடம் பில் கொடுக்கும் அதே நேரத்தில் அவர் கை கழுவ நழுவினார். மொத்தமாக கை கழுவி விட்டார். ஐந்து நிமிடங்கள் கை கழுவி விட்டு மெல்ல அவர் நடந்து வருவதற்குள் பில் பணம் கொடுத்து, டிப்ஸ் எல்லாம் நான் கொடுத்து விட்டேன்.
என் உறவினர் என்னிடம் " நான் ஏதாவது பணம் தரவேண்டுமா"என்று கேட்ட போது அவர் மனைவி கூட சத்தம் போடாமல் சிரித்தாள்.

இவருடன் நடந்த இன்னொரு சம்பவம். ஒரு முறை நாங்கள் ஆறு பேர்கள் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தோம். வழியில் சிலர் " இந்த ஹோட்டலில் பில்டர் காப்பி நன்றாக இருக்கும் " என்று சொன்னதின் பேரில் வண்டியை நிறுத்தி விட்டு ஹோட்டலுக்கு சென்றோம் ஆறு சூடான பில்டர் காப்பி ஆர்டர் செய்து அனைவரும் மெதுவாக குடித்து முடித்தோம். என் உறவினர் இன்னும் மெதுவாக குடித்தார். வெயிட்டர் பில் கொண்டு வந்து கொடுத்தான். அவன் பில்லை மேஜையில் வைத்த அதே நேரத்தில் என் உறவினர் மெதுவாக எழுந்து நடந்து சென்றார். எங்கே என்று பார்த்தால், கழிவறையை நோக்கி. இதே நேரத்தில் நான் பில் பணம் கொடுத்து விட்டேன். பிறகு எல்லோரும் வண்டிக்கு சென்று அமர்ந்தோம். ஆனாலும் என் உறவினரை காணவில்லை. அவர் மனைவி என்னிடம் " பணம் தான் கொடுத்தாகி விட்டதே. இனி கழிவறையிலிருந்து வெளியே வர வேண்டியது தானே " என்று சொன்ன போது எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. சொல்லி வைத்தது போல என் உறவினர் அடுத்த ஐந்து நிமிடங்கள் கழித்து கழிவறையை விட்டு வெளியேறி வந்து எங்களுடன் வேனில் ஏறிக் கொண்டார். என்ன செய்வது, யாருக்கு எப்போது பாத்ரூம் வரும் என்று எவருமே அறிய முடியாது. ஆனால் நான் ஓரளவுக்கு அறிவேன்.

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (4-Apr-22, 4:49 pm)
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே