மன்னன் மாறிவிட்டான்

மன்னன் மாறிவிட்டான்
ஏய் பெண்ணே சற்று ஒதுங்கிப்போ மன்னர் வருகிறார், இறைவன் சந்நிதியில் மன்னர் என்ன குடியானவன் என்ன?
யார் நீ வாய் பேசுகிறாய்? வாளை உருவுகிறான். அரசாங்க பிரதிநிதியே ஒரு பெண்ணிடம் வாளை உருவுகிறாய், நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லிவிட்டு அப்புறம் என் தலையை வெட்டு. இறைவன் சந்நிதியில் மன்னர் என்ன குடியானவன் என்ன?
உன்னிடம் வாய் பேச முடியாது சலிப்புடன் சொல்லி சரி சீக்கிரமாவது உன் தரிசனத்தை முடித்துக்கொள், இன்னும் சற்று நேரத்தில் மன்னர் வந்து விடுவார்
உங்கள் மன்னர் வருவதற்குள் நான் என் தரிசனத்தை முடித்துக்கொள்ள முடியாது, வேண்டுமானால் உன் மன்னர் இறைவனை தரிசனத்தை முடித்த பின்னால் என்னை தரிசிக்க வேண்டியதாய் இருக்கும்.
என்ன சொன்னாய் ? கோபமாய் விழித்தான் காவலன், அதற்குள் படை பரிவாளங்களுடன் மன்னர் ஆலயத்துக்குள் நுழைகிறார்.
அவரவர்கள் ஒதுங்கி நிற்க, இறைவனை பற்றி ஓதுவார்கள் ஓதுகிறார்கள். கை கூப்பி வணங்கி விட்டு திரும்பிய மன்னனுக்கு அந்த பெண் பார்வையில் பட்டாள். யார் இந்த பெண், மன்னர் நிற்பதை கூட கண்டு கொள்ளாமல் எதிரில் நிற்கிறாள். அருகில் இருந்த மகாராணியிடம் விசாரிக்கிறார்.
யாரிந்த பெண்? மகாராணி முறைக்கிறாள், எப்பொழுதும் பெண்கள் நினைப்பே தானா? மன்னர் சிரித்து கொண்டு பெண்களுக்கே உள்ள பொறாமை குணம் உனக்கு, மன்னனை கண்டு பயப்படாமல் நிற்கிறாளே அதற்காக கேட்டேன். மகாராணி அந்த பெண்ணை கை காட்டி அழைக்கிறாள். யார் நீ ? அந்த பெண் அருகில் வந்து நான் இந்த சமூகம் என்ற பெயரில் தங்களை போன்ற பெரிய மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு கோவிலில் இறைவனுக்கு தொண்டு செய்ய படைக்கப்பட்ட “தேவதாசி” அப்படியா அப்படியானால் சற்று உன் நாட்டியத்தை பார்க்க முடியுமா?
மன்னிக்கவும், இறைவனுக்கு பூஜைகள் முடிந்து அதன் பின்னரே இறைவன் முன்னால் நடனமாடுவேன் அதற்கு இன்னும் அரை நாழிகை ஆகும். மகாராணி வியப்புடன் மன்னர் சொன்னால் கூடவா? அதிலென்ன சந்தேகம்? மன்னர் என்ன குடியானவன் என்ன? இறைவன் சந்நிதியில்? சரி காத்திருக்கிறோம். அங்கு அமைக்கப்பட்டிருந்த திண்டுகளில் அனைவரும் அமர்கிறார்கள் இறைவனுக்குரிய பூஜை புனஸ்காரங்கள் முடிந்து அந்த பெண் நாட்டியத்தை கண் குளிர இரசித்தனர். மகாராணி அந்த பெண்ணை அருகில் அழைத்து மிகவும் நன்றாக இருந்த்து உன் நாட்டியம், இந்த இந்த மாலையை பெற்றுக்கொள் தன் கழுத்திலிருந்த கழற்றினாள்.மகாரணி இறைவனுக்கு தொண்டு செய்பவளாய் படைக்கப்பட்ட எனக்கு இவ்வளவு உயர்ந்த பரிசு தேவையில்லை, ஆனால் கருணை கூர்ந்து ஒன்றே ஒன்று வேண்டுகிறேன்.மகாராணி வியப்புடன் என்ன வேண்டுகிறாய்? தயவு செய்து நீங்களும், மகாராஜாவும் என்னுடன் வாருங்கள் நாங்கள் குடியிருந்து வரும் அந்த மக்களின் வாழ்க்கையை முறையை பாருங்கள்.
மன்னரும், ராணியும் அந்த இடத்தை போய் பார்க்க, ஏழை மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு வழீ இன்றி பரிதாபமாய் இருப்பதை பார்க்கிறார்கள். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்/? தங்குவதற்கு கூட வசதி இல்லாமல் இருக்கிறார்களே? .தயவு செய்து இவர்களுக்கு உதவுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன்.
ராணி மகாராஜாவுடன் ஏதோ சொல்ல, அவர் மந்திரியாரிடம் சொல்கிறார். அவரும் தலையாட்டி விட்டு அங்கிருந்து செல்கிறார்.
இரவு பொழுது !
மன்னர் தனி அறையில் மேலும் கீழும் உலாவுகிறார்? அந்த பெண் “தேவதாசி” அவர் மனதுக்குள் வந்து நாட்டியமாடுகிறாள். ஆ..அற்புதம், அற்புதம்..அவளை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறதே. சட்டென தன் நம்பிக்கைக்குரிய காவல்காரனை அழைக்கிறார். வந்து நின்ற காவலனிடம் ஏதோ சொல்ல அவன் விரைந்து வெளியேறுகிறான்.
கிட்டத்தட்ட ஒரு மணித் துளி கழிந்தது, வெளியே சென்ற காவலன் மன்னரின் காதில் ஏதோ சொல்ல அவர் முகம் மலர அவனை போக சொல்லிவிட்டு குதிரை லாயத்துக்குள் செல்கிறார்.
கோயிலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த குடிசையின் முன் ஒரு குதிரை வந்து நிற்கிறது. அதிலிருந்து ஆஜாபாகுவான ஒரு உருவம் உள்ளே நுழைய அங்கு இருந்த ஒற்றை கட்டிலின் மேல் அந்த “தேவதாசி”ப்பெண் அமர்ந்திருக்கிறாள். இவர் உள்ளே நுழைந்ததை கண்டதும் எழாமலேயே வாருங்கள் மன்னரே, அடியேனை பார்க்க விரும்புவதாக சொல்லி அனுப்பி இருந்தீர்களாம், என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளலாமா? அதுவும் இந்த நள்ளிரவில் என்னை காண வந்த விஷயம் என் மீது கொண்ட மையல்தானா?
ஆம், உன் அழகும், நாட்டியமும் என் மனதை கவர்ந்து விட்டன, இன்று இரவு உன்னுடன் கழிக்க விரும்புகிறேன், இது ஆணையா? கோரிக்கையா? இரண்டும் இல்லை, அன்பால்தான் கேட்கிறேன். அன்பால் கேட்பவருக்கு நள்ளிரவில் வரவேண்டிய அவசியமில்லை மன்னரே.
என்ன சொல்கிறாய்? நாடாளும் மன்னனுக்கு பகலில் உன்னை போன்ற பெண்களிடம் பொழுதை போக்க முடியுமா ? அன்பால் கேட்பவருக்கு “தான் மன்னன்” என்ற மமதை இருக்கும்போது, நாளும் இறைவன் முன்னால் ஆடும் எனக்கு எவ்வளவு இருக்க வேண்டும்.
அதிகமாக பேசுகிறாய், உம் என்று ஒத்துழைத்தால் சத்தமில்லாமல் சென்று விடுகின்றேன். இல்லையென்றால் வன்முறையில் உன்னுடன் கழிக்கவும் முடியும்.
ஹா..ஹா..மன்னரே நீர் எனது உடலை வேண்டுமானால் தீண்டி விட்டு சாதனையாய் சென்று விடலாம், ஆனால் இறந்த நொடியில் அழுக போகும் உடலை விட ஆன்மா என்பது எவ்வளவு பெரியது என்பது உங்களுக்கு புரியாது. ஒரு மன்னனாய் நீர் எம் முன்னால் நிற்கிறீரா? இல்லை காமுகனாய் நிற்கிறீரா? இன்னொன்றையும் உங்களுக்கு சொல்லி விடுகிறேன், உமது மனைவியார் ராணி அவர்கள் என்னை எச்சரித்து விட்டே சென்றார். இதிலிருந்து புரிகிறதா? நீர் எந்தளவு உம் மனைவியின் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்திருக்கிறீர். அப்புறம் மன்னன் என்ன? வெங்காயம் என்ன? சொந்த மனைவியின் நம்பிக்கைக்குரியவனாய் இல்லாதவன் நாட்டு மக்களுக்கு எப்படி நம்பிக்கைக்கு உரியவனாய் இருக்க முடியும்? உம்மை பற்றி வேறு இந்த புலவர்கள் புகழ்ந்து கவிதைகளை இயற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
மன்னன் சற்று நிதானிக்கிறான். மன்னித்துக்கொள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக பேசிவிட்டேன். உண்மையில் அற்புதமாகத்தான் பேசுகிறாய், மன்னனையே மடக்கிவிட்டாய்.
மன்னன் மன்னன் என்று பெருமை பேசுகிறீர்களே, உண்மையில் உம்மை புகழ்ந்து பாடுவதை நிஜம் என்று நம்புகிறீர்களா? நாளையே உம்மை கவிழ்த்து விட்டு வேறொருவன் நாடாண்டால் அவனை உமது கவிகள் வாயார புகழ்ந்து பாடுவார்கள் அது தெரியுமா?
ஒத்துக்கொள்கிறேன், நான் நிறைய சாதித்து விட்டதாக எண்ணிக்கொண்டிருந்தேன் இதுவரை. இல்லை மன்னா இல்லை, இந்த கவிகள் வார்த்தைகளில் மயங்கி உங்களை நீங்கள் மறைத்துக் கொள்கிறீர்கள்., இது வரை எந்தவொரு கவியும் உங்கள் மூதாதையர் காலம் முதல் இது நாள் வரை ஏழை மக்களாகட்டும், அல்லது நடுத்தர மக்களாகட்டும், இந்த சமூகத்தின் குறைபாடுகளை, அடிமை மக்களின் அல்லல்களை, எங்களைப்போன்ற தேவதாசிகளை இழிவாய் பேசுவதையோ, இவைகளை பற்றி கவி பாடியிருக்கிறார்களா? உம்மை பற்றி புகழ்ந்து பாடுவது, பரிசல் பெற்றுக் கொள்வது. நீரும் இதில் இன்பம் கண்டு பெருமை பட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்.
ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளும் எதிர் காலத்தில் இந்த அடிமட்டத்தில் இருப்பவன் உம் சந்ததிகள் எதிரில் உட்கார்ந்து அவர்களிடம் அரசியல் பேசலாம், அல்லது உன் சந்ததிகள் அவன் கீழ் பணி புரிய நேரிடலாம், அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்த மக்களிடமிருந்தே கவிகள் கிளம்பி சமுதாய சீர்கேடுகளை தன் கவியால் தட்டிக் கேட்கலாம். பல பல கலைகள் உருவாகலாம், புதிய இலக்கிய மாற்றங்கள் வரத்தான் போகின்றன. அப்பொழுது நீரோ நானோ இருக்கப்போவதில்லை.
நீ கனவுலகத்தில் இருக்கின்றாய் பெண்ணே, இருந்தாலும் காமத்தீயில் வந்த என்னை கவிஞனாக்கித்தான் அனுப்புவாய் போல. இல்லை மன்னா இது உண்மை கண்டிப்பாய் நடக்கும், நிறைய மாற்றங்கள் வரத்தான் போகின்றன. அதற்கு ஏதோ ஒரு பெயர் வரக்கூடும் என் மனதில் “அறிவியல்” என்று சொல்வார்களோ என்று தோன்றுகிறது. ஆனால் ஒன்று மன்னா அப்படி எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இந்த அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், வசதியான மக்கள், இவர்களின் கவலைகள் என்றுமே மாறப் போவதில்லை, என்ன இன்றைய கவலைகள் நாளை வேறொரு பெயரில் கவலையாக தோன்றும். அது மட்டுமல்ல அந்த வளர்ச்சியே அவர்களை அடிமைப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.
சரி நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?
மன்னா உன் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நாட்டு மக்களுக்கு ஒரு சில காரியங்கள் செய்து கொடு “தேவதாசி” முறையை ஒழிக்க முயற்சி செய், அடிமை மக்கள் வியாபாரத்தை நிறுத்த முயற்சி செய், அடித்தட்டு மக்களையும் ஒரு பிரதிநிதியாய் அரண்மனைக்குள் உட்கார வை. சாதியின் பேரால் அடித்துக் கொள்வதை நிறுத்த முயற்சி செய், அவர்கள் கெளரவமாய் வாழ சமூக பாதுக்காப்பை ஏற்படுத்திக் கொடு. நான் சொன்ன அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் உன் காலத்திலிருந்து தொடங்குவதாக இருக்கட்டும் இதை ஒத்துக்கொள்வாயா மன்னா?
தயவு செய்து என்னை இனி மன்னன் என்று அழைக்காதே, உன் பேச்சை கேட்ட பின்னால் மன்னன் என்ற வார்த்தை கசப்பாகத்தான் இருக்கிறது. உன்னைப்போல் சாதாரண குடிமகனாக எண்ணி ஐயா என்றழைத்தால் போதும்.
சமூகத்தில் உம்மை அப்படி அழைப்பது தவறல்லவா? இல்லை பெண்ணே நான் எனது காலத்திலேயே இந்த சமூக மாற்றத்துக்கு அடி கோல முடியுமா என்று முயற்சிக்கிறேன். நான் வருகிறேன்.
என் மீது உமக்கு கோபமில்லையே?
இல்லை மன்னா, உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தோன்றக் கூடியதுதான், அதை எப்படி திருப்பிக் கொள்கிறான் என்பதில்தான் அவனது வெற்றி இரகசியம் இருக்கிறது.. நாம் வாழும் உலகம் முப்பக்கமும் ஏன் நீரால் சூழ்ந்திருக்கிறது தெரியுமா மன்னா ? அவைகள் நம்மை எப்பொழுது வேண்டுமானாலும் விழுங்கிவிடலாம், புரியவில்லையா? நம் உடலில் முக்கால் பாகம் நீராகத்தான் உள்ளது. நீங்கள் உங்கள் மனத்திலிருந்து ஊற்றை தோண்டி தேவையானதை எடுத்து உபயோகப்படுத்தி பின் மனதை மூடி விடவேண்டும். காரணம் அந்த ஊற்று தோண்ட தோண்ட பெருகி உங்களை மூழ்கடித்து விடும். உதாரணமாக “காதல்” என்ற ஊற்றை உங்கள் மனதில் தோண்ட ஆரம்பித்தீர்கள் அது அளவு மீறி உங்கள் காமாந்தகனாய் ஆக்க முயற்சித்தது. நல்ல வேளையாக அதை உங்கள் அறிவு என்னும் மனதால் மூடிவிட்டீர்கள். இதனால் உங்கள் மனம் பெரும் மாற்றம் கண்டு விட்டது.
ஆம் பெண்ணே உன்னை நான் ஆட்கொண்டிருந்தாலும் அது தற்காலிக வெற்றியாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது எனக்கு கிடைத்திருக்கும் இந்த அமைதி அப்பொழுது கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.
மன்னன் வெளியே வந்து குதிரையில் ஏறி மறைகிறான். வெளியில் மன்னனுக்கு காவல் நின்ற வீர்ர்களும் மற்றும் தூக்கமில்லாமல் திண்ணையில் படுத்திருந்த மக்களும் (ஆண், பெண்) ஹூம் அவளுக்கென்ன அனுபவிக்கறா, ராஜாவே ராத்திரியானா அவளைத்தேடி வாராரு என்று மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருந்தனர். ( இவள் அவர்களுக்காக வாதாடியது தெரியாமலேயே )

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Apr-22, 11:43 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 213

மேலே