மாணவாளனின் வாழ்க்கை நாடகம்

என் புத்தியை செருப்பால் அடிக்கவேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் புத்தியை மற்றவர் உங்களிடம் கொண்டுள்ள வெறுப்பால் அடிக்க வேண்டும் " இது மணவாளன் கதை வசனம் எழுதிய " கரிக்காத உப்பு" என்ற நாடகத்தில் வரும் ஒரு வசனம். அந்நாளில் அவர் ஊரில் சிறந்த நாடக எழுத்தாளராக கருதப்பட்டவர். அவர் ஒரு பொதுத்துறை அரசாங்க நிர்வாகத்தில் 33 ஆண்டுகள் பணி புரிந்து , 55 ஆவது வயதில் தன்னிச்சையான ( voluntary ) பதவி ஓய்வு பெற்று கொண்டார். மறைந்த புகழ்பெற்ற கே. பாலசந்தர் திரைப்பட துறைக்கு வருவதற்கு முன் நாடகத்தில் தான் கொடி கட்டி பறந்தார். மணவாளன் அவருடைய நாடகங்களை மிகவும் விரும்பி பார்க்கும் பரம விசிறிகளில் ஒருவர். அதன் தாக்கத்தால் நாடகம் எழுதுவதில் நாட்டம் கொண்டு நாடகங்கள் எழுத தொடங்கினார். அலுவலக நேரம் போக மற்ற நேரத்தில் மணவாளன், நாடக கதைகளையும் வசனங்களையும் தான் எழுதிக்கொண்டிருப்பார். அதனுடன் சிகரெட்டுகளை பிடித்து தள்ளி கொண்டிருப்பார். சேலத்தில்தான் அவரது நாடகங்கள் அதிக அளவில் நடந்தது என்றாலும் சில குறிப்பிட்ட நாடகங்கள் சென்னையிலும் ரசிக்கப்பட்டது என்பதால் அவர் சென்னைக்கு பலமுறை சென்று வந்தார். அலுவலகத்தில் அவரது சக ஊழியர்கள் மற்றும் அவரது உயர் அதிகாரிகள் சிலரும் அவரது நாடகங்களை விரும்பி ரசித்தனர். குறிப்பாக அவரது சில வசனங்கள் மிகவும் மாறுபட்டவையாக இருக்கும். உதாரணத்திற்கு அவர் எழுதிய மூன்று நாடகங்களிருந்து மூன்று வசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1 . மகன் " அம்மா, நான் உன்னிடம் நாங்கள் இருவரும் படம் பார்த்து விட்டு வெளியே சாப்பிட்டு விட்டுத்தான் வருவோம் என்று கூறி தானே சென்றேன். பின்னே ஏன் எங்களுக்கும் சேர்த்து உணவு வைத்திருக்கிறாய்"
அம்மா " படம் முடிந்து இரவு பத்து மணிக்கு மேல் நல்ல உணவு உங்களுக்கும் கிடைக்குமா என்ற சந்தேகம் வந்தது. அதனால் தான் கொஞ்சம் உணவை கூடுதலாக செய்தேன்."
மகன்: " எப்பேர்ப்பட்ட அம்மம்மா நீ. உண்மையில் எனக்கு சாப்பிட்ட நிறைவே இல்லை. உமாவும் அவ்வளவு விரும்பி சாப்பிட்டவில்லை. இப்போ இருவரும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு படுக்க செல்கிறோம். ஏற்கெனவே மணி 11 .30 ஆகுது. நீ போய் தூங்குமா"

2 . கம்பெனி இயக்குனர் " கணேஷ், நீயும் கண்ணனும் சேர்ந்து நேற்று இரவுக்குள் ஒரு வேலையே முடிக்கவேண்டும் என்றேனே, அந்த வேலை முடிந்ததா? உன்னை பார்த்தல் இரவு முழுதும் தூங்காதவன் போல் தெரிகிறது."
கணேஷ் " இதோ சார், நீங்கள் சொன்னபடி கணக்கு வழக்குகளை பார்த்து, ரிப்போர்ட் தயார் செய்தாகிவிட்டது. நீங்கள் ஒரு முறை பார்த்து திருத்தங்கள் சொன்னால் இன்று காலை 11 மணி அளவில் நீங்கள் திட்டமிட்டபடி இதை நாம் வருமானவரி துறைக்கு அனுப்பி விடலாம்."
இயக்குனர்" கணேஷ் நான் கண்ணனை ஒரு ஹோட்டலில் ஒரு பெண்ணுடன் நேற்று இரவு பார்த்தேனே? அப்படி என்றால் நீ மட்டும் இரவு முழுதும் தங்கி இந்த வேலைகளை செய்தாயா? எங்கே கண்ணனை கூப்பிடு."
கணேஷ் " சார், தயவு செய்து எங்கள் இருவரையும் மன்னித்து விடுங்கள். நேற்று கண்ணனின் காதலி முதல தடவை அவள் பிறந்த நாள் பார்ட்டிக்கு அவனை வரும்படி ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அழைப்பு விடுத்திருந்தாள். ஆகவே நான் தான் கண்ணனை இரவு 7 மணிக்கு வீட்டிற்கு போகச்சொன்னேன்."
இயக்குனர்" கண்ணனுக்கு அலுவலக வேலை முக்கியமா இல்லை அவன் காதல் முக்கியமா? அவனை கூப்பிடு நான் கண்டிக்கிறேன்"
கணேஷ் " சார், தயவு செய்து அப்படி செய்யவேண்டாம் சார். ஒரு உண்மையை உங்களுக்கு சொல்கிறேன் சார். சின்ன வயதில் எங்கள் குடும்ப பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்த போது கண்ணனின் அப்பா எங்களுக்கு எவ்வளவோ உதவினார். அவற்றை என்னால் மறக்கவே முடியாது சார். அவரது நேரத்தில் செய்த உதவி " தண்ணீரே இல்லாத ஊரில் வானம் மும்மாரி பொழிந்த மாதிரி " சார்.
கண்ணன் என்னுடன் சேர்ந்து வேலை செய்கிறேன் என்றுதான் சொன்னான். நான் தான் " கண்ணா, முதன் முறையாக உன் காதலி உன்னை அவள் பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைத்திருக்கிறாள். நீ நிச்சயம் போய் கலந்து கொள். எனக்கு ஏதாவது உன் உதவி தேவை என்றால் நான் உனக்கு அவசியம் போன் செய்கிறேன் " என்று சொன்னேன். அதன் பிறகு தான் அவன் வீட்டிற்கு சென்றான். எதிர்பாராத வகையில் பல சில வருடங்களின் பைல்களை பார்க்க வேண்டி வந்ததால், நான் வீட்டிற்கு செல்லாமல் நீங்கள் சொன்ன ரிப்போர்ட்டை தயாரித்து விட்டேன். இந்த ரிப்போர்ட்டை எப்படி தயாரிக்க வேண்டும் என்று கண்ணன் தான் மிகவும் தெளிவாக விளக்கினான்."
இயக்குனர் " கணேஷ் , ரிப்போர்ட்டையும் பார்த்தேன். மிகவும் தெளிவாக உள்ளது. ஒரு திருத்தமும் அவசியம் இல்லை. ஒவ்வொரு கம்பெனியிலும் உன்னை போல ஒன்று இரண்டு பேர்கள் இருந்தால் போதும், அந்த கம்பெனி மிகவும் அருமையாக வியாபாரம் செய்யும். உன்னுடைய மனிதாபிமானம் மற்றும் உழைப்பை கண்டு நான் பெருமை படுகிறேன்"

3 . சினேகா : ராபர்ட், என்னை நீ மன்னிச்சுடு. பூவோடு இருக்கும் வாசம் போல நான் உன்னோடு வாழத்தான் ஆசை கொண்டேன். ஆனால் இப்போது நான் பூவாக இல்லாமல் ஒரு முள்ளாக மாற்றி விட்டேன். என் குடும்ப சூழ்நிலையை நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்.
ராபர்ட் " சினேகா , எந்த நிலை வந்தாலும் தயிரிலிருந்து பிரியாத வெண்ணைபோலதான் நீ இருப்பாய் என நான் மிகவும் நம்பினேன். உனக்கு இப்போது உள்ள சிக்கல்களை நான் உணர்வேன். இருப்பினும் பருவம் கடந்த மழை என்றாலும் நான் உனக்காக காத்திருக்க தயார்"
சினேகா: " ராபர்ட், உன் உணர்வுகள் உணர்ச்சிகள் எனக்கு நன்கு புரிகிறது. என் ரத்தத்தில் நீ ஓடுவது போல உன் இதயத்தில் அடிக்கும் தக் தக் தக் சினேகா சினேகா சினேகா என்று அடிப்பதையும் நான் என் இதயத்தில் உணர்வேன். பெற்ற என் தந்தை தாயின் மரியாதையையும் மதிப்பையும் காப்பாற்றவேண்டிய தார்மீக பொறுப்பு எனக்கு இருக்கிறது என்பதை நீ நன்கு சிந்தித்து பார்த்தால், நிச்சயம் நீ இன்னும் மூன்றாண்டு காலத்தை முப்பது நாட்களாக எடுத்துக்கொள்வாய்."
*******
இரு பெண்களின் படிப்பு மற்றும் வாழ்க்கை நலனை கருத்தில் கொண்டு மணவாளன் நாடக துறையில் முழு நேரத்தில் ஈடுபடவில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் அவர் மிகவும் சிறந்த மாணவனாக விளங்கினார். ஆங்கிலத்திலும் அவருக்கு ஓரளவுக்கு புலமையும் ஈடுபாடும் இருந்தது. திரை இசை பாடல்கள் அதிகம் கேட்பார், கர்நாடக இசையையும் ரசிக்கும் ஆர்வமும் அவருக்கு இருந்தது. நாடகத்திற்கு அன்பான பாசமான மனிதாபிமான வசனங்களை எழுதினாலும் அவருக்கு மற்றவரை மதிக்கும் குணம் அவ்வளவு இல்லை, தான் என்ற எண்ணமும் கர்வமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனுடன் நாணயமும் நேர்மையும் இருந்தது. அலுவலகத்தில் வேலை பளு காரணமாகவும், நாடகத்தில் இன்னும் கொஞ்சம் எதாவது செய்யலாம் என்ற ஆர்வமும் இருந்ததால் அவர் 55 வயதிலேயே voluntary retirement ( தன்னிச்சை பதவி ஓய்வு) எடுத்து கொண்டார். பதவி ஓய்வு பெற்ற பின் ஒரே ஒரு நாடகம் தான் அவரால் எழுத முடிந்தது. ஆனாலும் அவரது வசனங்களில் எப்போதும் இருக்கும் ஒரு பொறி , பொலிவு அந்த நாடகத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சேலத்தில் பார்த்து பார்த்து ஒரு சொந்த வீட்டை கட்டி முதலில் வாடகைக்கு விட்டுவிட்டு பின் ஐந்து வருடங்கள் கழித்து அவர் மனைவியுடன் அங்கு சென்று வாழ தொடங்கினார். ஆனால் இரண்டு வருடங்களுக்குள்ளாகவே மனைவியின் உடல் நிலை அதிகமாக பாதிக்கப்பட்டதால், அவளுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கொடுக்க, அவர் சொந்த வீட்டை மனமின்றி விற்றுவிட்டு மனைவியுடன் சென்னைக்கு ஜாகையை மாற்றினார். இந்த மாற்றம் மணவாளனை மனதளவில் மிகவும் பாதித்தது.
சென்னையில் அவரது இரண்டாவது மகள் மஞ்சுளா இருந்தாள். மஞ்சுளா ஏற்கெனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள வடிவேலு என்பவர் தன்னை விரும்புகிறார் என்று விருப்பம் தெரிவித்தபோது, அவருடைய சிரிக்கும் முகத்தையும் நல்ல பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு அவருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கை பட்டாள். வடிவேலு நடத்தி வந்த ஒரு கம்பெனியில் மஞ்சுளா வேலை செய்து வந்தபோது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை அவளுக்கு வந்தது. இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். வடிவேலு அவருடைய முதல் மனைவி குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். முதல் மனைவியின் சம்மதத்துடன்தான் மஞ்சுளாவை மணந்து கொண்டார் என்று வடிவேலு மஞ்சுளாவுக்கு தெரிவித்தார். கல்யாணத்தை விமரிசை இல்லாமல் ஒரு கோவிலில் செய்து கொண்டார்கள். மணவாளனும் அவர் மனைவி இருவர் மட்டும் தான் மஞ்சுளாவின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டனர். முதலில் மணவாளன் தம்பதிகள் கொஞ்சம் கவலை பட்டனர், சின்ன பெண் இரண்டாந்தாரமாக போகிறாளே என்று. இருப்பினும் மஞ்சுளாவின் பிடிவாதத்தால் இருவரும் வேறு வழியின்றி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். வடிவேலுவின் முதன் மனைவியும் கல்யாணத்தின் போது உடன் இருந்தாள். வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் வடிவேலு மஞ்சுளாவின் வீட்டில் தங்கி செல்வார். ஒரு வருடத்திற்குள் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு வடிவேலு மஞ்சுளா வீட்டிற்கு வருவதை வெகுவாக குறைத்து கொண்டார். ஆனால் மாதம் ஒரு தொகையை மஞ்சுளாவுக்கு அனுப்பி வந்தார். அதன் பின்னர் மஞ்சுளா, டாக்டரேட் பட்டம் பெற்றவள் என்பதால், வடிவேல் கம்பெனியின் வேலையை விட்டுவிட்டு ஒரு கல்லூரிக்கு சென்று பேராசிரியையாக பணி புரிய தொடங்கினாள்.

எவ்வளவோ முயன்று மருத்துவ சிகிச்சைகள் பல செய்தும் எந்த பலனுமின்று மனைவி இறந்ததும் மணவாளனின் மனதிலும் உடலிலும் குறிப்பிடும் மாற்றங்கள் ஏற்பட்டது. நாடகங்கள் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் குறைய ஆரம்பித்தது. அவருக்கும் சர்க்கரை வியாதி வந்து தொற்றிக்கொண்டது. அவளது இரண்டாவது மகள் மஞ்சுளா அவளது குழந்தையுடன் அவள் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டாள். அவள் கல்லூரி சென்று வரும் நேரத்தில் மணவாளன் குழந்தையை கவனித்து கொண்டார். போக போக அவருக்கு மஞ்சுளாவுடன் தங்க விருப்பம் இல்லாமல் போய்விட்டது. அவர் தனக்கு தோன்றியது போல சுதந்திரமாக வாழ முடியாமல், குழந்ததையை பள்ளியில் விட்டு வருவது , மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது, அதற்கு உணவு கொடுப்பது , அதனுடன் விளையாடுவது , அதை தூங்க வைப்பது இதுபோன்ற நித்திய வேலைகளை செய்ய அவருக்கு வெறுப்பாக இருந்தது. இதை புரிந்து கொண்டு, மஞ்சுளா வீட்டில் ஒரு ஆயாவை அமர்த்தினாள். இருப்பினும் நாளடைவில் அப்பாவுக்கும் பெண்ணிற்கும் மனஸ்தாபம் வர தொடங்கியது. ஒரு நாள் மஞ்சுளா அப்பாவிடம் " அப்பா, இப்போது உள்ள சூழ்நிலையில் நான் உங்களுடன் இருக்க விரும்பவில்லை. எனவே வேறு ஒரு வீடு வாடகைக்கு பார்த்துக்கொண்டு நான் குழந்தையுடன் சென்று விடுகிறேன்" என்று கூற , மணவாளன் " நீ எங்கும் செல்ல வேண்டாம் மஞ்சுளா. நான் முதியோர்கள் இல்லம் பார்த்துக்கொண்டு சென்று விடுகிறேன். இந்த வீட்டுக்கு வாடகை பணத்தில் பாதியை நான் உனக்கு மாதம் தந்துவிடுகிறேன்." என்றார். மஞ்சுளா " அப்பா, நீங்க முதியோர் இல்லம் செல்வதை நான் விரும்பவில்லை, அக்கா வனிதாவும் விரும்பமாட்டாள். நீங்கள் இந்த வீட்டிலேயே இருங்கள் .எனக்கு தெரிந்த ஒரு சமையற்கார பெண்மணி இருக்கிறாள். அவள் உங்களுக்கு மதியம் வந்து மதியம் இரவுக்கு சேர்த்து சமைத்து கொடுத்து செல்வாள். மாதா மாதம் அவளுக்கு 4000 ரூபாய் கொடுக்கவேண்டும்."
இந்த ஆலோசனை மணவாளனுக்கு அப்போது சரி என்று பட்டது. அதன் பின்னர் மூன்று மாதங்கள் வரை புதிய பாணியில் அவரது வாழ்க்கை நடந்து வந்தது. அதன் பிறகு ஒரு மாறுதலுக்காக அவர் மூன்று மாதங்கள் டெல்லியில் உள்ள அவள் பெரிய பெண் வனிதாவிடம் சென்று தங்கி விட்டு வந்தார். அந்த நேரத்தில் தான் வனிதாவின் கணவன் ராகவனின் அப்பா கோவிந்தன், அவர் மனைவி சுதாவை இழந்து விட்டு, ராகவன் வீட்டில் இருந்து வந்தார். சுதாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு மிகவும் அன்பான, பணிவான, உதவும் உள்ளம் கொண்ட, குடும்பத்தை சிறப்பாக நடத்தும் ஒரு இனிய ஆசிரிய பெண்மணி. சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தார். கைக்குத்தல் அரிசி சாப்பாடு தான் சிறுவயதில் அவரது அன்றாட உணவு.
அவருடைய அம்மா மிகவும் கோபக்கார பெண்மணி. எதற்கெடுத்தாலும் சுதாவை திட்டிவிடுவாள். எப்படியோ ஒரு வழியாக எஸ்எஸ்எல்ஸீ படிப்பை குதித்து விட்டு, ஆசிரியை தேர்வில் வெற்றி பெற்று ஒரு பள்ளியில் ஆசிரியை பயிற்சி முகாமுக்கு சென்றிருந்தபோது தான் கோவிந்தனின் தொடர்பு கிடைத்தது. கோவிந்தனின் குலம் வேறு. பலத்த குடும்ப எதிர்ப்புகளிடையே இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கோவிந்தன் சுதாவிடம் எவ்வளவு அன்பு வைத்தாரோ அந்த அளவு கோபமும் படுவார். கோபத்தில் கன்னா பின்னாவென்று சுதாவை திட்டுவார். மனைவியை அவர் ஒருபோதும் கை நீட்டி அடித்ததில்லை. ஆனாலும் அவரது குழந்தைகள் அனைவருக்கும் அவரது திட்டும் அடியும் நிறைய கிடைத்தது.
யாரிடம் பேசினாலும் அன்புடன் கனிவுடன் பேசுவது சுதாவின் சிறந்த குணம். அவருடைய பெரிய பெண் ராகினியும் அம்மாவின் இந்த சிறப்பு குணாதிசயங்கள் அமைய பெற்றாள். ஆனால் சின்ன மகள் ஹேமா அவளது அப்பாவின் துடுக்குத்தனம் மற்றும் முன் கோபத்தையும் கொண்டிருந்தாள்.
சரி, இப்போது மீண்டும் டெல்லிக்கு வருவோம். அங்கே மணவாளனுக்கும் கோவிந்தனுக்கு பேச்சு வார்த்தை இல்லை என்றே சொல்லலாம். ஒருவரை ஒருவருக்கு பிடிக்கவே பிடிக்காது. சொல்லி வாய்த்த மாதிரி வனிதா அவள் அப்பாவிற்கும் மாமனாருக்கும் உபசரிப்பில் கொஞ்சம் பாகுபாடுகள் காட்ட ஆரம்பித்தாள். ஓரிரண்டு முறை கோவிந்தன் இதை மகன் ராகவனுக்கு சூக்ஷ்மமாக முறையிட்டார். ஆனால் அதனால் வித்தியாசம் ஒன்றும் ஏற்படவில்லை.

ஒரு நாள் கோபப்பட்டு கோவிந்தன் ராகவனிடம் " நான் இங்கு இருக்க விரும்பவில்லை.சென்னையில் எதாவது முதியோர்கள் இல்லத்தில் சென்று தங்குகிறேன். எனக்கு கிடைக்கும் பென்ஷன் தொகையை வைத்துக்கொண்டு நான் என் செலவுகளை பார்த்துக்கொள்கிறேன்" என்று சொன்னார். ராகவன் " அப்பா 84 வயதில் நீங்கள் தனியே சென்று இருப்பது உகந்ததல்ல. இங்கேயே இருங்கள்" என்று சொன்னது செவிடன் காதில் ஊதிய சங்கை போன்றது. வேறு வழி இல்லாமல் ராகவன் அப்பாவை விமானம் மூலமாக சென்னைக்கு கூட்டி சென்று ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தான்.

மணவாளன் மாப்பிள்ளை ராகவன் வீட்டில் இரண்டு வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறார். ஒரு கணிசமான தொகையை மாப்பிள்ளைக்கு கொடுத்து விட்டு மகளின் வீட்டிற்கு ஒன்றி கட்டையாக வந்து சேர்ந்தார். அவர் படுக்கும் கட்டில் இருந்த இடம் பூசை அறை. மணவாளனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. பொதுவாக , புகை பிடிக்க அவர் வீட்டிற்கு வெளியே சென்று விடுவார். ஆனாலும் இரவில் தூங்கிய பின்னர் இடையில் தூக்கம் கலையும் போது அவர் ஒரு முறை அந்த அறையிலேயே புகை பிடிப்பார். இது நித்தமும் கிடையாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். இதை அவர் மகள் வனிதாவும் மருமகன் ராகவனும் அறிவார்கள். எப்போதாவது ஒரு முறை என்பதால் அவர்களும் இதை அதிகம் பொருட்படுத்தவில்லை.

ஒரு முறை பண விஷயமாக மாமனாருக்கும் மருமகனுக்கும் கருத்து வேறுபாடு வந்தது. இந்த நேரத்தில் ஒரு நாள் திடீரென ராகவன் " மாமா, பூசை அறையில் நீங்கள் புகைப்பது மிகவும் தவறான செயல். எனவே உங்கள் கட்டிலை வெளிப்புறம் உள்ள அறையில் போட்டுக் கொள்ளுங்கள்" என்றதும் மணவாளன் திகைத்து போனார். " ராகவன், கடந்த இரண்டு ஆண்டுகள் இப்படித்தானே நடந்து வருகிறது. வாரத்தில் மூன்று நான்கு முறை மட்டும் தானே நான் இங்கு புகை பிடிக்கிறேன், அதுவும் இரவில் மட்டுமே. இப்போது திடீரென ஏன் இடத்தை மாற்ற வேண்டும்." என ஆதங்கத்துடன் கூறியபோது ராகவன் " தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கக் கூடாது. பூசை அறையில் ஊதுபத்தி மட்டுமே புகையலாம். புகையிலை இல்லை."

மன வருத்தத்துடன் மணவாளன் இடத்தை மாற்றிக் கொண்டு வேறு அறைக்கு குடி பெயர்ந்தார். வேறு அறையில் காற்றோட்டமும் வெளிச்சமும் நன்றாகவே இருந்தது. இருப்பினும் பழக்கப்பட்ட பூசை அறையை விட்டு வெளியே கொண்டுவரப்பட்டதை அவர் அவமானமாக நினைத்தார். அதன் காரணமாக மாமனார் மருமகன் உறவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இருவருக்கும் பேச்சு வார்த்தை கணிசமாக குறைந்துவிட்டது. வனிதா அவள் அப்பாவிடம் பாசம் வைத்துள்ளதால் மணவாளன் இன்னமும் அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார். அன்று இரவு அவருக்கு ரொம்ப நேரம் தூக்கமே வரவில்லை. பின்னர் தன்னை அறியாமல் அவர் கண்களை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தார். அடுத்த ஐந்து நிமிடங்களில் கீழ்வரும் சம்பவங்கள் அனைத்தும் அவர் கனவில் ஒன்றன் பின் ஒன்றாக வர தொடங்கின:

"பதினைந்து வருடங்களுக்கு முன் அவர் மனைவி சர்க்கரை வியாதியால் உயிர் இழந்தாள். அவளுக்கென்று மணவாளன் நிறைய நேரமும் பணமும் செலவு செய்தார். அதிர்ஷ்டவசமாக அவருடைய பழைய நிர்வாகத்தின் மருத்துவ உதவியும் அவருக்கு கிடைத்ததால், மனைவியின் 90 % மருத்துவ செலவுகள் நிர்வாகத்தால் மீட்கப்பட்டது. இருப்பினும் மணவாளனுக்கு இதனால் மனஉளைச்சல் இருந்தது. அவருக்கும் சர்க்கரை வியாதி இருந்தது. அவர்களுக்கு இரு பெண்கள் . மணவாளன் எவ்வளவோ அலைந்து ஜாதகங்கள் பார்த்து தன் மகள் வனிதாவுக்கு ராகவனை திருமணம் செய்து வைத்தார். திருமணம் ஆகையில் ராகவன் பெரிய ஒரு நிர்வாகத்தில் நல்ல பதவியில் இருந்து நல்ல சம்பளமும் பெற்று வந்தான். கல்யாணத்திற்கு பின் ராகவன் வனிதா தம்பதியினர் டெல்லிக்கு குடிபோனார்கள். டெல்லியில் ராகவன் நல்ல ஒரு உத்தியோகத்தில் கைநிறைய சம்பளம் கிடைத்து அவர்கள் வாழ்க்கை நன்றாகவே நடந்துகொண்டிருந்தது. வேலை விஷயமாக ராகவன் பல வெளி நாடுகளுக்கு சென்று வந்தான். அவனும் வனிதாவும் செலவு செய்வதில் வல்லுநர்கள். எதற்கெடுத்தாலும் தாம் தூம் என்று பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள்.

இப்படி இருக்கையில் ராகவனின் பெற்றோர்கள் பதவி ஓய்வு பெற்ற பின் ராகவனுடன் வந்து தங்க துவங்கினார்கள். ராகவனுக்கு இரண்டு தங்கைகள். பெரிய தங்கை கல்யாணமாகி பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டாள். சின்ன தங்கை ஹேமாவின் திருமண வாழ்க்கை சொல்லும்படியாக அமையவில்லை. சின்ன மாப்பிள்ளை மாதவன் ஒரு விஞ்ஞான கோச்சிங் வகுப்பை தனியாக அவரது சொந்த கட்டிடத்தில் நடத்துவதாக சொன்னதை நம்பி, ஹேமாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன் பிறகு தான் சின்ன மாப்பிள்ளை அந்த கோச்சிங் சென்டரில் ஒரு ஆசிரியர் மட்டுமே , அதன் சொந்தக்காரர் வேறு ஒருவர் என்பது தெரிய வந்தது. அவர்கள் திருமணமாகி இரண்டு வருடங்களுக்குள் அந்த கோச்சிங் சென்டரும் மூடப்பட்டது. அந்த இடத்தில ஒரு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கடை வந்துவிட்டது. அதன் பிறகு மாதவன் ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பத்தாவது வகுப்பு மாணவர்களுக்கு விஞ்ஞானம் சொல்லிக்கொடுத்தார். ஆனால் அவருக்கு பள்ளி நிர்வாகத்தினர் சரியான ஊதியம் கொடுக்கவில்லை. அவரை போன்ற பல ஆசிரியர்களுக்கும் இதே கதி தான். பின்னர் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அந்த பள்ளி நிர்வாகத்தின் மேல் வழக்கு தொடர்ந்தனர். இதனால் மாதவன் வேலையை இழந்தார். கொஞ்ச நாட்களுக்கு வீட்டில் சில பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விஞ்ஞானம் சொல்லி கொடுத்து வந்தார். மனைவி வேலைக்கு செல்லவில்லை என்பதால் அவர்களது பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளை வேறு அவர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த குடும்பம் பலவருடங்களுக்கு மிகவும் அல்லல் பட்டுக்கொண்டிருந்தது.

கோவிந்தனின் பெரிய மாப்பிள்ளை கிருஷ்ணன், ஒரு பொதுத்துறை அரசாங்க நிர்வாகத்தில் ஒரு அதிகாரியாக பணி ஆற்றி வந்தார். அவர்களுக்கும் இரண்டு பிள்ளைகள். ஆனாலும் இந்த தம்பதிகள் மிகவும் நல்ல முறையில் குடும்பத்தை நடத்தி சென்றார்கள். பெரிய தங்கை ராகினி வேலைக்கு போகாவிட்டாலும் பணப்பிரச்சினை இன்றி இக்குடும்பம் வாழ்ந்து வந்தது. ராகவன் வனிதா, ஹேமா அவளின் குடும்பம், ராகவனின் பெற்றோர்கள் அனைவரும் ராகினி வீட்டில்தான் சந்தித்து கொள்வார்கள். ராகினி அனைவரையும் அரவணைத்து கொண்டு அவளால் முடிந்த அனைத்து உதவிகளையும் அனைவருக்கும் செய்து வந்தாள்.

இப்போது மீண்டும் டெல்லியில் ராகவன் குடும்பத்திற்கு வருவோம். வேலையில் அவ்வளளவு திறமையும் சாதுர்யமும் கொண்ட ராகவனின் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழ தொடங்கின. அவன் மனைவி வனிதாவின் தூண்டுதலால் பக்கத்து வீட்டில் இருக்கும் மதன் லால் என்பவரின் குடும்பத்துடன் நட்பு வைக்க தொடங்கினான். மதன் லால் மனைவி சாந்தினி. வனிதாவும் சாந்தினியும் மிகவும் நெருக்கமான தோழிகள். மதன் லால் ஒரு சின்ன இரும்பு பொருட்கள் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்திக்கொண்டிருந்தார். அவரது பொருட்கள் சந்தையில் நன்கு விற்கப்பட்டது. லாபமும் நன்றாக இருந்தது. அந்நேரத்தில் மதன் லால், தன் தொழிற்சாலையில் அதன் அனைத்து நிர்வாகத்தையும் செய்தால் ராகவனுக்கு நல்ல சம்பளமும் லாபத்தில் ஒரு பங்கும் கொடுப்பதாகவும் சொல்ல, வனிதாவும் அதை அங்கீகரிக்க , ராகவனும் அவனது நல்ல வேலையை ராஜினாமா செய்து விட்டு மதன் லால் தொழிற்சாலையில் சேர்ந்து பணி புரிய தொடங்கினான். முதன் வருடம் மதன் லால் அவனுக்கு நல்ல சம்பளம் கொடுத்தார். ஆனால் பெரிய லாபத்தில் மிகவும் சிறிய பங்கை மட்டுமே ராகவனுக்கு கொடுத்தார். இதனால் ராகவனுக்கு கொஞ்சம் மனம் புண்பட்டது. இருப்பினும் அவன் அவரது தொழிற்சாலையில் பணியை தொடர்ந்தான். அவன் வேலை செய்யும் முறைகளை மதன் லால் வெகுவாக விரும்பினார்.

ஒரு நாள் மதன் லால் ராகவனனையும் வனிதாவையும் வீட்டிற்கு அழைத்து ஒரு விருந்து கொடுத்தார். அந்நேரத்தில் மதன் லால் தன் தொழிலை இன்னும் அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதால் அவருக்கு 50 லட்சம் ரூபாய் கூடுதல் முதலீடு தேவை படுகிறது என்றும், ராகவன் அந்த பணத்தை அவர் தொழிற்சாலையில் முதலீடு செய்தால் அவனுக்கு சம்பளத்தை தவிர 20 % மொத்த லாபத்தில் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் சொன்னதன் பேரில், வனிதாவும் ராகவனை இதற்கு ஒப்புக்கொள்ள சொன்னதன் பேரில்,ராகவன் அவனது சொந்த வீட்டை அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாய் வங்கி கடன் வாங்கி கொடுத்தான்.

ஆறுமாதங்களுக்கு பிறகு மதன் லாலுக்கு வேறு கடன்கள் இருப்பது தெரிய வந்தது. ராகவனிடம் பெட்ரா ஐம்பது லட்சம் ரூபாயில் முப்பது லட்சம் வரைக்கும் மதன் லால் அவருடைய சொந்த கணக்கில் போட்டது ராகவனுக்கு அப்போது தான் தெரிய வந்தது . மதன் லாலுக்கு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் கடன்கள் இருந்தது ராகவனுக்கு தெரிய வந்தது. தவிர மதன் லால் தொழிற்சாலையில் செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை, வேறு உயர்தர பொருட்கள் சந்தையில் வந்ததால், குறைய தொடங்கியது. இதன் விளைவு மிகவும் மோசமாகி விட்டது. இதை தவிர மதன் லால் சூதாட்டம் ஆடுபவர் என்கிற அதிர்ச்சியான செய்தியும் பின்னர் தான் ராகவனுக்கு வனிதாவிற்கும் தெரிய வந்தது. ராகவனின் மாத சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டது. அவனுடைய வேலை பளுவும் அதிகமாகியது. அந்த வருடத்தில் வந்த குறைந்த லாபத்தில் 5 % தான் ராகவனுக்கு கொடுக்கப்பட்டது. இதனிடையில் ராகவன் வாங்கிய 50 லட்ச ரூபாய் கடனுக்கு மதன் லால் மாத மாதம் கொடுக்க வேண்டிய தொகையை குறைத்து கொண்டுவிட்டார். இதனால் வங்கி கடனுக்கு மாத மாதம் செலுத்தவேண்டிய தவணை பணத்தில் பாதிக்கு மேலாக ராகவன் போடவேண்டியதாகிவிட்டது. எதிர்பாராத இந்த மாற்றங்களால் ராகவன் வனிதா தம்பதியினர் பொருளாதார இன்னல்களை சந்திக்க ஆரம்பித்தனர். மதன் லாலுக்கும் ராகவனுக்கும் மனக்கசப்பு அதிகமாகி ராகவன் அவருடைய தொழிற்சாலைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டான். தான் முதலீடு செய்த 50 லட்சத்தை உடனடியாக திருப்பி கொடுக்கும்படி மதன் லாலுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்தான். அதே நேரத்தில் மதன் லால் அவருடைய தொழிற்சாலையை சரியான முறையில் பராமரிக்க முடியாமல் திண்டாடினார். ராகவனுக்கு பதில் வேறு யாரையும் வேலைக்கு அவர் வைக்கவில்லை, பணப்பற்றாக்குறை காரணமாக. வேறு சில தொழிலாளர்களும் அவரிடமிருந்து விலகினர். மதன் லாலுக்கு தொழிலில் வருமானம் வெகுவாக வீழ்ச்சி அடைந்ததால் அவர் ராகவனிடம் வாங்கிய கடன் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் ராகவன் வெகுண்டு எழுந்தான். அவனுக்கு என்று வருவாய் எதுவும் இல்லாமல் அவதி பட்டான். அதே நேரத்தில் வங்கி கடனையும் அடைக்கவேண்டும் என்கிற ஒரு கடுமையான சூழ்நிலை. அவன் வேறு சில கம்பெனிகளுக்கு வேலைக்கு விண்ணப்பித்தான். சில கம்பெனிகளில் நேர்முக தேர்வுக்கும் சென்று வந்தான். ஆனால் என்ன காரணத்தினாலோ, திறமை அனுபவம் இருந்தும், வேலை எதுவும் அவனுக்கு கிடைக்கவில்லை. வேலை எதாவது கிடைத்தால் மிகவும் குறைந்த சம்பளமாக இருந்தது. கல்வியில் வெற்றி, திறமையில் வெற்றி ஆனால் வாழ்க்கையில் தோல்வி என்பது போல் அமைந்தது ராகவனின் நாட்கள்.

ராகவனின் வேறு சில நெருங்கிய நண்பர்கள் சிலர் அவனுக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்தனர். பெங்களூரில் உள்ள பெரிய மாப்பிள்ளை கிருஷ்ணன் , ராகினி சொன்னதின் பேரில், அவ்வப்போது தன்னாலான பொருள் உதவிகளை ராகவனுக்கு செய்தார். ராகவன் அவன் நண்பர்கள் சிலருடன் சில வியாபாரங்கள் செய்ய ஆரம்பித்தான். அவனே கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியாத நிலையில் அவன் வேறு கம்பெனிகளுக்கும் நபர்களுக்கும் பேங்க் மற்றும் பேங்க் அல்லாத பணம் கொடுக்கும் நிறுவனங்களிலிருந்து கடன் வாங்கி கொடுக்க ஒரு தரகர் போல வேலை செய்தான். ஒரு சிலருக்கு கடன் வாங்கி கொடுத்தான். அவர்களிடம் கமிஷன் பெற்று கொண்டான். கடன் கொடுத்த வங்கிகளும் ஒரு தொகையை ராகவனுக்கு கொடுத்தன. இதைத்தவிர ராகவன் வேறு சில வியாபாரங்களும் செய்ய துவங்கினான். அவன் MBA படித்ததன் பயனை அப்போது ஓரளவுக்கு உபயோக படுத்த துவங்கினான். பிறர்க்கு முதலீடு செய்வதில் ஆலோசனை கொடுத்து அதன் மூலம் கொஞ்சம் வருவாய் பெற்றான். அதுல் என்கிற அவனுடைய சார்ட்டட் அக்கௌன்டன்ட் நண்பனுக்கு சில அலுவலக வேலைகள் செய்து கொடுத்து அதுலிடமிருந்து மாதம் கொஞ்சம் தொகை பெற்று கொண்டான். அந்நேரத்தில் ராகவனுக்கு, திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மாதாந்திர பென்ஷன் கிடைத்ததால் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொள்வதில் ராகவனுக்கு பிரச்சினை வரவில்லை.

இதற்கிடையில் சின்ன மாப்பிள்ளை மாதவனுக்கு உடம்புக்கு முடியாமல் போனது. அதனால் டியூஷன் சொல்லிக்கொடுப்பதையும் நிறுத்தி கொண்டார். மாதவனின் அம்மா அப்பாவிற்கு ஊரில் சொந்த வீடும் நிலமும் இருந்ததால் அவர்கள் மாதாமாதம் மாதவனுக்கு 10000 ரூபாய் அனுப்பி வந்தார்கள். இதை வைத்துக்கொண்டு தான் மாதவன் அவர் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவருக்கும் உடம்புக்கு வந்தவுடன் மருத்துவ செலவு அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு கொஞ்ச நாட்களில் அவரது பெற்றோர்கள் நோய் வாய்ப்பட்டு காலமானார்கள். சின்ன மாப்பிள்ளையின் அப்பா அவருக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சொத்துக்களை உயிலில் எழுதி வைத்திருந்தார். இதே போன்ற தொகைகளை அவரது மீதி மூன்று மகன்களுக்கும் எழுதி வைத்திருந்தார். சின்ன மாப்பிள்ளைக்கு பணமாக 10 லட்சம் ரூபாய் கிடைத்தது. மீதி ஐந்து லட்சம் மதிப்புள்ள ஒரு கடையிலிருந்து மாதம் 5000 ரூபாய் வாடகை கிடைத்தது. பத்து லட்ச ரூபாயை மாதவன் வங்கியில் fixed டெபாசிட் அக்கோவுன்டில் போட்டார். அதன் மூலம் 7000 ரூபாய் வட்டியாக மாதந்தோறும் கிடைத்தது. இதற்கிடையில் அவரது மனைவிக்கு மன அழுத்த நோய் வந்துவிட்டது. இருவருக்கும் மருத்துவ செலவு அதிகரிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடத்தில் உள்ள நகைகளை அடகு வைத்து பணம் வாங்கினார்கள். பிள்ளைகள் வளர்ந்து உயர்நிலை பள்ளியில் படிக்கையில் சில நகைகளை விற்றுவிட்டார்கள். சின்ன மாப்பிள்ளை எப்போதோ வாங்கி போட்டிருந்த நிலத்தையும் 15 லட்சம் ரூபாய்க்கு விற்றார்கள். எப்படியோ ஒரு வழியாக
காலத்தை தள்ளி வந்தார்கள். பெரிய மகன் BE படிக்க கல்லூரியில் சேர்ந்தான். சின்ன மகள் 10 வது வகுப்பில் சேர்ந்தாள். இந்நேரத்திலிருந்து சின்ன மாப்பிள்ளைக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க துவங்கின. ஏற்கெனவே ஹேமாவுக்கு, தன் கணவன் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி கொண்டார் என்கிற மனக்கசப்பு அதிகம் இருந்தது. இதை தவிர அவளது மாமியார் உயிருடன் இருந்தபோது மருமகளை சரியாக நடத்தவில்லை என்பதாலும் கணவரின் குடும்பத்தின் மீதே அவளுக்கு ஒரு வெறுப்பு வந்து விட்டது.

அங்கே, டெல்லியில் ராகவன் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருந்தான். இதற்கிடையில் அவன் அம்மாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் அவர் காலமானார். வனிதா தன்னை மதிக்கவில்லை, சரியாக நடத்தவில்லை ,சில நேரங்களில் அவதூறாகவும் பேசியதை ராகவனின் அம்மா, தன் மகனுக்குக்கூட தெரிவிக்காமல் , பெங்களூரில் உள்ள அவளது பெரிய மகளுக்கு மட்டும் அவ்வப்போது போனில் தெரியப்படுத்தி வந்தார். மனைவியை இழந்து ராகவனின் அப்பா மிகவும் ஒடிந்து போனார். அவருக்கு இரத்த அழுத்த நோய் , சர்க்கரை வியாதி இருந்த போதிலும் எண்ணெயில் சர்க்கரையில் செய்த பண்டங்கள் மிகவும் விருப்பம். ஆனால் மருமகள் இந்த விஷயத்தில் மிகவும் கறாராக இருந்தாள். தினமும் சப்பாத்தியை தான் மாமனாருக்கு கொடுப்பாள். இனிப்பு செய்தாலும் மிகவும் குறைவாகத்தான் மாமனாருக்கு கொடுப்பாள். அப்படிப்பட்ட நேரத்தில்தான் அவளது அப்பா மணவாளன் மனைவியை பறிகொடுத்து விட்டு வனிதாவிடம் வந்து தஞ்சம் அடைந்தார். மனைவி பிரிந்த பின், அவரது சின்ன மகளது வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்கினார். ஆனால் கவனிப்பு சரி இல்லை என்று பெரிய மகள் வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கே மருமகனின் அப்பாவும் இருந்ததால் மணவாளனுக்கு முதலில் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஏனெனில் அவருக்கும் ராகவனின் அப்பாவுக்கும் எப்போதும் ஒத்துக்கொள்ளாது. மணவாளனுக்கு ரொம்ப தலை கனம், அவர் திமிர் பிடித்தவர் என்பார் ராகவனின் அப்பா. ராகவனின் அப்பா இங்கீதம் பண்பாடு தெரியாத காட்டுமிராண்டி என்று மணவாளன் அவரை சாடுவார்.
மருமகளுடன் மனஸ்தாபம் , ராகவனின் அப்பாவை அவர் மகன் வீட்டிலிருந்தே பிரித்தது. கொஞ்ச நாட்கள் அவர் பெரிய மகள் வீட்டிலும் கொஞ்ச நாட்கள் சின்ன மகள் வீட்டிலும் இருந்து பார்த்தார். பின்னர் மதுரையில் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட்டார். பென்ஷன் பணம் 12000 இல் 6000 ரூபாய் மாதாமாதம் அங்கே கொடுத்ததில் அவருக்கு இருக்க இடமும் மூன்று வேளை உணவும் கிடைத்தது. மீதி பணத்தில் அவரது மருந்துகள் வாங்குவது போக கொஞ்சம் தொகையை சின்ன மகளுக்கு கொடுத்து வந்தார். அவருக்கு ரோசம் அதிகம், யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்கள் முகத்திலேயே அடித்தது போல் சொல்லிவிடுவார். இவருடைய இந்த கோபம் மணவாளனுக்கு அறவே பிடிக்காது . இதையெல்லாம் கோவிந்தன் மனைவி சுதா இருந்தபோது, அவரது மலை போன்ற பொறுமை குணத்தால் தாங்கிக்கொண்டு இருந்தார். அவள் போன பிறகு அவரால் யாரையும் கடிந்து கொள்ள முடியவில்லை. அதுவும் அவருக்கு ஒரு குறையாகவே இருந்தது. மனைவி போன பின் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் திண்டாடிய வண்ணம் வாழ்ந்தார். கடைசி காலத்தில் முதியோர்கள் இல்லத்தில் சேர்ந்து ஆறு மாதத்திற்குள் மாரடைப்பு வந்து, ஆஸ்பத்திரியில் சேர்ந்து, சிகிச்சை பெற்று மீண்டும் முதியோர் இல்லம் வந்தார். அந்த நேரத்தில் பெரிய மாப்பிள்ளை கிருஷ்ணன் , தேவையான பணஉதவி செய்தார். ஆஸ்பத்திரியில் சேர்ந்தபோது ராகவன் வந்து அவருடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டான். அவர் குணமாகியவுடன் அவரை முதியோர்கள் இல்லத்தில் மீண்டும் விட்டு விட்டு அடுத்த நாள் மாலை மீண்டும் டெல்லி செல்ல திட்டமிட்டான். அன்று இரவு அப்பாவும் மகனும் பல பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்தனர். ராகவன் அவன் அப்பாவை மீண்டும் டெல்லி கூட்டி செல்வதாக வாக்களித்தான். அதற்கு அவன் அப்பா " நான் சிறிது நாட்கள் முதியோர்கள் இல்லத்தில் இருந்து விட்டு பின்னர் நிச்சயமாக டெல்லிக்கு வருகிறேன்" என்று சொன்னார். அன்று இரவு , அப்பாவுக்கு பூரி பிடிக்கும் என்று ராகவன் அருகில் உள்ள ஹோட்டலில் பூரி மசாலா வாங்கி அப்பாவுக்கு கொடுத்து தானும் சாப்பிட்டான். இருவரும் இரவு முழுவது பழைய கதைகளை பேசிக்கொண்டே இருந்தனர். இருவரும் இரண்டு மணி நேரம்தான் தூங்கி இருப்பார்கள். விடிகாலையில் எழுந்து குளித்து விடும் பழக்கமுள்ள கோவிந்தன் அன்று, குளிக்க மனமில்லை என்று சொல்லிவிட்டார். கொஞ்ச நேரம் மீண்டும் படுத்து எழுகிறேன் என்று ராகவனிடம் சொல்லிவிட்டு, அவன் மடியிலியேயே கொஞ்சம் தூங்கினார். கொஞ்ச நேரத்தில் " ராகவா, ராகவா " என்று முனகியபோது ராகவன் " என்னப்பா வேண்டும், என்னப்பா வேண்டும் என்று அவர் தலையை தடவிய வண்ணம் கேட்டபோது அவர் "ராகவா ராகவா" என்று வாய் குழறியபடி அவன் மடியிலேயே காலமானார்.

ராகவனின் பெரிய மாப்பிள்ளை கிருஷ்ணன் பதவி ஓய்வு பெற்றார். மனைவி ராகினியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர்களது பெரிய மகன் நன்கு படித்து விட்டு பெரிய MNC கம்பெனியில் வேலை செய்து வருகிறான். சின்ன மகன் பொறியியல் படிப்பை இடையில் விட்டுவிட்டு கிட்டார் வாசிக்க கற்றுக்கொண்டு சில வருடங்கள் வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம் என்று தத்தளித்து விட்டு பின்னர் ஒரு வழியாக ஒரு இசை குழுவில் கிட்டார் வாசிப்பவனாக சேர்ந்தான். தற்போது இந்த இசை குழு
டெல்லியில் பெயர் பெற்ற இசை குழுக்களில் ஒன்று. இரு மகன்களும் வாழ்க்கையில் கொள்கைகள் உடையவர்கள். இருவருமே வார்த்தைகளை அளந்து தான் பேசுவார்கள்.

ராகவனுக்கு அவன் தந்தை ஒரு முதியோர் இல்லத்தில் காலமானார் என்பது மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. எற்கெனெனவே பணப்பிரச்சினைகள் பல அவனுக்கு. இப்போது அவன் மாமனாரும் அவன் வீட்டில் இருக்கிறார், அவரை வனிதா நன்றாக நடத்துகிறாள் என்பது அவன் மனதில் கோபத்தை விளைவித்தது. வனிதாவின் பாரபட்சம் தான் தன் தந்தையை தன்னிடமிருந்து பிரித்து என்று அவன் மனம் சொல்லியது. இதன் எதிரொலி தான் அவன் மாமனாரை பூஜை அறையிலிருந்து வேறு அறைக்கு மாற்றியது மற்றும் வனிதாவின் மீது அடிக்கடி கோபப்படுவது. ஆனால் வனிதா எதற்கும் கவலை படாதவள். யார் என்ன சொன்னாலும் திட்டினாலும் அதை உடலில் தூசு தட்டிவிடுவது போல் அசட்டை செய்து விட்டுவிடுவாள். தான் நினைத்ததை தான் செய்யவேண்டும் என்கிற ஒரு மனப்பான்மை அவளிடம் அதிகம் இருந்தது.

இதற்கிடையில் ராகவனின் தங்கை அவளது கணவருக்கும் இடையில் வேறுபாடுகள் அதிகரிக்க துவங்கின. ராகவனின் தங்கைக்கு அவளது அக்கா ராகினி தான் ஒரு நம்பிக்கை தரும் ஊற்றுபோல. தவிர அவளது அனைத்து சொந்த பிரச்சினைகளையும் அவள் ராகினியுடன் தான் பகிர்ந்து கொள்வாள். இப்படி இருக்கையில் டாக்டர் சொன்னதன் பேரில் இருவரும் குடும்ப கவுன்சிலிங் செல்ல ஆரம்பித்தனர். ஓராண்டு கழித்து அவள் கவுன்சிலிங் டாக்டரிடம் தான் கணவரை விட்டு பிரிந்து தனியாக இருக்க விருப்பப்படுவதாக தெரிவித்தாள். கவுன்சிலிங் செய்த டாக்டர் இருவரையும் இணைத்து வைக்க முயன்றார். அவளது கணவர் பிரிந்து செல்வதை பற்றி எப்போதும் பேசியதில்லை. ஆனால் அவரது நடவடிக்கைகள் , குடும்பத்தில் அக்கறை காண்பிக்காமல் இருந்த வெளிநோக்கு அவர் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பிடிக்க வில்லை. அவள் ராகினியிடம் தனக்கு நிச்சயம் அவள் கணவரிடமிருந்து பிரிந்து தான் வாழ வேண்டும் என்றும் ,ஆனால் அண்ணன் ராகவன் அதற்கு தடையாக இருப்பதாகவும் தெரிவித்தாள். அதன் பின்னர் வனிதா அண்ணன் ராகவனிடம் பல முறை பேசியபின் அவனும், தங்கை கணவரை பிரிந்து தனியாக வாழ ஒப்புக்கொண்டான். இதற்கிடையில் கவுன்சிலிங் டாக்டர் கொடுத்த கெடு முடிந்தது. அதன் பின் டாக்டரே இருவரையும் அழைத்து அவர்களை பிரிந்து வாழ வேண்டுகோள் விடுத்தார். அதன் படி ராகவனின் தங்கை கணவர் அவருடைய ஊரான திருச்சிக்கு சென்று வாழவேண்டும், தங்கையும் பிள்ளைகளும் மதுரையிலேயே தங்க வேண்டும் என்றும் முடிவாகியது."
***********
மணவாளன் திடுக்கென்று தூக்கத்திலிருந்து விழித்து கொண்டு கண்ணை கசக்கி நேரத்தை பார்த்தார். காலை மணி 7 .30 ஆகியிருந்தது. அப்போது வரை அவர் கண்ட கனவின் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அவரது நாடகங்களின் காட்சிகளை போல் அவர் கண் முன் வந்தது. அவைகளை எண்ணத்தில் அசை போட்டபடி காலை கடன்களை செய்ய ஆரம்பித்தார். காபி குடித்துவிட்டு வெளியில் சென்று புகை பிடித்துவிட்டு அவரது தினசரி வழக்கங்களை தொடர்ந்தார். மணவாளனின் நெஞ்சில் ஏதோ கொஞ்சம் நெருடல் இருந்தவண்ணம் இருந்தது. சொல்லி வைத்தாற்போல அன்று மாலை ராகவனின் பெரிய மகள் ராகினியும் மருமகன் கிருஷ்ணனும் ராகவன் அப்பாவின் முதல் வருட காரியங்களுக்காக பெங்களூரிலிருந்து ராகவன் வீட்டிற்கு வந்தனர்.

கிருஷ்ணன் என்றால் மணவாளனுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரது பண்புகள் மற்றும் பிறர்க்கு உதவும் எண்ணம் மணவாளனுக்கு மிகவும் பிடிக்கும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் இருவரும் சந்தித்து கொள்வர் , ஏதாவது ஒரு சந்தர்பத்தில். அப்போதெல்லாம் மணவாளன் அவர் மனதில் உள்ள பல விஷயங்களை கிருஷ்ணனிடம் பரிமாறிக்கொள்வார். கிருஷ்ணனும் ராகினியும் ஒரு வாரத்திற்கு மேல் ராகவன் வீட்டில் தங்கியதால் மணவாளன் கிருஷ்ணனிடம் ஆறு தடவை விரிவாக பேசினார். அந்த முறை கிருஷ்ணன், மணவாளனிடம் இருந்த சில குறைகளை, அவர் செய்த சில தவறுகளை பண்புடன் எடுத்து கூறியபோது மணவாளன் அவற்றை எதிர் வார்த்தை ஒன்றுகூட சொல்லாமல் ஒப்புக்கொண்டு மனம் வருந்தினார். கிருஷ்ணன் அவரிடம் கூறிய விஷயங்கள் இவைகள் தான் :
1 . மணவாளனுக்கு தான் என்கிற எண்ணம் மிகவும் அதிகமாக இருந்தது. மற்றவர்கள் தன்னுடைய தகுதிக்கு குறைந்தவர்கள் என்கிற ஒரு கர்வம் அவருக்கு இருந்தது.
2 . அவர் நாடக எழுத்தாளராக இருந்து நாடகங்கள் நடத்தி வந்தபோது அவருடைய ஊரில் மட்டும் இல்லாமல் வேறு சில ஊர்களிலும் அவரது நாடகங்கள் வரவேற்கப்பட்டது. பல முறை அவரது நாடகங்கள் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றியும் பெற்றன. இதனால் மணவாளனுக்கு தான் மிகவும் பெரியவன், புகழ் வாய்ந்தவன் என்கிற அகந்தை வளர்ந்தது. அதனால் அவர் ராகவனின் அப்பாவையும் அம்மாவையும் மதிக்காமல் இருந்தார். அவர்களிடம் சரியாக முகம் கொடுத்து பேசவும் மாட்டார்.
3 . அவர் காதலித்து திருமணம் செய்த பத்மாவை அவர் மிகவும் விரும்பினாலும் அவளை வீட்டில் அடிக்கடி திட்டிக்கொண்டே இருப்பார். பத்மா இதை பற்றி வெளியே சொல்ல மாட்டாள். ஆனால் பெரிய பெண் வீணா இதனால் அப்பாவை அதிகம் நேசிக்கவில்லை. இத்தனைக்கு அவள் அம்மாவும் வேலைக்கு போய் சம்பாதித்து கொடுத்தாள்.

மேற்கூறிய அவரது போக்குகள் அக்கு அக்காக பிட்டு வைக்கப்பட்டபோது மணவாளன் அவைகளை மறுக்கமுடியாமல் மனம் வருந்தினார். " நான் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் தவறுதான்" என்று கிருஷ்ணனிடம் மனம் விட்டு கூறினார். " இதற்காக நான் வனிதாவிடமும் , ராகவனிடமும் உங்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்" என்றபோது, கிருஷ்ணன் " பரவாயில்லை, விடுங்கள். நடந்தது நடந்து விட்டது. இப்போதும் நேரம் கடந்துவிடவில்லை. இப்போது நீங்கள் கூறிய வார்த்தைகளை உங்கள் பெண்ணிடமும் மருமகனிடம் சொல்லிவிடுங்கள். அதன் பின் நிச்சயம் நல்ல மாற்றம் இருக்கும்" என்றான். மணவாளன் நேரத்தை வீணடிக்காமல் அன்று இரவே மகளிடம் மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தன்னுடைய அப்பா எப்படி இவ்வளவு மாறிவிட்டார் என வனிதா வியந்து போனாள். தன் மாமனாருக்கு எவராவது ஏதாவது மந்திரம் போட்டுவிட்டார்களா என்று ராகவன் ஆச்சரியம் அடைந்தான்.

இதற்கு பின் ராகவன் மாமனாரிடம் மீண்டும் பழையமாதிரி பழக ஆரம்பித்தான். அடுத்த ஒரு வாரத்தில் அவனுடைய வியாபார முயற்சிகள் இரண்டில் அவனுக்கு அதிருஷ்டம் அமைந்து அவனுக்கு கிட்டத்தட்ட ஒருகோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்தது. இந்த பணத்தை கொண்டு அவன் வங்கி கடனை முழுதுமாக அடைத்துவிட்டான். மற்ற இதர அவனது ஆலோசை பெற்ற சிலருக்கும் அவர்கள் நினைத்த வைத்ததில் வியாபாரம் ஆரம்பித்தது, சிலருக்கு வியாபாரம் இன்னும் வளர்ந்தது. இதனால் ராகவனுக்கு பணப்பிரச்சினை வெகுவாக குறைந்தது.

ஆனால் மதன் லால் மீது தொடர்ந்த கிரிமினல் வழக்கு மட்டும் ஐந்து வருடங்களுக்கு நீடித்தது. மதன் லால் திவாலாகி விட்டார் என்று நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவர் ராகவனுக்கு கொடுக்கவேண்டிய மீதி பணமான 40 லட்சத்தில் 10 லட்சம் ரூபாயை ராகவனுக்கு அவர் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதர நஷ்ட ஈட்டு செலவாக 25000 ரூபாயையும் மதன் லால் ராகவனுக்கு கொடுக்கவும் நீதிமன்றம் சிபாரிசு செய்தது. கிட்டத்தட்ட 30 லட்சம் இழந்துவிட்டோம் என ராகவனும் வனிதாவும் அழுது புலம்பினார். இருப்பினும் விதியின் இந்த சதியை அவர்கள் முடிவில் ஏற்றுக்கொண்டனர்.
இப்போது ஓரளவுக்கு ராகவனின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்ந்துவிட்டது. இதன் பின்னர் ராகவன் அவனுடைய பெரிய மாப்பிள்ளை கிருஷ்ணனுக்கு போன் செய்து தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டான். " கிருஷ்ணன், நீங்கள் எவ்வளவோ தடவை எனக்கு தகுந்த நேரத்தில் பண உதவியும், மன தைரியமும் தந்தீர்கள். இப்போது என் மாமனார் குணத்தையே மாற்றிவிட்டிர்கள். நான் உங்களுக்கும் என் தங்கை ராகினிக்கும் மிகவும் கடமை பட்டிருக்கிறேன்" என்று பாராட்டி நன்றி தெரிவித்தான்.
மதுரையில் ரகவனின் தங்கை இரண்டு வருடங்களுக்கு பின் தன் கணவரை கோர்ட் மூலம் விவாகரத்து செய்துவிட்டாள். அவளுடைய பெரிய மகன் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு கல்லூரி மூலமாக நல்ல வேலை ஒன்றில் சேர்ந்தான். மகள் +2 முடித்துவிட்டு பேஷன் டெக்னாலஜிஇல் டிப்ளமோ செய்து வருகிறாள். கணவர் மாதவன் கோர்ட் உத்தரவின் படி 15 லட்சம் ரூபாயை மனைவிக்கு கொடுத்தார்.

வனிதா அவளுடைய தோழிகள் சிலருடன் சேர்ந்து chain marketing ( சங்கிலி தொடர் விற்பனை) ஒன்றில் இறங்கி ஓரளவுக்கு பணமும் சம்பாதிக்க ஆரம்பித்தாள். மகள் உயர் நிலை பள்ளியில் படித்து வருகிறாள்.
மாணவாளனின் இரண்டாம் மகள் மஞ்சுளா சென்னையில் ஒரு சிறு புரட்சி செய்தாள். இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்பட்ட வடிவேலுவை பிரிந்து, தன் கல்லூரியில் பாடம் சொல்லித்தரும் ஒரு பேராசிரியரை அவருடைய முதல் மனைவி என்கிற முறையில் திருமணம் செய்துகொண்டாள். அவளுடைய பெண் உயர்நிலை பள்ளியில் படித்து வருகிறாள்.

ராகவன் மணவாளனை மீண்டும் பூஜை அறைக்கு மாற்றிவிட்டான். மணவாளன் ஒருவாரம் அந்த அறையில் தாங்கினார். ஆனால் ஒரு நாளும் அந்த அறையில் புகைக்கவில்லை. ஒரு வாரம் முடிந்தவுடன் ஒரு நாள் காலை அவர் ரகவானையும் வணிதாவையும் அழைத்தார் " மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நான் உங்களுடன் தங்கிவருகிறேன். நீங்கள் இருவரும் எனக்கு எவ்வளவோ உதவி செய்துள்ளீர்கள். 75 வயதை கடந்துவிட்ட நான் சில நாட்கள் தனிமையில் வாழ விரும்புகிறேன். சேலத்தில் உள்ள "மனிதாபிமானம்" முதியோர்கள் இல்லத்தில் வாழ அவர்களுக்கு நான் ஐந்து வருடத்திற்குரிய தொகையும் கொடுத்துவிட்டேன். நாளை நான் விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து சேலம் செல்வேன்." என்று கூறியபோது இருவருக்கும் நம்பவே முடியவில்லை. எங்களுடனேயே இருங்கள் என்று இருவரும் அவரிடம் கூறியது மணவாளன் காதில் விழவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (4-Apr-22, 9:14 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 221

மேலே