என்று தணியும்

" கடைய மூடுங்க....சாவு வருது...சாவு வருது..." என்று கூவிக்கொண்டு கையில் உருட்டு கட்டையை கையில் வைத்து கொண்டு...இப்படி...அப்படியுமாய் தள்ளாடிக்கொண்டு வத்தலாய்...தொத்தலாய் இரண்டு உருவங்கள் அந்த மார்கட்டையே உண்டு இல்லைனு பண்ணிக்கொண்டு போய் கொண்டிருந்தார்கள்.
எல்லா கடைக்காரர்களும் சத்தமில்லாமல் உள்ளுக்குள்ளேயே முனகிக்கொண்டு...காய்கறிகளை நகர்த்தி உள்ளே வைக்கத் தொடங்கினார்கள். போன அந்த இரண்டு பேர் உருட்டு கட்டையை கொண்டு அடித்ததில் காய்கறிகள் பாதையில் கொட்டி சிதறியது. "சொன்னா உடனே கேட்க மாட்டீங்க. கேட்கலைன்னா இந்த கதிதான். ஓரங்கட்டு... ஓரங்கட்டு...ஏய் ...கெழவி சொன்னது காதுல விழல...சீக்கிரம்...சீக்கிரம். பொணம் வந்திட்டிருக்கு. வழியவிடு..."
" அட பாவிங்களா நீங்க நல்லா இருப்பீர்களா? இத தட்டி கேட்க யாரும் இல்லையா?..." என்று சொல்லிக்கொண்டே சிதறிய காய்கறிகளை சேர்க்கத் தொடங்கினாள் அந்த மூதாட்டி. " ஏய்....கெழவி கம்முனு செய்யமாட்ட... என்ன கொரல் விட்டுகிட்டு இருக்க. இன்னும் ரெண்டு வெச்சனா தெரியும்." என்று மேலும் அடிக்க ஓங்கினார்கள்.
"ஏய் ...சேட்டு உனக்கென்ன தனியா சொல்லனுமா? சொல்லிகிட்டே இருக்கோம். என்ன மெதுவா சாத்திக்கிட்டு இருக்க?" என்று சொல்லியபடி உள்ளே தள்ளிக்கொண்டிருந்த கண்ணாடி 'ஷோ கேசை' கீழே தள்ளிவிட்டார்கள்.
அதில் வைத்திருந்த அத்தனை கண்ணாடி வளையல்களும் விழுந்து நொறுங்கின.... அந்த சேட்டு பயந்துபோய்...செய்வது அறியாது திகைத்து நின்று விட்டான். நஷ்டம் கொஞ்சமாகத்தான் இருக்கும்...சில ஆயிரங்களாவது...ஆனால் அந்த ஏழை சேட்டுக்கு அது அதிகம்தான்.
இந்த கடைசியிலிருந்து அந்த கடைசிவரை அவர்களது அட்டகாசம்...அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருந்தது.பத்து ...பதினைந்து நிமிஷம் கழித்து அந்த கடைசி ஊர்வலம் அந்த மார்கெட்டை கடந்தது... எண்ணி நாலுபேர்தான் அந்த ஊர்வலத்தில் வந்தது. என்னுள்ளே எழுந்த துன்பத்திற்கோ...கோபத்திற்கோ அளவில்லாமல் போய்விட்டது. என்னால் மட்டும் என்ன செய்ய முடிந்தது? நானும் ஒரு பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருக்க முடிந்ததே தவிர வேறஎதையும் புடுங்க முடியவில்லை.
அந்த ஊர்வலம் போனவுடன் ஒரு வயதான பாட்டி மஞ்சள் நீரை தெளித்து கொண்டு வந்தாள். மார்க்கெட் மறுபடியும் சகஜ நிலைக்குத் திரும்பியது. அவரவர்கள் அவரவர்களது வேலையை பார்க்கத் துவங்கிவிட்டார்கள். வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது. கொஞ்சநேரத்தில் அங்கு எதுவுமே நிகழாததுபோல் ஒரு நிலையை கண்டேன்.
ஆனால் என்னுள் எழுந்த அந்த நெருப்பு....அந்த கோபம்....தனியாவே இல்லை.இது நடந்து பல வருஷங்கள் போன பின்னும்... அந்த வடுவிலுருந்த சொட்டும் ரத்தமாய்....சீழாய்...இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த சீர்கெட்ட இந்த சமுதாயத்தை .....சீழ் பிடித்து ரணமான இந்த சமுதாயத்தை...நம்மால் மாற்றமுடியாததுதான்.....ஒன்றும் செய்ய முடியாதுதான்.ஆனால் என் உள்ள கிடக்கை பரிமாறிக்கொள்ளலாமல்லவா? எனக்கு என்ன புரியவில்லையென்றால்
இறப்பு என்றால்...ஒரு இழப்பு...ஒரு சோகம்...அது தனி மனிதனின் அல்லது தனி குடும்பத்தின் சோகமல்லவா? அது எப்படி சமுதாயத்தை பாதிப்புக்குள்ளாக்கும்? அந்த ஏழை கிழவிக்கும் அல்லது அந்த ஏழை சேட்டுக்கும் அந்த மரணம் எந்தவிதத்தில் சம்பந்தம் ஆகும்? எழுந்த நஷ்டத்தை...அது சிறியதோ இல்லை பெரியதோ யார் ஈடுசெய்வார்கள்? உனக்கு இழப்பென்றால் அது உன்னோடு...மற்றவர்களை சோகப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? நினைத்து....நினைத்து என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. யோசித்துப் பாருங்கள்.
சாவு என்பது ஈடு செய்யமுடியாத பெரு நஷ்டம்தான். எந்தவித மாற்றுக கருத்துமில்லை. அந்த சோகத்தை நயமாக பங்கிட்டால் மற்றவர்களும் அதில் பங்கேற்கலாம்.தப்பில்லை. போன உயிருக்கு நாம் செய்யும் கடைசி மரியாதை. பாதிக்க பட்டவர்களுக்கு மட்டுமில்லாமல் அந்த சோகத்தை பங்கிடுகிறோமோ இல்லையோ அந்த மரியாதை தர யாரும் மறுக்கப் போவதில்லை. ஆனால் அவர்கள் செய்த அந்த ஆர்ப்பாட்டத்தால் சோகமும் போனது...மரியாதையும் போனதுதான் மிச்சம். ஏ...சமுதாயமே சிந்தித்து பார். இது மனிதர்களால் மனிதர்களுக்கு வரும் ஒரு பாதிப்பு. இதற்கு முடிவுகட்ட மனிதர்களால்தான் முடியும். என்று தணியும் இந்த ரவுடிகளின் அட்டகாசம்? என்று மடியும் இந்த மடமையின் மோகம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (7-Apr-22, 9:17 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : enru thaniyum
பார்வை : 193

மேலே