இளைஞர்களே நன்கு யோசித்து செயல்படுங்கள்

அநுபவம் என்பது சாதாரண விஷயம் அல்ல. குறிப்பாக பட்டறிவு என்று சொல்லப்படும் நடைமுறை வாழ்க்கை அனுபவங்கள் ஒரு மனிதனை மனிதனாகவே அல்லது மிருகமாகவோ மாற்றவல்ல சக்தி படைத்தவை.
அறுபது வயதைக் கடந்திருந்தாலும், நான் எப்போதுமே 25 என்ற நினைப்பு எனக்கு இருப்பினும், என் வாழ்க்கை அனுபவங்கள் நிச்சயமாக 60 வருடங்கள் நிகழ்ந்தது என்ற உண்மையை மறுக்க முடியாது.
சிறு வயதில், அதாவது நான் 17-20 வயது உள்ள போது, நன்கு யோசித்து எடுக்காத முடிவுகள் அல்லது யோசிக்காமல் எடுத்த முடிவுகள் அல்லது பிறர் சொல்வதை, ஒரு கிளிப் பிள்ளை போல நிறைவேற்றியது போன்ற செயல்கள் என் வாழ்க்கை வளர்ச்சியை மிகவும் பாதித்த தருணங்கள் என்பதை இப்போது நான் மிகவும் உணர்வு பூர்வமாகவும் ஆதாரப் பூர்வமாகவும் தெளிவாக அறிந்து உணர்கிறேன்.
விஞ்ஞானம் எனக்கு ஏற்ற பாடம் அல்ல என்ற ஒன்றை மட்டும் அறிந்திருந்த நான், எனக்கு எது ஏற்ற பாடம் என்பதை பற்றி அப்போது கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை. எனக்கு ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று ஆர்வம் அப்போது அதிக அளவில் இருந்தது. அதைப் போலவே பூகோள பாடமும் எனக்கு பிடித்த பாடமாகும். இதையெல்லாம் விடுத்து, பொருளாதாரம், வணிகம், கணக்கு கொண்ட பிரிவு ஒன்றை, மற்றவர்கள் சொல்லக் கேட்டு தேர்ந்தெடுத்தேன். பின்னர் பட்டப்படிப்பு தேர்வு செய்கையில் எனக்கு என்று ஒரு சுய புத்தி இல்லாமல், என் நண்பர்கள், வீட்டில் சில பேர் சொன்னதை கேட்டு பி. காம் பட்டப் படிப்பை தேர்ந்தெடுத்தேன். படித்த கல்லூரியும் படிப்புக்கு பெயர் போன கல்லூரி அல்ல, ஆர்பாட்டங்கள், போராட்டங்களுக்கு பெயர் போன கல்லூரி. அங்கிருந்தே என் நேரம் வனப்பு இழக்க ஆரம்பித்தது. நான் மூன்று வருடங்கள் அந்த அரசாங்க கல்லூரியில் படித்ததை, என் வாழ்க்கையில் மிகவும் மோசமான துரதிர்ஷ்டவசமான நேரமாக இன்றும் நினைக்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக என்ற வார்த்தையை உபயோகப் படுத்தாமல் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, இந்த எதிர்மறை பதத்தை உபயோகித்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு அவ்வப்போது உந்தி தள்ளப் படுகிறேன்.
துரதிர்ஷ்டவசமாக, என் தந்தை, ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தும், எனக்கு எந்த வித பாடத்திட்டம் சரி வரும் என்று கொஞ்சமும் நினைத்து பார்த்தாரா என்று நான் சத்தியமாக சந்தேகிக்கிறேன். இப்படி பட்ட ஒரு சூழலில் நான் பத்தோடு பதினொன்று என்பது போல ஒரே பி. காம் பட்டத்தை பெற்றேன். இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் போது, icwai என்கிற தொழில்நுட்பம் சார்ந்த ஒரு உயர்நிலை படிப்பையும் துவங்கினேன். ஆயினும் அந்த படிப்பில் எனக்கு உண்மையான பிடிப்பு இல்லை என்பதால், அதில் உள்ள கணிதப் பாடம் எனக்கு அதிகம் பிடிபடாததால், அந்த படிப்பை இயந்திரமாக படித்தேன். அந்த படிப்பில் இடைநிலை படிப்பில் வெற்றியும் பெற்றேன். ஆனால் இந்த படிப்பின் இறுதி நிலை தேர்வில் நான் கஜனி முகமது போல் படை எடுத்து பல வருடங்கள் கழித்து தேர்வு பெற்றேன். ஏற்கனவே ஒரு வேலையில் இருந்ததால் இந்த படிப்பை எந்த ஒரு வித ஊக்கம் உற்சாகம் ஈடுபாடு இன்றி படித்தேன். இந்த உயர் நிலை படிப்பு எனக்கு நான் வேலை செய்து வந்த அரசாங்க கம்பெனியில் கணக்கு அதிகாரி பதவியை பெற்று கொடுத்தது அதன் பின்னர் நான் இரண்டு மூன்று முறை தனியார் கம்பெனிக்கு வேலைக்கு விண்ணப்பித்து நேர்முக தேர்வு களுக்கும் சென்று வந்தேன். ஆனால் அந்த கம்பெனிகளிலிருந்து என்ன வேலையில் அமர்த்த ஒரு கடிதமும் வரவில்லை. நான் உயர் படிப்பை மட்டுமே முடித்தேன் ஆனால் அதனால் தொழில்நுட்ப ரீதியாக உயரவில்லை என்பதை இந்த இரண்டு மூன்று நேர்முக தேர்வுகள் பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டின.
ஏதோ 35 வருடங்கள் ஒரே அரசாங்க கம்பெனியில் ஊழியம் செய்து விட்டு, செய்த அலுவலக காரியங்களில் உண்மை சந்தோஷம் திருப்தி இன்றி அறுபதை அடைந்தவுடன் மீண்டும் வேலைக்கு செல்ல தேவையில்லை என்ற அரிய மகிழ்ச்சி அடைந்தேன்.

இளைஞர்கள் எனக்கு ஏற்பட்ட மேற்கூறிய அனுபவங்களை போல் இல்லாமல் பார்த்து கொள்வது மிகவும் முக்கியமானது. பதவி ஓய்வு பெறுவதற்கு முன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நான் அலுவலகத்தில் எனக்கு கொடுக்க பட்ட வேலைகளைத் தவிர( அல்லது நானே தேர்வு செய்து கொண்ட சில வேலைகளை தவிர) மற்ற சில காரியங்கள் செய்வதில் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அடைந்தேன். உதாரணத்திற்கு, நான் ஓரளவு பாடுபவன் என்பதால் நிர்வாக விழாக்கள் பலவற்றில் கடவுள் வாழ்த்து பாடல்கள் நான் பாடி வந்தேன், அலுவலக பயிற்சி பள்ளியில் நான் ஒரு பயிற்சியாளராகவும்
இருந்து வந்தேன். இளைஞர்களை உற்சாகம் கொடுத்து ஊக்குவிப்பதில் எனக்கு நிறைய ஆர்வம் இருந்தபடியால். இது தவிர பல விதமான அலுவலக போட்டிகளில் நான் பங்குகொண்டேன். இரட்டை வரி வார்த்தைகள் அமைப்பது, கட்டுரைகள் எழுதுவது, கவிதை வடிப்பது போன்ற நேரடியான ஊழியம் சாராத விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டினேன். ஏதோ ஒரு வழியாக பதவி ஓய்வு பெற்றேன், அதனுடன் பதவி ஓய்வு சம்பந்தப்பட்ட ஈட்டு தொகைகளையும் பெற்றேன். பணப் பிரச்சினை இல்லாமல் வாழும் பாக்கியமும் பெற்றேன்.
ஆனால் மனதில் எப்போதும் நான் என் நிர்வாகத்திற்கு என் முழு திறமைக்கு ஏற்ப வேலைகள் செய்து கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் மற்றும் ஏமாற்றம் இன்னும் இருந்து கொண்டு தான் வாழ்ந்து வருகிறேன்.
இளைஞர்கள் இந்த விஷயங்களை கவனத்துடன் மனதில் கொண்டு அவரவருக்கு விருப்பமான துறைகளை தேர்வு செய்து படித்து, அதற்கு ஏற்ப அவரவர் careerஐ அமைத்துக் கொள்ளுமாறு இந்த பதிவின் மூலம் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் 30-40 ஆண்டுகள் நாம் செய்யப் போகும் பணி அல்லது தொழில் நமக்கு விருப்பமானதாக இருந்தால் தான் வாழ்வில் ஏதோ நாமும் செய்தோம் அல்லது சாதித்தோம் என்கிற நிறைவு இருக்கும்.
இப்போது மனம் திறந்து கூறுகிறேன். நான் ஒரு எழுத்தாளனாக அல்லது பாடகராக அல்லது நகைச்சுவை நடிகராக அல்லது ஒரு பாடலாசிரியராக இருந்திருந்தால் ஒரு வேளை தொழில் ரீதியான வெற்றி மற்றும் மகிழ்ச்சி பெற்றிருப்பேனோ என்னவோ!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (5-Apr-22, 11:46 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 160

மேலே