எவ்வுயிர்க்கும் இன்னருளைச் செய்தொழுகின் மண்ணில் அவன்வாரான் - இனிமை, தருமதீபிகை 987

நேரிசை வெண்பா

அகரம்போல் எங்கும் அறிவாய் நிறைந்து
பகவன் விளங்கும் படியைத் - தகவோங்க
எண்ணிநின்(று) எவ்வுயிர்க்கும் இன்னருளைச் செய்தொழுகின்
மண்ணில் அவன்வாரான் மற்று. 987

- இனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அகர உயிர்போல் இறைவன் எங்கும் நிறைந்துள்ளான்; அந்த நிலைமையை உணர்ந்து எவ்வுயிர்க்கும் அருள் புரிந்து இனியனாய் வரின் அவன் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயிர் இனங்களுக்கு ஆதாரமாயுள்ள நிலமண்டலத்தை உலகம் என்று சொல்லி வருகிறோம். கடல்களும் மலைகளும் சீவ கோடிகளும் இதில் நிறைந்திருக்கின்றன. இதன் மேலே வானமண்டலம் தெரிகிறது. அங்கே சூரியன், சந்திரன் முதலிய ஒளிப்பிழம்புகள் வியப்புகளை விளைத்து விளங்கி நிற்கின்றன.

அண்ட கோடிகளின் நிலைகளையும் சீவ கோடிகளின் வரவு செலவுகளையும் சிறிது கருதியுணர்ந்தாலும் பெரிய அதிசய ஆச்சரியங்கன் தெரிய நேர்கின்றன. காணுந்தோறும் கருதுந்தோறும் யாண்டும் யாதும் எல்லை காண முடியாத காட்சிகளே எங்கும் விரிந்து பரந்து நிற்றலால் இந்த நிலைகளுக்கெல்லாம் தலைமையான பொருள் ஒன்றுண்டு என்று பண்டுதொட்டே மனிதன் கண்டு கொண்டான். யூகமாய்க் கருதிக் கொண்ட அந்தக் காட்சியில் விவேக ஒளிகள் எவ்வழியும் எதிர் வீசி வருகினறன.

மனிதன் பிறக்கின்றான்; இருக்கின்றான்; சாகின்றான்.

இந்த மூன்று நிலைகளையும் கண்டவன் இவற்றிற்குத் தனித்தனியே கடவுளை உண்டு பண்ணினான். பிறத்தல் முதலிய மூன்றையும் முத்தொழில்கள் ஆக்கினான். படைத்தல், காத்தல், அழித்தல் என முறையே பெயர் கொடுத்தான். படைக்கும் கடவுள், காக்கும் கடவுள், அழிக்கும் கடவுள் என்றமைத்துக் கொண்டு பிரமன், திருமால், சிவன் எனப் பெயர்களும் சூட்டினான். இன்னவாறு மனிதன் படைத்த படைப்பில் நின்று கடவுள் பலவகையிலும் காட்சி புரிந்து வருகிறார். இவ்வகையில் இவரைச் செவ்வையாயறிந்து தெளிவாய்த் தெரிந்து கொள்ள கலையுலகில் உவமைகள் பல வந்துள்ளன. அவற்றுள் அகரம் ஒன்று.

அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு. 1 கடவுள் வாழ்த்து

அகரத்தின் நிலைமையை எடுத்துக் காட்டி இறைவனுடைய தலைமையை வள்ளுவர் இவ்வாறு விளக்கியிருக்கிறார். எங்கும் நிறைந்து எல்லாமாயிருந்து அகில சராசரங்களையும் இயல்பாய் இனிதியக்கி வருபவன் என்பதை இது துலக்கி நின்றது.

தன்னுழைப் பலவுயிர் தனித்தனி படைத்துப்
பரப்பிக் காட்டலின் பதுமன் ஆகியும்
அவ்வுயிர் எவ்வுயிர் அனைத்தும் காத்தலின்
செவ்விகொள் கருமுகில் செல்வன் ஆகியும்
கட்டிய கரைவரம்பு உட்புக அழித்து (5)

நீர்தலை தரித்தலின் நிமலன் ஆகியும்
தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின்
அரிமுதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்
மூன்றழல் நான்மறை முனிவர் தோய்ந்து
மறைநீர் உகுத்தலின் மறையோன் ஆகியும் (10)

மீனும் கொடியும் விரிதிணை ஐந்தும்
தேனுறை தமிழும் திருவுறை கூடலும்
மணத்தலின் மதிக்குல மன்னவன் ஆகியும்
நவமணி எடுத்து நன்புலம் காட்டலின்
வளர்குறி மயங்கா வணிகன் ஆகியும் (15)

விழைதரும் உழவும் வித்தும் நாறும்
தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும்
விரிதிரை வையைத் திருநதி சூழ்ந்த
மதுரையம் பதிநிறை மைம்மலர்க் களத்தினன். 9 கல்லாடம்

பிரமன், மால், சிவன், இந்திரன், அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என இறைவன் அருள் புரிந்திருக்கும் நிலையைக் கல்லாடர் இங்ஙனம் கருதித் துதித்திருக்கிறார். பொருள் நிலைகளை உள்ளம் ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். சிலேடை அணிகள் அரிய பல இனிய சுவைகளையுடையன.

எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்று என்றும் நிலையாயுள்ளது. அதனைத் தங்கள் தங்கள் நிலைமைக்குத் தக்கபடியே மாந்தர் புனைந்து போற்றி வருகின்றனர். மேலான பரமனை உரிமையோடு நினைந்து வருபவர் மேன்மையான மகிமைகளை அடைந்து வருகிறார். சார்ந்த சார்பு தேர்ந்த தெளிவாகிறது.

காணுகின்ற உயிரினங்களைக் கடவுள் உருவங்களாய்க் கருதிக் கருணை புரிந்தொழுகுவதே விழுமிய ஞானமாய் விளங்கி வருகிறது. சீவர்களுக்கு இதம் செய்து வருகிறவன் தேவகிருபையை எய்திச் சிறந்து திகழ்கிறான். தரும நலம் இருமையும் தருகிறது.

எவ்வுயிர்க்கும் எவ்வழியும் தண்ணளி புரிந்து வருபவர் புண்ணிய ஞானிகளாய்ப் பொலிந்து வருகிறார். ஞானமும் கருணையும் வானுயர் இன்பங்களை வளர்த்து வருகின்றன.

When wisdom entereth into thine heart, knowledge is pleasant unto thy soul. s (Bible)

உனது இதயத்தில் ஞானம் உதயமாகும் பொழுது உன் ஆன்மாவுக்கு அது பேரின்பமாகிறது என்னும் இது இங்கே அறியவுரியது. அறிவு தெளியவே ஆனந்த ஒளி வீசுகின்றது.

மெய்யுணர்வால் வைய மையல் நீங்கி மேலான இனிமைகள் தனியே விளைந்து ஓங்கி வருகின்றன

நேரிசை வெண்பா

தத்துவ ஞானம் தனிமை இனிமையாய்ப்
புத்தமுத போகம் புரிதலால் - முத்தாந்த
ஆனந்த வாழ்வில் அமர்ந்து மகிழ்சிறந்து
மோனந் தழைந்துள்ளார் முந்து.

இனிமை விளைவுகளை இனிது தெளிந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Apr-22, 1:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே