ஆசைத் தொடர்புகள் எல்லாம் அவமான நீசத் தொடரே - வீடு, தருமதீபிகை 997
நேரிசை வெண்பா
ஆசைத் தொடர்புகள் எல்லாம் அவமான
நீசத் தொடரே; நிலையழியின் - பேசரிய
பேரின்ப முத்தியுனைப் பேணி எதிரேந்தி
ஓரின்பம் ஆக்கும் உவந்து. 997
- வீடு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பொறி புலன்களில் விரிகின்ற ஆசைகள் எல்லாம் உன்னை நீசப்படுத்தி நெடிய துயரங்களையே விளைத்து வரும்; அவற்றை ஒழித்துவிடின் அல்லல் யாவும் ஒல்லையில் ஒழிந்து எல்லையில்லாத பேரின்ப நிலையை எய்தி என்றும் நீ இனிது மகிழ்வாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
விருப்பம், இச்சை, ஆசை என்பன சீவ சுபாவங்களாய் மேவியுள்ளன. மானச விருத்திகள் மானிடரை இயக்கி வருகின்றன. உள்ளத்தின் அசைவுகள் உயிரின் விசைகளாயுள்ளன.
உயிர் உடலோடு கூடிய போதே பசி குடலோடு கூடியது. அந்தப் பசி நோயை நீக்கி வாழ விரும்பிய வழியே விழைவுகள் முதலில் விளைந்து வந்தன; அவ்விழைவின் விளைவுகள் விரிந்து பரந்து அளவிடலரியபடி யாண்டும் நீண்டு வளர்ந்துள்ளன.
உடலின் தொடர்பால் விளைந்தது எவ்வழியும் கடக்க முடியாத கடலாய் விரிந்து உயிர்க்கு வெவ்விய துயரங்களை விளைத்து வருகிறது. பற்றிய நசை வழியே படு வசைகள் முற்றியுள்ளன.
துன்பங்களுக்கெல்லாம் மூல வித்தாய் உள்ள ஆசை அடியோடு ஒழிந்த பொழுதுதான் உயிர் ஈசனையடையும்; அன்றுதான் என்றும் நிலையான பேரின்ப வீட்டை அது பெற்று மகிழும்; அவா நீங்கி ஒழியின் ஆனந்தம் ஓங்கி எழுகிறது.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். 370 அவாவறுத்தல்
ஆசைப் புலை நீங்கின் அந்நிலையே நிலையான பேரின்ப வீடு என வள்ளுவர் இவ்வாறு கூறியிருக்கிறார், பொல்லாத துயரங்கள் எல்லாம் ஆசையால் விளைகின்றன; அது ஒழிந்தால் அல்லல்கள் யாவும் நீங்கி விடுகின்றன; அதிசய ஆனந்தம் ஓங்கி வருகின்றது. ஆராத அவாஅறின் பேராத பேரின்ப வீடு நேராம்.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே. 1
- எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல், பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்
ஆசையை ஒழியுங்கள், ஈசன் இருந்த இடம் எளிதே தெளிவாகும் எனத் திருமூலர் இங்ஙனம் குறித்துள்ளார். நீசமான ஆசை யிருக்கும்வரை ஈசனை யாரும் அடைய முடியாது. தூய பரனைத் தோய வேண்டின் தீய மருள் மாய வேண்டும்.
நேரிசை வெண்பா
ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு வீட்டு நெறியென்பார் - நீர்புகப்
பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
கெட்டார் வழிவியக்கு மாறு. 195
- அறநெறிச்சாரம்
ஆசை அறுவதே வீட்டுநெறி என இது காட்டியுள்ளது.
நேரிசை வெண்பா
பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்
பற்றறா(து) ஓடும் அவாத்தேருந் - தெற்றெனப்
பொ’ய்’த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும்
வித்தற வீடும் பிறப்பு. 22
- திரிகடுகம்
பாசப்பற்று ஆகிய வித்து அற்றபோதுதான் பிறப்பறும் என்று நல்லாதனார் இங்ஙனம் சிறப்பாய்ச் சொல்லியுள்ளார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் விளம் காய்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
(1, 5 சீர்களில் மோனை அமைவது சிறப்பு)
ஆமு னிச்சையே மேலுமே லும்பிறப்(பு)
அளிக்கும்வித் தெனநெஞ்சே!
நீம றித்திடா சைக்கடல் சுவறுமே
நினைவெனுந் திரைமாயும்
போமி றந்தெலா நினைவுமெப் பொழுதிலப்
பொழுதுபூ ரணமாய
சோம சேகரத் தெந்தைபொற் கழலையுந்
தொழலைய மிலைநாமே. 20
- வைராக்கிய சதகம்
தம் உள்ளத்தை நோக்கிச் சாந்தலிங்க சுவாமிகள் உரையாடியுள்ள இது ஈண்டு ஊன்றி உணரவுரியது உன் இச்சையே பிறப்புக்கு வித்து; ஆசையை அடக்கு; நசையான நினைவுகள் ஒழியின் இறைவனை எளிதே காணலாம்; அப்பொழுது பேரின்ப வீடு உனக்குக் காணியாம் எனத் தம் மனத்தோடு உரைத்திருப்பது மனித இனத்துக்கெல்லாம் இனித்த உரிமையாய் இசைந்து நின்றது. ஞான போதனை ஊன மருள்களை நீக்கி உய்தி புரிகிறது. ஈன நசை ஒழிந்தாலன்றி இனிய சுகம் எய்தாது.
தனக்கு மோசமாய் நாசத்தை விளைக்கின்ற ஆசையை மனிதன் விடாமல் பற்றி வருவது மாய மருளாய் முற்றி வருகிறது. புலையான நசை உள்ளத்தில் புகவே, நிலையான சுகத்தை இழந்து விடுகிறான். நெறிகேடனாயிழிந்து நிலை குலைந்து உழலுகிறான்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
இருள்படு காட்டின் ஊடே
..இருந்துழல் சிதட ராயோர்
தெருள்படு நகரம் தாமே
..சேரதர் அறிக லார்போல்
மருள்படு காம முன்னி
..வருவினை முயலா நிற்போர்
பொருள்படு நலஞ்செய் வீட்டில்
..புகுமதர் அறிக லாரே.
- பாகவதம்
இருண்ட காட்டில் அகப்பட்ட குருடன் வழி தெரியாமல் அலைவது போல் மருண்ட ஆசையுடைய மனத்தவர் வீட்டுக்குரிய நெறியறியாமல் வெய்ய துயரங்களில் உழலுவர் என இது காட்டியுள்ளது. சிதடர் - குருடர். அதர் - வழி.
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
ஆசைசற்(று) இருந்திடின் அதின்நி மித்தம்வந்(து)
ஓசைசால் வெகுளியும் ஒருங்கு நண்ணிடும்;
மாசையார் அஃதுற மயக்க மும்உறும்
ஈசையார் அடிக்கலப்(பு) இரிக்கும் இன்னவே.
– காசி ரகசியம்
ஆசைத் தொடர்பால் விளையும் அவகேடுகளை இதில் அறிந்து கொள்ளுகிறோம். மையலான பாசங்கள் வெய்ய துயர்களையே விளைத்து வருதலால் அவற்றை ஒழித்தவரே மெய்யான சுகத்தை நேர்கின்றனர். மாய உறவுகள் நீங்கின் தூய இன்பம் ஓங்கும்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
மனைக்குரி மனையா டன்னை
..வாய்த்தநன் மைந்தர் தம்மைக்
கனைத்தலை சுருட்டும் வேலைக்
..கடனிகர் செல்வந் தன்னை
எனைத்தையு மிலம்பா டென்றே
..யிம்மெனத் துறந்து பெம்மான்
தனைச்சர ணடைந்து ளாரே
..தனைநிக ரில்லாச் செல்வர். 330
- அகத்தியன் அருள்பெறு படலம், தணிகைப் புராணம்
உலக போகங்களும் செல்வங்களும் எவ்வளவு வளமாயிருந்தாலும் அவை நிலையில்லாதன; புலையுடையன; மருளான அத்தொடர்புகளை விலக்கி மெய்ப்பொருளை உரிமையாயடைந்தவரே மேலான பாக்கியவான்கள் என இது குறித்துள்ளது.
பாச மருள்கள் படியாதவரே ஈசனருளை இனிது அடைகின்றார். சிறிய புலைகள் ஒழியவே பெரிய நிலைகள் வருகின்றன
நேரிசை வெண்பா
பொல்லாப் புலைகள் புறமொழிய எவ்வழியும்
நல்ல அருள்நிலையை நாடிவரின் - அல்லலாய்
நேர்ந்த பிறப்பின் நிலையழிந்து பேரின்பம்
ஆர்ந்து வருமே அவண்.
- கவிராஜ பண்டிதர்
பேரின்ப வீடு அடையவுரிய வழியை இது விளக்கியுளது. நல்ல சுகத்தை நாடுகிறவன்.அல்லலைக் கூடலாகாது.
அவலமான ஆசை ஒழிந்த அளவு மனிதன் புனிதனாயுயர்ந்து விளங்குகிறான். இச்சை ஒழியவே இனிய சுதந்திரங்களும் அரிய சுகங்களும் உச்சநிலையில் அங்கே ஒளி வீசி எழுகின்றன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
இச்சையாம் விறகு மாண்டால்,
..எண்ணமாம் வன்னி மாளும்;
நிச்சயம் ஆகும் தேயத்
..தியாகமாம் நெடுந்தேர் ஏறி
மெச்சிய உதாரக் கண்ணால்
..வேட்கையால் மிகவும் வாடும்
கொச்சைஞா லத்தை நோக்கிக்
..குறைவற இருப்பாய் தீரா!
– ஞான வாசிட்டம்
இச்சை அற்றபோது அந்த ஞானி அதிசய தீரனாயுயர்ந்து பரமன் போல் உலகத்தை உல்லாச வினோதமாய் நோக்கி நிற்பான் என வசிட்ட முனிவர் இராம பிரானிடம் இவ்வாறு கூறியிருக்கிறார். நிராசையே நிமல ஈசனாய் நிலவுகின்றது.
துன்ப நிலையமான ஆசையை அடியோடு ஒழித்தவரே இன்ப நிலையமான அதிசய வீட்டில் குடி ஏறுகின்றனர். ஆனந்தப் பேற்றின் உண்மையை ஓர்ந்து உணர்ந்து தேர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.