என் கனவில் ஜாக்கி சான்

நேற்று தூக்கத்தில் பல கனவுகள் கண்டேன். சில கனவுகள் சுமாராக ஞாபகம் வருகிறது. சிலவை மறந்து போய் விடுகிறது. இப்போது மறந்து போன ஒரு கனவைப் பற்றி கூறுகிறேன். ஏனெனில் அதை நீங்கள் கேட்டு , நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டு உடனே மறந்து விட வேண்டும். இதை மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மறந்து போன கனவைப் பற்றி சொல்கிறேன்.

ஜாக்கி சான் என் கனவில் வந்தார். எப்படி வந்தார்? வீடு பூட்டியிருந்தது. வெளியே தெருவிலிருந்து சர்ர்ர்ருன்னு பிங்க் பாங்க் பந்து போல துள்ளி என் வீட்டு பால்கனியில் குதித்தார். அப்படி குதிக்கையில் அவரது பேன்ட் டர்ர்ர்ருன்னு கிழிந்து விட்டது . உடனே ஜாக்கி சான், அங்கே வளர்ந்துள்ள குரோட்டன் செடிகளை பறித்து அவைகளை தன் பேன்டாக போட்டுக் கொண்டார். அப்போது நாங்கள் இரவு உணவு எடுத்துக் கொண்டிருந்தோம்.
நானும் என் மனைவி மட்டுமே வீட்டில். அவர் மாடியிலிருந்து படிகளில் இறங்காமல் கடைபிடிப்புக்காக உள்ள சுவரில் சறுக்கி கொண்ட ஊஊஊஊஊஊ என்று விசித்திரமான ( அவருக்கு இயல்பான) சத்தம் போட்டபடி எங்கள் டைனிங் மேசை மீது பாய்ந்து உட்கார்ந்தார். நானும் மனைவியும் ஒரு கணம் பயந்து போய் அதிர்ந்து விட்டோம். நல்ல வேளை, எங்களுக்கு ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்ததால் நான் அவரிடம் ஆங்கிலத்தில் " யார் நீங்கள், இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டில் புகுந்து இப்படி சாப்பாட்டு மேசையில் பாய்ந்து குதித்தீர்கள? அதற்கு அவர் " நான் இங்கே வர வேண்டும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் என் கையில் உள்ள இடம் காட்டும் கருவி என்னை இங்கே கொண்டு சேர்த்து விட்டது. ஏதாவது சாப்பிட கொடுத்தால் நான் இங்கே என் வேலையை தொடர்வேன் " என்றார். நான் " இங்கு உங்களுக்கு என்ன வேலை " என்று கேட்டேன். அவர் மேசையையும் எங்களையும் சுற்றி சுற்றி ஓடி வந்த படி " இந்த மேசையின் கீழ் தான் அந்த ரகசிய சுரங்க பாதை உள்ளது. எனவே ஒரு கடப்பாரை கொடுங்கள், தரையை பிளப்பதற்கு " என்றாரே பார்க்கலாம். நாங்கள் இருவரும் " உங்களுக்கு சாப்பிட உணவு தருகிறோம். ஆனால் இந்த தரையை உடைக்கும் வேலையை செய்யாதே. அப்படி செய்தால் இந்த வீட்டின் சொந்தக்காரர் என் தலையை உடைத்து விடுவார். " என்று பதறிப் போய் சொன்னவுடன் ஜாக்கி ஹிஹிஹிஹாஹாஹாஹா என்று சிரித்துக் கொண்டே, மேசையில் உள்ள வாழைப் பழங்களை உரித்து சாப்பிட்டபடி " ஒன்றும் பயப்படாதீர்கள். உங்கள் அரசாங்கம் நான் செய்யும் அனைத்தையும் அறியும். இதோ, வெளியே உங்கள் அரசாங்க அதிகாரிகள் வந்துவிட்டனர் " பார்த்தால் உயர் நிலை போலீஸ் அதிகாரிகள் வெளியே வந்து நின்றிருந்தார்கள்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் தரையை உடைத்துவிட்டார்கள். கீழே பார்த்தால் ஒரு சுரங்கம் போல தெரிந்தது. அதன் உள்ளே இறங்கி ஜாக்கி ஓடியே போய் விட்டார். அங்கிருந்த அதிகாரிகள் " ஒன்றும் கவலை வேண்டாம் சார். இன்னும் ஓரிரண்டு நாட்களில் உடைத்ததை அடைத்து விடுவோம் என்று சொன்ன போது நாங்கள் வாயடைத்துப் போய் விட்டோம்.
பின்னர் தெரிய வந்தது, எங்கள் வீட்டிற்கு கீழே போகும் சுரங்க பாதையில் ஓடிக்கொண்டே சென்றால் (ஜாக்கி சான் வேகத்தில்), ஒரே நாளில் சீனா வந்து விடுமாம்.
சீனாவுக்கு போய் ஜாக்கி சான் என்ன செய்தார். யாருக்கு தெரியும். அந்த நேரத்தில் தான் என் சுவாரசியமான தூக்கம் கலைந்து விட்டதே.

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (9-Apr-22, 12:02 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 88

சிறந்த நகைச்சுவைகள்

மேலே