ஓரின்பம் உண்டென்ற உணர்வுரையை உண்மையாய்க் கண்டவரே காண்பார் கதி -வீடு, தருமதீபிகை 998
நேரிசை வெண்பா
பேரின்ப வீடென்றும் பேசரிய முத்தியென்றும்
பாரின்பம் ஆர்வார் பகர்வவெலாம் - ஓரின்பம்
உண்டென்று கேட்ட உணர்வுரையே உண்மையாய்க்
கண்டவரே காண்பார் கதி. 998
- வீடு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
என்றும் நிலையான பெரிய இன்ப வீடு என்றும், சொல்ல முடியாத நித்திய முக்தி என்றும் உலக இன்பங்களை நுகர்ந்து வருபவர் உவந்து சொல்லி வருவன எல்லாம் மேலோர் வாய்மொழிகளைக் கேட்ட கேள்வி அளவேயாம்; அதனை அநுபவ நிலையில் உண்மையாய்க் கண்டவரே உயர்கதி கொண்டவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
இந்த உலகில் அனுபவிக்கின்ற தேக போகங்கள் சிற்றின்பம் என்றும், இவற்றைத் துறந்து பந்த பாசங்கள் அற்ற முத்தர்கள் அந்த உலகில் நித்தியமாய்ப் பெற்று நிரதிசயமாய் அனுபவிப்பது பேரின்பம் என்றும் பேசப்படுகின்றன.
பெருமை சிறுமைகள் அவற்றின் மேன்மை கீழ்மைகளை முறையே உணர்த்தி நின்றன ஊன உடலோடு தோய்ந்து வருகிற யாதும் நிலையாமல் யாண்டும் இழிந்து கழிந்து ஒழிந்தே போகின்றன; இவ்வாறு இழி புலைகளாய் ஒழியாமல் என்றும் நிலையான பரமானந்த போகமே பேரின்ப உலகம் என வழி முறையே வழங்கி வர நின்றது.
பொறிவாயில் ஐந்தவித்தான் - குறள், 6
என்று இறைவனுக்கு இவ்வாறு ஒரு பெயர் வந்துள்ளது. இந்த நெறியில் நின்று ஒழுகுகின்ற விழுமியோரே நித்திய முத்தராய் நீடு வாழுகின்றார். ஐம்புலன்களையும் .வென்று அருந்தவ நிலையில் திருந்தி நின்றவர்க்கே அதிசய ஆனந்த வீடு விருந்து புரிந்து அருளுகிறது. அதனை உண்டவர் உணர்வரேயன்றி வெளியே மீண்டு வந்து யாண்டும் உணர்த்த முடியாது.
’மீண்டு ஈண்டு வாரா மேல் நிலம்’ என்று வீட்டு நிலையை மேலோர் இவ்வாறு கூறியுள்ளனர். அங்கே போனவர் மீளாராதலால் ஆண்டு நீண்டுள்ள ஆனந்த நிலையை யாராலும் யாதும் அறிய இயலாது. அறிந்தவர் பிரிந்து வந்து பேச மாட்டார்.
கண்டவர் விண்டிலர்;
விண்டவர் கண்டிலர்.
என்பது முதுமொழி. வீட்டின் இன்பத்தைக் கண்டவரையும் காணாதவரையும் இது காட்டியுள்ளது. துயிலும் சுவையையே அயலே சொல்ல இயலாது. பரமானந்த நிலையைப் பகருதல் எவ்வாறு? பேசரிய பேரின்ப முத்தி பேச வுரியதன்று. .
ஆனந்த சொரூபியான இறைவனுடைய அருள் நிலையே வீடு என விளங்கியுளது. சிவலோகம், பரமபதம், கைலாசம், வைகுண்டம் என்று இந்நாட்டு இலக்கியங்கள் வீட்டைக் குறித்துக் காட்டி வருகின்றன. ஆன்மா அல்லலுறாமல் அமைதியாய்ப் பரமான்மாவோடு தோய்ந்திருப்பதே இன்ப வீடு என நேர்ந்திருக்கிறது. அதனையடைவது மிகவும் அரிது; அரிய தவ நிலையினரே அணுக நேர்கின்றனர். பற்று முற்றும் அற்று இரு வினைகளும் அடியோடு ஒழிந்தவரே அதனை உரிமையோடு மருவுகின்றனர். பந்தமில்லாதவரே அந்தமில் ஆனந்தம் உறுகிறார்.
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
தாவரும் இருவினை செற்றுத் தள்ளரும்
மூவகைப் பகைஅரண் கடந்து முத்தியில்
போவது புரிபவர் மனமும் பொன்விலைப்
பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே. 15
- தாடகை வதைப் படலம், பால காண்டம், இராமாயணம்
விட்டவர் அல்லரேல் யாவர் வீடுளார்? 19 மந்திரப் படலம், அயோத்திய காண்டம், இராமாயணம்
வினைகளை வென்று மேல்வீடு கண்டவர். 71 இராவணன் மந்திரப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்
‘காடு பற்றியும், கனவரை பற்றியும், கலைத்தோல்
மூடி முற்றியும், முண்டித்தும், நீட்டியும், முறையால்
வீடு பெற்றவர்’ 31 இரணியன் வதைப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்
வீடு பெற உரியவரை இவை விளக்கியுள்ளன. நீத்தார் என்று துறவிகளுக்கு ஒரு பெயர். யாவும் விட்டவர் என்பதை அது விளக்கியுளது. தன் உடலின் உறவுகளை நீத்தவரே பிறவிக்கடலை நீந்திப் பேரின்பம் பெறுகின்றார்.
துன்பங்களிலேயே தொடர்ந்து படர்ந்து வந்த சீவன் இன்ப நிலையமான ஈசனை அடைந்து இனிது மகிழ்ந்திருத்தலே மோட்சம் என வந்தது. சரியான பரிபக்குவம் அடைந்தபோது தான் உயிர் பரமனை மருவுகிறது. பரமபுருடனோடு இரண்டறக் கலந்து இன்புறுதலால் சீவனை நாயகி என்றும் சிவனை நாயகன் என்றும் கூறுவது மரபு. இதனை நாயகி நாயக நேயம் என்பர்.
பெண் பேதையாயிருக்கும் போது நாணுவதில்லை; யாரோடும் கூசாமல் பேசிப் பழகுவாள்; பருவம் அடைந்ததும் வெளியே வரக் கூசுவாள். முன்பு மறையாமல் திறந்து திரிந்த கொங்கைகளைப் பின்பு நன்கு மூடி எங்கும் யாரும் காணாதபடி பேணுவாள். அவ்வாறு நாணிப் பேணி வந்தவள் மணந்த கணவனிடம் யாதும் கூசாமல் தேகம் முழுவதையும் ஏகபோகமாய்த் தந்து இனிது கலந்து இன்பம் மீதூர்வாள். இந்தப் பெண்மை நிலை ஞானிகளுடைய உண்மை நிலையோடு உரிமை தோய்ந்து ஒப்பாயுள்ளது.
யாதும் உணராமல் பேதையாயிருக்கும் போது மனிதன் ஏதும் நாணாமல் எங்கும் கூசாமல் திரிகிறான்; அந்தப் பேதைமை நீங்கிப் புத்தியறிந்து மெய்யுணர்வு தோன்றினால் முன்பு நச்சித் திரிந்த கொச்சையான பொறிபுலன்களின் நுகர்ச்சிகளில் அருவருப்படைந்து ஒதுங்குகிறான். யாரோ்டும் பேசாமல் மோனமாய்த் தனியே இருக்கிறான் பருவமங்கை போல் உரிய ஒரு நாயகனைக் கருதி உருகுகிறான். ஞானமும் அன்பும் பெருந்தனங்களாய்ப் பெருகியிருத்தலால் எவரிடமும் நெருங்காமல் ஏகாந்தமாய்த் தங்கி ஏகநாயனையே எண்ணி யோகம் மருவியுள்ளான். ஞான யோகியின் நிலை மானமங்கை போல் மருவி மருமங்கள் பெருகியிருப்பது இங்கே கருதியுணர வுரியது.
நேரிசை வெண்பா
முலைமுதிர நாணம் முதிரும் மகள்போல்
கலைமுதிர ஞானம் கனிந்து - தலைமகனைக்
கூடிக் களிக்கும் குணமே மணமாக
ஆடிக் களிக்கும் அது. - கவிராஜ பண்டிதர்
ஞான நீர்மையின் சீர்மையை இதில் கூர்மையாய் ஓர்ந்து கொள்கிறோம். முலை முதிர்வில் நாணம் விளைகிறது; கலைமுதிர்வில் ஞானம் கனிகிறது. அந்த நாணம் மானத்தைக் காப்பாற்றிப் பெண்மையை மகிமைப்படுத்தி இன்புறுத்துகிறது; இந்தஞானம் சீவனைப் பாதுகாத்துத் திவ்விய பேரின்பத்தை அருளுகிறது.
உலக ஆசைகள் யாவுமற்றுப் பொறிபுலன்களை அடக்கி ஈசனையே கருதி உருகுவது ஞானிகளுடைய இயல்பாயிசைந்தது.
என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்(து)
அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே. 21
சுத்த அறிவாய்ச் சுகம்பொருந்தின் அல்லால்என்
சித்தந் தெளியாதென் செய்வேன் பராபரமே. 22
மாறா அனுபூதி வாய்க்கின் அல்லால் என்மயக்கந்
தேறாதென் செய்வேன் சிவமே பராபரமே. 23
சொல்லால் அடங்காச் சுகக்கடலில் வாய்மடுக்கின்
அல்லால்என் தாகம் அறுமோ பராபரமே. 27
இரவுபக லற்றவிடத் தேகாந்த யோகம்
வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே. 67
– பராபரமே, தாயுமானவர்
இறைவனை நோக்கிக் தாயுமானவர் இவ்வாறு உருகி உரையாடியிருக்கிறார், பரமானந்த வீட்டை ’இரவு பகல் அற்ற இடம்’ என்றது. சிவானந்த போகத்தை எண்ணி இவர் ஏங்கியுள்ள நிலை ஈங்கு அறிய வந்தது. பத்தியும் துறவும் முத்தியை மருவின.
கட்டளைக் கலித்துறை
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டும் அவிழ்ந்தவன்பால்
குராப்புனை தண்டையம் தாள்தொழல் வேண்டும் கொடியஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால்
இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே. – 74
- கந்தரலங்காரம்
பேரின்ப வீடு பெறுதற்கரியது என அருணகிரிநாதர் இவ்வாறு கூறியிருக்கிறார். பரமன்பால் பேரன்பு பூண்டு அவனுடைய அருளைப் பெற வேண்டும், பொறிபுலன்கள் அடங்க வேண்டும், உள்ளம் ஒடுங்கி உயர்ஞானம் ஓங்க வேண்டும்; இவ்வளவும் செவ்வையாயமைந்த போதுதான் திவ்விய ஆனந்த நிலையை அடையலாம் என இவர் உறுதியாய் முடிவு செய்துள்ளார்.
வீடுபெறப் பாடுபடும் வித்தகனே முத்தியின்பம்
கூடும் பரமாய்க் குவிந்து. - கவிராஜ பண்டிதர்