அடல்கொள் பரத்தில் எனுமுண்மை பார்த்துத் தெளிந்து வரத்தில் உறைக - இனிமை, தருமதீபிகை 988

நேரிசை வெண்பா

கடலில் அலைகள் கலித்த திரைபோல்
உடலுயிர்கள் ஓங்கி ஒடுங்கும் - அடல்கொள்
பரத்தில் எனுமுண்மை பார்த்துத் தெளிந்து
வரத்தில் உறைக வரைந்து. 988

- இனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கடலில் அலைகள் கலித்தெழுந்து மறைதல் போல் உடல் உயிர்கள் பரத்தில் தோன்றி மறைகின்றன; இந்த உண்மையை உணர்ந்து உறுதி நலனைத் தெளிந்து உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பலவகை நிலைகளில் பரந்து விரிந்து தோன்றுகிற உலக உயிர்களுக்கு உரிய மூல நிலையை இதில் உணர வந்துள்ளோம். காணுகின்ற காட்சிகளைக் கருதி ஓர்ந்து உறுதியான உண்மையை உணர்ந்து தேர்ந்து தெளிவது உயர்ந்த ஞானமாம்.

யூக விவேகங்கள் மாய மோகங்களால் மயங்கியிருக்கும் வரையும் மெய்யை உணர முடியாமல் தியங்கி நிற்கின்றன. மயக்கம் தெளிந்தால் மனித அறிவு புனித ஞானமாய்ப் பொலிந்து விளங்குகிறது. ஒளிமுன் இருள் போல் அதன் முன் மருள்கள் ஒழிந்து போய் மெய்யான பொருளை அது நன்கு தெளிந்து மேலான நிலையை அடைந்து கொள்கிறது.

உலகில் தோன்றின பொருள்கள் யாவும் மறைந்து போகின்றன; மறைந்து போனவை மீண்டும் பிறந்து வருகின்றன; இவ்வாறு வருகிற உயிரினங்களுள் மனித மரபு மதி நலம் உடையதாய்ப் பெருகியுளது. எவ்வழியும் இன்ப நலங்களையே விரும்புகிறது; யாண்டும் உயர் நிலைகளையே நாடுகிறது; இயல்பான இந்த விருப்பமும் நாட்டமும் அது உயர்வான ஒரு பொருளிலிருந்து வந்துள்ள உண்மையை ஒளியாமல் வெளியிடுகின்றன.

இறைவன் ஒருவனே இன்ப மயமானவன்; என்றும் நித்திய நிலையினன்; ஒப்பற்ற உயர் பொருள்; அந்த ஆதிமூலப் பொருளிலிருந்தே அகில சீவ கோடிகளும் தோன்றியுள்ளள.

அளவிடலரிய அலைகள் கடலில் எழுகின்றன; திரை, துரை, குமிழி, துளி, திவலை என வேறு வேறு பேர்கள் பெறுகின்றன; மாறி அதிலேயே மடங்கி அடங்கி மறைகின்றன. அது போலவே சராசரங்களும் அகில உலகங்களும் பரமனிடமே தோன்றி ஒடுங்குகின்றன. ஆகவே ஆனந்தக் கடலாய் அது ஓங்கியுள்ளது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

பொருகடலில் திரைமுதலாய்ப் பிறந்த எல்லாம்
..புனலாகி விளங்காமல் புழுதி ஆமோ?
ஒருபொருளாம் பிரமம்மாத் திரமே அல்லால்
..உபயமெனும் கற்பனைப்பேர் ஒன்றும் இல்லை;
எரியிடத்தில் சூடுமாத் திரமே அல்லால்
..இரண்டுண்டோ? அவ்வகைபோல் என்றும் ஒன்றாம்;
சரியைகிரி யாயோகப் பதத்தின் முற்றிச்
..சாதனங்கள் நிறைந்தவர்க்கே சாற்றல் வேண்டும்.

– ஞான வாசிட்டம்

ஒருபொருள் ஆகிய பிரமத்திலிருந்தே பல வகையான சீவ கோடிகளும் அண்ட கோடிகளும் தோன்றியுள்ளன என்று காரண காரியங்களோடு இது காட்டியுள்ளது. வித்தக நிலையில் விளக்கியுள்ள தத்தவக் காட்சிகள் உய்த்துணரத் தக்கன.

திருச்சந்தக் கலிவிருத்தம்,

தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்(து) அடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே. 10

- முதல் ஆயிரம், திருமழிசை ஆழ்வார்

திருமழிசை ஆழ்வார் பரமனை இவ்வாறு துதித்திருக்கிறார்.

கடல் நீரில் திரைகளும் நுரைகளும் எழுந்தடங்குதல் போல் இறைவனிடம் சராசரங்கள் தோன்றி மறைகின்றன என்றதனால் உலக உயிர் பரங்களின் நிலைகளை உணர்ந்து கொள்ளுகிறோம். ஒரு பரம் பொருளிடமிருந்தே அகிலமும் பிறந்துள்ளன.

சேய்களுக்குத் தாயும் தந்தையும் போல் சீவகோடிகளுக்கு ஈசன் அமைந்திருத்தலால் அம்மையப்பன் என அவருக்கு ஒரு பேர் அமைந்து நின்றது. 'அம்மையே! அப்பா” என்று மாணிக்க வாசகர் ஆர்வத்தோடு அழைத்து உருகி யிருக்கிறார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் விளம் புளிமாங்காய்)

தந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ
..சஞ்சல மதுதீர்க்க
வந்த தேசிக வடிவுநீ உனையலால்
..மற்றொரு துணைகாணேன்
அந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே
..ஆதியே அடியார்தஞ்
சிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ்
..சிரகிரிப் பெருமானே.

- தாயுமானவர்

இறைவனை நினைந்து தாயுமானவர் இவ்வாறு உருகி உரையாடியிருக்கிறார், உணர்வு நலம் சுரந்துள்ளம் கனிந்துருகி வருதலால் உரைகள் தெய்வ மணம் கமழ்ந்து திவ்விய ஒளிகளை வீசி வருகின்றன. பரிபாக நிலை மொழிகளில் தெளிவாய்த் தெரிகிறது.

உரிய உறவு தெரியவே அரிய பரமனை ஞானிகள் கருதி மகிழ்கிறார், தாம் சேர்ந்த வண்ணமே சீவர்கள் நேர்ந்து வருதலால் ஈசனைச் சிந்தித்து வருபவர் தேசுமிகுந்து திவ்விய மகான்களாய்ச் சிறந்து திகழ்கின்றார். உள்ளம் உயர மனிதன் உயர் பரம் ஆகிறான். சீவாத்துமா, மகாத்துமா, பரமாத்துமா என்னும் தொடர்புகளிலுன்ள உறவுரிமைகளை ஓர்ந்துணர்ந்து கொள்ள வேண்டும். ஆன்ம நிலைகள் அதிசயம் உடையன.

புனிதமான உயர்ந்த சிந்தனைகளால் மனிதன் தெய்வமாய் மகிமை பெறுகிறான். மேலான மெய்ப் பொருளைத் தியானித்து வருதலால் யோகிகள், ஞானிகள், தவசிகள் தெய்வ இனங்களாய்த் தேசு வீசி நிற்கின்றார். அவர் நிலை அவன் கலை ஆகிறது.

உள்ளம் பரனை உருகியுறின் ஆனந்த
வெள்ளம் பரவும் விரிந்து.

இன்ப மூர்த்தியைக் கருதி வருபவர் இன்ப வாரிதியில் மூழ்கி வருகிறார். மருவிய சிந்தனை வழியே மாந்தர் நேர்ந்து திகழ்கிறார்.

Through the contemplation of superhuman beauty mystics, poets may reach the ultimate truth. - Alexis Carrel

மேலான தெய்வ நீர்மையைச் சிந்தித்து வருவதின் மூலம் முனிவர்களும் கவிஞர்களும் நிலையான மெய்ப்பொருளை அடைந்து கொள்கிறார்கள் என்னும் இந்த ஆங்கில வாசகம் ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்ளவுரியது.

உள்ளம் புனிதமாய் உயர்ந்தால் மனிதன் ஈசன் ஆகிறான்; அது பழுதாயிழிந்தால் நீசனாய்ப் பாழ்படுகின்றான். உயர்ந்த பரம்பொருளிலிருந்தே நீ வந்திருக்கின்றாய்; உனது உண்மை நிலையை உணர்ந்து நன்மைகளில் உயர்ந்து உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-22, 3:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே