சங்கத்தமிழ் விருந்து நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் பேராசிரியர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இராஇரவி

சங்கத்தமிழ் விருந்து!
நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் பேராசிரியர் நிர்மலா மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராயர் நகர், சென்னை-17. பக்கங்கள் : 200, விலை : ரூ.150.

******

‘சங்கத்தமிழ் விருந்து’ பெயருக்கு ஏற்றபடி காரணப் பெயராக சங்கத்தமிழ் விருந்தாக உள்ளது. சங்கத்தமிழ் என்னும் பலாப்பழத்தை உரித்து சுளைகளாக வழங்கி இருப்பதால் படிக்க சுவையாகவும் எளிமையாகவும் உள்ளது. நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன், அவர்களின் கணவர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் காலமான சோகத்திலிருந்து மீண்டு வந்தபோது கீழே விழுந்து கை உடைந்து சிகிச்சை பெற்று வந்தபோதும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து எழுதி வடித்த நூல் இது. பாராட்டுகள். ஐயாவைப் போல தொடர்ந்து இயங்கி வருவதற்கு அம்மாவிற்கு வாழ்த்துகள்.

பேராசிரியர் இ.கி.இராமசாமி அவர்களின் அணிந்துரை வரவேற்பு தோரணமாக உள்ளது. 40 சிறிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள். கட்டுரைகள் சிறியதாக இருப்பதால் படிக்க சுவையாக உள்ளன. நீண்ட நெடிய கட்டுரைகள் சோர்வு தரும். இந்நூல் படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் சுவைபடவும் தெளிவான நடையில் நுட்பமாக விளக்கங்களுடன் எழுதி இருப்பது சிறப்பு. தமிழன்னைக்கு அணிகலன் பூட்டும் விதமாக தமிழ் இலக்கியத்தின் அருமை பெருமையை பறைசாற்றிடும் வண்ணம் சிறப்பாக வந்துள்ளது.
இந்நூலை கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடநூலாக வைத்தால் எளிதாக இலக்கியம் படைப்பார்கள்.

‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ முதல் கட்டுரை ‘யாயும் யாயும் யாரோ’ என்ற புகழ்பெற்ற வைர வரிகளுக்கு விளக்கம் தரும் விதமாக அமைந்துள்ளது. அன்றே காதலுக்கு இலக்கணம் கூறும் விதமாக அமைந்த பாடல். காலத்தால் அழியாமல் இன்றுவரை இலக்கிய மேடைகளில் ஒலிக்கும் பாடலாக உள்ளது. கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதையையும் மேற்கோள் காட்டி முடித்து இருப்பது முத்தாய்ப்பு.

சங்க இலக்கியப் பாடல்களை எழுதி அதற்கான பொருள் விளக்கமும் எழுதி பொருத்தமான இடங்களில் நடப்புகளையும் மேற்கோள் காட்டி ஒவ்வொரு கட்டுரைகளையும் சிறப்பாக வடித்துள்ளார்.

சங்க இலக்கியங்களில் கலித்தொகை, கபிலரின் குறிஞ்சிக் கவி, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பொருத்தமான திருக்குறள் மேற்கோள்கள், அகம், புறம், பாலைக்கவி என ஒரே ஒரு நூலில் சங்க இலக்கியத்தின் முக்கியப் பாடல்கள், விளக்க உரையுடன் இடம்பெற்று இருப்பது சிறப்பு. பல்சுவை விருந்தாக இலக்கிய விருந்து வைத்துள்ளார். பாராட்டுகள். சங்க இலக்கியப் பாடல்களோடு கவிஞர் மேத்தா, கவியரசு கண்ணதாசன் போன்றோரின் வைர வரிகளோடு பொருத்தி வடித்த கட்டுரைகள் நன்று. சங்க இலக்கிய படிப்பது கடினமல்ல, புரிந்து படித்தால் மிகவும் எளிமையானது, இனிமையானது என்பதை உணர்த்தும் வண்ணம் வலிமையான சங்க இலக்கியப் பாடல்களை எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையாகவும் இனிமையாகவும் வழங்கி உள்ளார்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம், சங்க இலக்கியத்தை மாணவிகளுக்கு பாடமாக நடத்திய அனுபவம் மற்றும் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களுடன் இணைந்து இலக்கிய மேடைகளில் பேசிய அனுபவம் எல்லாம் சேர்ந்து சங்க இலக்கியத்தின் மேன்மையான பாடல்களை சிறிய கட்டுரைகளாக வடித்து தமிழ் கூறும் நல்உலகிற்கு வழங்கி உள்ளார்.

பதச்சோறாக சில வரிகள் நூலிலிருந்து :

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்!
கடையேழு வள்ளல்களில் ஒருவன் பாரி
இவன் வேள்பாரி என்று அழைக்கப்பட்டான்.
மாரி போல் வழங்கும் கொடைத்திறம் மிக்கவன் பாரி!

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே

புறம் 107

என்று பாரியை இகழ்வது போல் புகழ்ந்து பாடுவார்.

இப்படி பல சுவையான கருத்துக்கள் நூல் முழுவதும் நிரம்ப உள்ளன.

அவ்வையார் ஒருவர் அல்ல, பலர் என்ற கருத்தும் உண்டு. அவ்வையார் யார்? என்ற விரிவான விளக்கம் நூலில் உள்ளது.

அவ்வையாரின் பொன்மொழிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அமெரிக்காவில் அறிவியல் கூடத்தின் வெளியே எழுதி வைத்துள்ளதை பார்த்து வியந்ததை நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஔவை யார்? என்று கேட்டால்,

1) கடைச்சங்க காலத்துத் தோன்றிய கவிஞர்

2) அரசரிடையே போர் தவிர்க்க தூது சென்ற சமாதானவாதி

3) சேரமன்னன் அதியமானின் அரசவைப் புலவர்

4) தற்காப்பிற்காகப் போர் புரிந்த அதியமானின் வீரத்தைப் பாடிய போர்க்களப் புலவர்

5) நீதிநூல்கள் இயற்றிய சமுதாயக் கவிஞர்

6) பக்தி கவிதைகள் பாடிய பக்தை

7) ஞானக்குறள் தந்த தத்துவ மேதை

8) குழந்தை இலக்கியம் படைத்த புதுமைக் கவிஞர்

9) மரணத்தை வென்ற சித்தர்

10) தமிழ்மக்கள் கோயில் அமைத்து வழிபடும் அறிவுத் தெய்வம்

11) பாரதி போற்றிய பாட்டி என்றெல்லாம் கூறுவர் அறிஞர்

இப்படி, யார் ஔவை? என்ற விளக்கத்தையும் படித்து அசந்து போனேன். ஆணாதிக்க சிந்தனை மிகுந்த அந்தக்காலத்தில் ஔவை சிறப்பான ஆளுமையுடன் வலம் வந்தது அறிந்து மகிழ்ந்தேன்.

சங்க இலக்கியத்தில் உள்ள அகநானூறு. புறநானூறு போன்றவற்றில் புகழ்பெற்ற பாடல்களை மேற்கோள் காட்டி அக்காலத்தில் தமிழன் அறநெறியோடு எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி குறிப்பாக செடி, கொடி மரங்களைக் கூட நேசித்து தமிழன் வாழ்வாங்கு வாழ்ந்ததை, மன்னர்களின் கொடை உள்ளத்தை நற்பண்புகளை விளக்கும் விதமாக நூல் உள்ளது. சங்கத்தமிழ் கடினம் அல்ல; எளிமை தான் என்ற முடிவுக்கு வருவதற்கு உதவிடும் நூலாக உள்ளது. பாராட்டுகள்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (9-Apr-22, 12:28 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 77

சிறந்த கட்டுரைகள்

மேலே