இந்திய ராணுவம் பெயரில் மோசடி இரண்டாம் கடைசி பாகம்
வீட்டை பார்க்காமலேயே ஒருவர் வீடு பிடித்து விட்டது என்கிறார் என்பது கொஞ்சம் எனக்கு வியப்பாக இருப்பினும், விசாரித்தவர் ராணுவத்தில் சிப்பாயாக இருப்பவர் என்பதால் அவர் கூற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்று எனக்கு தோன்றியது. பின்னர் நாங்கள் இருவரும் கருத்து பரிமாற்றம் செய்துக்கொள்கையில் நான் " பாதுகாப்பு தொகையாக 80000 ரூபாய் முன்பணமாக தரவேண்டும்" என்று சொன்னபோது ஜெய்கிஷன் கொஞ்சம் கூட யோசனை செய்யாமல் " அதற்கு என்ன. கொடுத்துவிடுகிறேன் என்றார். என் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை வாங்கி கொண்டார். அடுத்த நாள் அவர் எனக்கு போன் செய்து " என்னுடைய உயர் அதிகாரி உங்களுடன் இன்று பாதுகாப்பு தொகை குறித்து உரையாடுவார்" என்றார். நான் " மற்றவர்கள் என்னுடன் எதற்கு பேசவேண்டும்" என்று கேட்டபோது ஜெய்கிஷன் " ராணுவம் சம்பத்தப்பட்ட செலவுகள் முன்பணம் எதுவாயினும் ராணுவ அலுவலகத்தின் மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் கேட்ட 80000 ரூபாய் முன்பணத்தை என் அலுவலகம் தான் உங்களுக்கு கொடுக்கும்" என்றார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். அன்று மதியம் ரோஹித் குமார் என்பவர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு " இப்போது நான் உங்களுக்கு ராணுவ வங்கி விவரங்களை அனுப்புகிறேன். அதை நீங்கள் உங்கள் பேங்க் அக்கவுண்டில் தொகை பெரும் நபர்கள் பட்டியலில் சேர்த்து விட்டு எனக்கு தெரியப்படுத்துங்கள்" என்றார். பின்னர் " எந்த வங்கியில் நீங்கள் ராணுவ அக்கௌன்ட்டை சேர்க்கப்போகிறீர்கள்" என்று கேட்டார். நான் " பாரத ஸ்டேட் பேங்க்" என்றேன் . அவர் " எங்களுக்கு அந்த பாங்கில் அக்கௌன்ட் இல்லை. ஐசிஐசிஏஐ பாங்கில் அக்கௌன்ட் உள்ளதா" என்று கேட்டபோது " இருக்கிறது" என்றேன். " அப்படியானால் அந்த அக்கௌண்டில் எங்களது விவரங்களை சேர்த்துவிட்டு, மூன்று மணி நேரத்திற்கு பிறகு எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்" என்றார். நானும் அவ்வாறே செய்வதாக சொல்லி விட்டு அதன் படியே என் ஐசிஐசிஏஐ இல் அவர் கொடுத்த அக்கௌன்ட் விவரங்களை சேர்த்தேன். அவர்களது பேங்க் ஹெச்டிஎபிசி வங்கி, டெல்லியில் உள்ள ஒரு கிளை.
அன்று மாலை நான்கு மணி அளவில் ரோஹித் குமார் மீண்டும் என்னிடம் தொடர்பு கொண்டார். " இப்போது நீங்கள் என் அக்கௌண்டிற்கு 80000 ரூபாயை அனுப்புங்கள். உடனடியாக உங்கள் அக்கௌண்டில் இந்த தொகை வைப்புக்கு வந்துவிடும்" என்றார். எனக்கு விசித்திரமாக இருந்தது . எனது வரப்போகும் வாடகை காரர் எனக்கு முன்தொகை செலுத்த நான் என் முன்பு பணம் செலுத்த வேண்டும். இதை நான் அவரிடம் கேட்டபோது " எங்களது முறை reverse card முறை. நீங்கள் எங்களுக்கு செலுத்தும் தொகை மீண்டும் உங்கள் அக்கௌண்டில் வைப்புக்கு வரும்" என்று சொன்னார். எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. இப்படி பட்ட முறையை நான் கேள்விப்பட்டதே இல்லையே என்று. அவர் தொடர்ந்து " நீங்கள் ஏதேனும் சிறிய தொகையை எங்கள் அக்கௌண்டிற்கு செலுத்தி பாருங்கள். நீங்களே புரிந்து கொள்வீர்கள்" என்றார். நான் பத்து ரூபாயை அந்த அக்கௌண்டிற்கு அனுப்பினேன்; இந்த தொகை என் வைப்பிலிருந்து கழிக்கபட்டது. அடுத்த நிமிடம் என் அக்கௌண்டில் பத்து ரூபாய் வைப்புக்கு வந்தது. அதாவது நான் ராணுவ அக்கௌண்டுக்கு செலுத்திய தொகை என் கணக்கில் மீண்டும் வைக்கப்பட்டது.
ரோஹித் குமார் தொடர்ந்தார் " கவனித்தீர்களா, இதுதான் இங்கு ராணுவ கணக்கில் முறை. இப்போது நீங்கள் இதைப்போலவே 80000 ரூபாயை இந்த அக்கௌண்டிற்கு அனுப்புங்கள். அடுத்த நிமிடம் இந்த தொகை உங்கள் அக்கௌண்டில் வைப்பிற்கு வந்துவிடும்" என்றபோது எனக்கு சுருக்கென பட்டது. பத்து ரூபாய் அனுப்பியதை அவர்கள் மீண்டும் எனக்கு செலுத்திவிட்டார்கள். இப்போது பெரிய தொகையான 80000 ரூபாயை நான் அனுப்பி ஒருவேளை அவர்கள் அதை என் அக்கௌண்டில் வாய்ப்பிற்கு செலுத்தாமல் போகலாம் அல்லவா? இந்த பெரிய தொகை மீண்டும் எனக்கு வரும் என்பதற்கு என்ன உத்திர வாதம் ? என்று என் மனம் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தது. நான் சட்டென விழிப்புணர்வு அடைந்து " இந்த மாதிரி செய்வது இயல்பான முறைக்கு அப்பாற்பட்டுள்ளது. நீங்கள் உங்களுடைய ராணுவ அடையாள அட்டை, ஆதார் அட்டை இரண்டையும் எனக்கு வாட்ஸாப் செய்து வையுங்கள். நான் இங்கே செகந்தராபாத்தில் உள்ள ராணுவ அலுவலகத்தில் விசாரித்து பிறகு உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்" என்றபோது ரோஹித் குமார் அவசர அவசரமாக " என்னுடைய ராணுவ அடையாள அட்டை , ஆதார் அட்டை விவரங்களை உங்களுக்கு தர இயலாது. ஏற்கெனவே ஜெய்கிஷன் அவரது இந்த விவரங்களை உங்களுக்கு அளித்துவிட்டார்" என்று சொன்னபோது நான் " இனிமேலும் என்னுடன் நீங்கள் எந்த தொடர்பும் கொள்ள வேண்டாம்" என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில் ஜெய்கிஷன் எனக்கு போன் செய்து " தாங்கள் எதற்கு எங்கள் மேல் சந்தேகப்படுகிறீர்கள். நிச்சயமாக உங்கள் தொகை உங்களுக்கு மீண்டும் கிடைக்கும் . என்னுடைய பாதுகாப்பு தொகையும் உங்களுக்கு கிடைக்கும். தயவு செய்து ன் உயர் அதிகாரி சொல்வது போல் செய்யுங்கள் " என்றார். நான் உடனே " இனி எக்காரணம் கொண்டும் என்னுடன் தொடர்பு வைக்கக்கூடாது. அப்படி தொடர்பு கொண்டால் நான் உடனடியாக போலீசில் புகார் கொடுத்துவிடுவேன்" என்று சொன்னவுடன் " நாங்கள் மிகவும் நியாயமானவர்கள். நீங்கள் தேவை இல்லாமல் என்னிடம் சந்தேகப்படுகிறீர்கள். மீண்டும் கேட்கிறேன் நீங்கள் பணத்தை அனுப்பி வைத்தால் நிச்சயம் அது இரண்டு முறை உங்கள் அக்கௌண்டுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றபோது நான் போனை துண்டித்தேன்.
அந்த நேரத்தில் தான் எனக்கு பொறி தட்டியது . " ராணுவத்தில் பணி புரியும் சிப்பாய் எப்படி பொதுமக்கள் இருக்கும் இடத்தில குடி இருப்பார்கள்? அவர்களுக்கென்று பாராக்ஸ் மற்றும் cantonment இடம் என்று உள்ளதல்லவா? மேலும் ஆதாரபூர்வமான ஆவணங்கள் இல்லாமல் அரசாங்கமோ, அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த துறையான ராணுவமும் மற்றவர்களுக்கு எந்தவித தொகையையும் தராதே என்ற செயல்முறையும் சட்டென மனதில் வந்து தோன்றியது. நல்ல வேளை நான் தப்பித்தேன். நான் 80000 ரூபாயை செலுத்தி இருந்தால் அது என் அக்கௌண்டிற்கு மீண்டும் நிச்சயமாக வந்திருக்காது. ஏனெனில் மேற்குறிப்பிட்ட இருவரும் பொதுமக்களை ஏமாற்றி மோசம் செய்யும் குழுவினர். ராணுவத்தினர் நேரடியாக வாட்ஸாப் தொடர்பு கொள்ளமுடியுமா என்பது கூட எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் நாம் அனைவரும் அறிவோம் ராணுவம் மிகவும் உணர்திறன் ( sensitive ) துறையாகும். ராணுவத்தின்மீது நான் கொண்ட மரியாதையாலும் மதிப்பாலும் சிலகணங்கள் நான் நிலை இழந்துவிட்டேன். நல்லவேளை களவாளிகள் வைத்த எலிப்பொறியில் மாட்டவில்லை.
மேற்கூறிய நிகழ்ச்சிக்கு பிறகு அந்த இருவரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. வாசகர்களே, நீங்களும் மிகவும் கவனமாக இருங்கள். எப்படியெல்லாம் பொதுமக்களை மோசம் செய்யலாம் என்று பல வேலையற்ற கும்பல்கள் நாடெங்கும் உள்ளது. நமக்கு கொஞ்சம் சந்தேகம் என்றாலும் ஒருவரிடம் மேலும் தொடர்பை வைத்துக்கொள்ளக்கூடாது.