இந்திய ராணுவம் பெயரில் மோசடி
இந்நாட்களில் மோசடி செய்பவர்களும் மோசம் போகிறவர்களும் அதிகமாகி விட்டார்கள். தொழில் நுட்பம் எவ்வளவு வளர்கிறதோ அதே அளவுக்கு தொழில் நுட்பம் சார்ந்த ஏமாற்று மற்றும் மோசடி வேலைகளும் வளர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் எனக்கு நிகழ்ந்த இரண்டு ஏமாற்று வேலைகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
வாடகை முன்பண மோசடி
நான் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோயம்புத்தூரில் வசித்து வருகிறேன். அதுவரை 30 ஆண்டுகள் ஹைதராபாத் நகரில் ஊழியம் நிமித்தமாக குடும்பத்துடன் வாழ்ந்து வந்தேன். நான் வாழ்ந்து வந்த வீட்டை விற்றுவிடலாமா அல்லது வாடகைக்கு விடலாமா என்ற சர்ச்சை உருவாகியது. பின்னர், எங்கள் இளைய மகன் ஹைதராபாதிலேயே இருக்கப் போவதால், அவன் விருப்பப்படி வீட்டை வாடகைக்கே விட்டு விடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஏனெனில், எங்கள் அபார்ட்மெண்ட் வீடு மிகவும் விசாலமானது. ஆறு பேர்கள் தாராளமாக தங்க முடியும். இளைய மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகாததால், அவன் அவர்கள் இசைக்குழு உறுப்பினர்களுடன் அவர்களின் ஸ்டூடியோ இருக்கும் இடத்திலேயே ஒரு ஜாகை பார்த்து கொண்டு போனதால், எங்கள் வீட்டை வாடகைக்கு விட தீர்மானம் செய்தோம். நான் துரிதமாக வாடகைக்காரர் அமைய சில வலைய தளங்களில் என் வீடு வாடகைக்கு உள்ளது என்று விளம்பர படுத்தினேன்.
சில நாட்கள் கழித்து ஜெய்கிஷன் எனும் பெயரில் ஒருவர் , தான் ராணுவத்தில் வேலை செய்வதாக எனக்கு போனில் தெரிவித்தார். தான் பெங்களூரில் ராணுவ முகாமில் பணி புரிவதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் மாற்றல் பெற்று ஹைதராபாத் வரப்போவதாகவும் குறிப்பிட்டார். நான் அவரிடம் " நீங்கள் வந்து என் வீட்டை பாருங்கள். அதன் பிறகு வாடகை முன்பணம் கொடுங்கள் " என்றபோது அவர் " நான் உங்கள் வீட்டை நீங்கள் விளம்பரம் செய்த வலைய தளத்தில் பார்த்து விட்டதாகவும், வீடு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் கூறினார். நான் " என்ன இருந்தாலும் நீங்கள் நேரில் பார்த்தால் தானே உண்மையில் வீடு எப்படி இருக்கிறது, அதன் சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் தெரியும் " என்றேன். அதற்கு அவர் " அவசியம் இல்லை. நான் கூகுள் மூலம் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டேன் " என்றார்.
அதன் பின்னர் எனது வாட்ஸ்அப் நம்பருக்கு மெஸெஜ் வைத்தார். அவரது ராணுவ அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை இரண்டையும் போட்டோ எடுத்து அனுப்பினார்.
(தொடரும்)