நட்டாரை யாக்கிப் பட்டார் அகலல்கு லார்படிந்து உடம்பினான் ஆய பயன் - சிறுபஞ்ச மூலம் 17

நேரிசை வெண்பா

நட்டாரை யாக்கிப் பகைபணித்து வையெயிற்றுப்
பட்டார் அகலல்கு லார்படிந்(து) - ஒட்டித்
தொடங்கினார் இல்லகத் தன்பிற் றுறவா
உடம்பினான் ஆய பயன் 17

சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

நட்புக்கொண்டவரைச் செல்வராக்கி, பகைவரைத் தாழ்த்தி, கூரிய பற்களையுடைய பட்டாடை யணியப்பெற்ற அகன்ற அல்குலையுடைய மாதரைச் சேர்ந்து, தொடர்புற்று அகத்து முறையாயினார் மாட்டும், தாம்பிறந்த குடியிற் பிறந்தவரிடத்தும் அன்பினால் நீங்காமையும் ஆகிய இவ்வைந்தும் அரிதாகிய மக்கட் பிறப்பால் உண்டாய பயன்களாம்.

பொழிப்புரை:

தம்மோடு நட்புக் கொண்டாரைச் செல்வத்தின்கண் இணையாக்கி, பகையைக் குறைத்து, கூரிய எயிற்றுப் பட்டார் அகல்அல்குலாரைச் சேரந்து முயங்கிப் பொருந்தி, அச்சுற்றமாய்த் தொடர்பு பட்டு, முறையாயினார் மாட்டும், தாம் பிறந்த குடியிற் பிறந்தார் மாட்டும் அன்பினான் நீங்காது இப்பேற்றிப் பட்ட ஐந்தும் உடம்பு பெற்றதனானாய பயன்.

கருத்துரை:

நட்டாரை யுயர்த்தல், பகைவரைக் தாழ்த்தல், மாதரைச் சேர்தல், அவரிடத்தும் தங்குடியிர் பிறந்தாரிடத்தும் அன்போடிருத்தல் ஆகியவைந்தும், மக்கட் பிறப்பின் பயன்.

ஆக்கி என்பதன்முன் செல்வத்தில் என்பது இசையெச்சம்.

ஒருவன் சுற்றத்தார் அவனோடு நன்மையான காரியங்களில் சேர்ந்து உதவி செய்ய முயல்கின்றவராதலால் அவரை ஒட்டித் தொடங்கினார் என்றார்;

இல்லகம் - உலகம் ஏழனுருபில் ஆகுபெயராய் இல்லத்திலுள்ளவரை யுணர்த்தியது;

அன்பின் - இரண்டிடத்தும் தீபகமாக்க் கூட்டுக;

துறவாமை என்பதன் மையீறு தொக்குத் துறவா என நின்றது. உடம்பு - ஈண்டு மக்களுடம்பு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Apr-22, 3:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே