உடற்பற்று மிக்க மூடர்கள் செய்கை - திரிகடுகம் 91

நேரிசை வெண்பா

பெறுதிக்கண் பொச்சாந் துரைத்தல் உயிரை
இறுதிக்கண் யாமிழந்தோம் என்றல் - மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்
மன்னா உடம்பின் குறி. 91

- திரிகடுகம்

பொருளுரை:

தாய் தந்தை முதலிய உயிர்களை பெற்றபோது, பெற்றோர் தமக்குச் செய்த உதவியையும், தாம் அவர்க்குச் செய்ய வேண்டிய உதவியையும் மறந்து இகழ்ந்து சொல்வதும்,

அவர் தம் காலமுடிவில் நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று இரங்குவதும்,

நோய் வந்ததினால் தன்னுடைய உடல் மெலியும் போது முன் அறஞ் செய்யவில்லையே என்று தனக்குள்ளே நாணுவதும் ஆகிய இம் மூன்றும் நிலைபெறுதலில்லாத, அழியக் கூடிய உடம்பை யுடையவனிடத்தில் தோன்றும் அடையாளங்களாகும்.

விளக்கம்:

நடுவில் நிற்கும் ‘உயிரை' என்னுஞ் சொல் பெறுதிக்கண் என முன்னும், இறுதிக்கண் எனப் பின்னும் சென்றடைதலால் செய்யுங் கடமைகளைச் செய்த சிறப்புப் பற்றித் தாய் தந்தை முதலியோரை அறிவுப் பொருளாகிய உயிரென்றும், செய்ந்நன்றியறிதல் முதலிய உயிர்க்குணம் இவனிடத்துத் தோன்றாமையாகிய இழிவு பற்றி இவனை உடம்பு என்றுங் கூறினமையால், அவ்விரண்டும் முறையே அவ்வுயர்வு இழிவுகளைப் பற்றி வந்த திணைவழுவமைதி,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-22, 6:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே