காய்கறி கடையில் ஒரு அநுபவம்

அன்று பெரிய காய்கறி சந்தைக்கு சென்று, ஒவ்வொரு கடையாக பார்த்து, நல்ல காய்கறிகளை பொறுக்கி எடுத்து வாங்கினேன். கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு கடையில் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு வாங்கினேன். அப்போது எனக்கு ஒரு போன் கால் வந்தது. அது முக்கியமான நபர் என்பதால் அவருடன் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு பின், காய்கறிகாரரை பார்த்துக் கொண்ட இருந்தேன். அவரும் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்தார். நானும் அவரை உற்றுப் பார்த்தேன். அவர்" ஐம்பது ரூபாய் கொடுங்க" என்றார் அதே நேரத்தில் நானும் " ஐம்பது ரூபாய் மீதி கொடுங்க" என்றேன். அவர் " நீங்கள் தான் எனக்கு ஐம்பது தரவேண்டும் என்றார் " நான் " நான் நூறு ரூபாய் உங்களுக்கு தந்தேன். நீங்கள் தான் எனக்கு பாக்கி ஐம்பது ரூபாய் தர வேண்டும் " என்றேன். அவர் ஆச்சரியமாக என்னை பார்த்து " ஐயா, நீங்கள் இன்னும் பணமே எனக்கு தரவில்லை. அப்புறம் எப்படி நான் பாக்கியைத் தருவது " என்றவுடன் எனக்கு சட்டென கோபம் வந்துவிட்டது. " நீங்கள் யோக்கியமான வியாபாரி தானா? என்று கேட்டேன். அவர் ரோசமுடன் " இன்று இல்லை நேற்று இல்லை முப்பது வருடங்களாக நான் மிகவும் யோக்கியமான வியாபாரியாகத் தான் வியாபாரம் செய்து வருகிறேன் " என்று உணர்ச்சி வசப்பட்டு சொன்னார். நான் " அப்படி என்றால் எப்படி நான் உங்களுக்கு நூறு ரூபாய் தரவில்லை என்கிறீர்கள் " என்று பதட்டமான குரலில் கேட்டேன். அந்த நேரத்தில் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. " சரி சார், உங்கள் வார்த்தையை நான் நம்புகிறேன். இந்தாருங்கள் மீதி ஐம்பது ரூபாய் " என்று சொல்லி என்னிடம் பணத்தை கொடுத்தார். நான் " நன்றி " என்று சொல்லி விட்டு என் இரண்டு காய்கறி பைகளையும் பிடித்து தூக்கி எடுக்கையில், அதன் கீழே நூறு ரூபாய் நோட்டு ஒன்று பிரகாசமாக தென்பட்டது.
நான் வெட்கி தலை குனிந்து, தலை குனிந்து அந்த நோட்டை எடுத்து, அதனுடன் அவர் கொடுத்த ஐம்பது ரூபாயயையும் சேர்த்து அவரிடம் " மிகவும் மன்னிக்க வேண்டும் ஐயா. நான் நோட்டு தவறி கீழே விழுந்து விட்டதை கொஞ்சம் கூட கவனிக்கவில்லை என்னுடைய கடுமையான வார்த்தைகளை மன்னித்து விடுங்கள் " என்று பணிவான குரலில் சொல்லியபடி கொடுத்தேன்.
அந்த அற்புதமான கடைக்காரர் எனக்கு ஐம்பத்தைந்து ரூபாயை கொடுத்தார். நான் " ஐயா, ஐம்பதுக்கு பதில் நீங்கள் எனக்கு ஐம்பத்தைந்து ரூபாயை கொடுக்கிறீர்கள். இந்தாங்க ஐந்து ரூபாய் என்று சொன்னபோது அவர் " தெரிந்து தான் கொடுத்தேன் . இதைக் கொடுத்தாலும் எனக்கு லாபமாத்தான் இருக்கும் " என்று சொன்னபோது " ஒவ்வொரு நாளும் காய்கறி விற்று அதில் கிடைக்கும் லாபத்தில் வாழ்க்கையை நடத்துபவர் என்னை விட எவ்வளவு உயர்ந்து நிற்கிறார் " என்று நினைத்து வியந்தபடி , என் அவசரத் தன்மையை நொந்தபடி, காய்கறி பைகளுடன் வீடு நோக்கி நடந்தேன்.

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (9-Apr-22, 9:54 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே