சிலுவையும் புனிதமானது

சிலுவை.....
ஒரு புனித சின்னமா? - இல்லை
ஒரு புராதான சின்னமா? - இல்லை
ஒரு அவமான சின்னமா?
சிலுவை.....
மனித இனத்தின்
ஆசை....அகங்கார....
ஆட்சி.....அதிகார....
அடக்கு முறைகளின்
அவமான சின்னம்.
சிலுவை.....
தெய்வமகனை அவமதித்து
தெருவெல்லாம் அலைக்கழித்து
சாகடித்ததற்கான
ரத்த சாட்சி.
பொய்மையின் வாயடைத்த
உண்மையின் நிர்வாண காட்சி.
சிலுவை....
மரமாய் மரத்துப்போன
மனித மரங்களின்
உயிர் சாட்சி.
பிதாவே இவர்களை மன்னியும்
என்றுரைத்தும்
மன்னிக்காத மனித மிருகங்களின்
மன சாட்சி.
மானபங்கப்பட்டாலும்
மங்காது ஒளி சிந்தும்
உன்னத காட்சி.
சிலுவையை காணும்போது...
புனிதம் எங்கே தோன்றும்?
புனிதம் கெட்டுப்போன
புண்ணிய ஆத்மாக்கள்
பண்ணிய அட்டகாசங்கள்
ஆடிய ஆட்டங்கள்தான்
கண்களில் தெரிகிறது...
கண்ணீர் நிறைகிறது.
எத்தனை ரத்தம் சிந்தி
கழுவினாலும் மாறாத கழுவு...
மனிதமனங்களின் கழிவு...
இங்கு கூட்டலாய்த் தெரிகிறது.
கழுதைமேல் ஏறியதால்
கழுதைக்கு மரியாதை...
இரத்தின கம்பள விரிப்பு...
குருத்தோலை மலர்களால் வரவேற்பு.
சிலுவையில் ஏறியதால்...
இம்மாமனித கழுதைகளுக்கு
பாவ மன்னிப்பு...
இறையின் அரவணைப்பு...
சிலுவைக்கு மரியாதை...
சிலுவையும் புனிதமானது.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (15-Apr-22, 10:03 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 102

மேலே