அனுபவம் 3
“ஜெயமோகனுடைய 'தேவி' கதையை மறுபடி நேற்று வாசித்தேன்.
பொதுவாக, நிறைய கதைகளின் வாசிப்பில், இந்தக் கதையில் வருகிற இவன்,இவள்,இவர் நான் தான் என்று தோன்றும் . அல்லது அப்படி அவர்களாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.”
-வண்ணதாசன்
இதனை வாசித்த கணம் எனக்கு ஜெயமோகனின் ‘தேவி’ சிறு கதையை வாசிக்கத் தோன்றியது. தேடிக் கண்டெடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.
ஆரம்பம்
ஒரு படைப்பாளர் குழு நாடகமிடுவதற்காக பாத்திரத்திற்கான நடிகைத் தேடலுடன் தொடங்குகின்றது.
எழுத்தில் இத்தனை நகையுணர்வை வரிக்கு வரி கொண்டு வரமுடியுமா என்று நான் வியந்த கணங்கள் அது!
என்னையறியாமல்்வாய்விட்டு சிரித்துக் கொண்டே இருந்தேன். கதை வாசிப்பில் இது ஓரு புதுஅனுபவம். வழமையாக வரும் வாசிப்பில் நகைச்சுவையை புன்முறுவலுடன் கடந்து செல்லும் எனக்கு.
கதை நகர நகர ஓரு நாடகம் எழுதி இயக்குவதிலுள்ள சிரமங்களும் அர்ப்பணிப்பும் புரியத் தொடங்கின.
அரங்கேறிய போது கலைஞர்களின் உத்வேகம்.
ஒரு பாத்திரமாக நடிப்பில் அனைத்தையும் வெளிப்படுத்திய பின் அவர்களுடைய திருப்தி, நெகிழ்வு, மகிழ்வு, பிறர் பாராட்டும் போதுஏற்படும் பெருமிதம் அனைத்தையும் ஒரு சிறுகதையினுள் எழுத்தில் அடக்கியிருப்பது வியப்பையும் மீறிய ஒரு புரிதலாக எனக்கு உணர்த்தப்பட்டதாய் உணர்ந்தேன்.
மேடையேறியதும் கணத்தில் பாத்திரமாக மாறிய அப் பெண் அரங்கென்பது வெறும் அரங்கல்ல என்று உரைப்பது போலிருந்தது எனக்கு.
நர்த்தனி