பேணிய நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் – நான்மணிக்கடிகை 88

இன்னிசை வெண்பா

மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த
தூணின்கண் நிற்குங் களிறு 88

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

முயற்சியின்மை கெடுவாரிடத்திலேயே ஏற்படும்; தீமை மேலோர் விரும்பாமையைச் செய்வாரிடத்தில் உண்டாகும்;

நன்மகளிர் விரும்பப்பட்ட நாணத்தின் எல்லையில் நிற்பார்கள்; யானை கீழே நட்டு வலிவமைந்த தூண் வலுவில் நிலைபெறும்.

கருத்து:

கெடுவாரிடத்திற் சோம்பலிருக்கும், சான்றோர் விரும்பாதவற்றைச் செய்வாரிடத்தில் தீமை யேற்படும்;

நல்லியல்புடைய மகளிர் நாண் எல்லையில் நிற்பர்; யானை தூணெல்லையில் நிற்கும்.

விளக்கவுரை:

கெடுவார் - பின்பு கெடுவார்;

பேணாமை - காக்கத்தக்க குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்க முதலியவற்றைக் காவாமையுமாம்;

நாணின் வரை நிற்பரென்பது நாண்கெடும் தொழில்களைச் செய்யாரென்றபடி; தூண் - கட்டுத்தறி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-22, 10:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே