அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும் – நாலடியார் 201
இன்னிசை வெண்பா
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும். 201
- சுற்றந் தழால், நாலடியார்
பொருளுரை:
கருவுற்றபோது தோன்றிய வேட்கைத் துன்பமும் (feeling like eating the ash and sour mango), இடையிற் கரு சுமந்து வந்த வருத்தமும், கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும் தாய் தன் தொடையில் மகனைக் கண்டு மறந்து விட்டாற் போல, முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்த துன்பம் ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக் கண்ட அளவில் நீங்கும்.
கருத்து:
முயற்சிகளினிடையே தோன்றுந் தளர்ச்சியை நீக்குதற்கு அவ்வப்போது ஆராய்ந்து சூழ்தற்குரிய சுற்றத்தார் இன்றியமையாது வேண்டியிருத்தலின், அவரை எஞ்ஞான்றும் தழுவி யொழுகுதல் வேண்டும்.
விளக்கம்:
‘வயா' வென்பதைத் தொல்காப்பிய வுரையில்1"கருப்பந்தாங்கி வருத்தமுற்று, நுகரப்படும் பொருண் மேற்செல்லும் வேட்கை" என்பர் நச்சினார்க்கினியர்.
ஈன்றக்கால் என்பதை ஈண்டு, ஈன்ற அக்கால் என்று பிரிக்க.
மகனென வழக்கு நோக்கி ஆண்பாலாகக் கூறினாரேனும் ஏனைப்பாலுக்கும் ஒக்கும்.
தான் அசாவினால் உற்ற வருத்தமெனவும், தன் உசாக்கேளிரெனவும் கொள்க.