கருனையைப் பேரும் அறியார் நனிவிரும்பும் தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும் – நாலடியார் 200
நேரிசை வெண்பா
பெருமுத் தரையர் பெரிதுவந்(து) ஈயுங்
கருனைச்சோ(று) ஆர்வர் கயவர்; - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பும் தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும் 200
- தாளாண்மை, நாலடியார்
பொருளுரை:
முயற்சியில்லாத கீழ் மக்கள், பெருமுத்தரையர் என்பார் மிக மகிழ்ந்து அளிக்குங் கறிகளோடு கூடிய உணவை உண்டு வாழ்நாட் கழிப்பர்; கறிகளைப் பேர்தானும் அறியாத முயற்சியாளர்கள் மிகவும் விரும்புகின்ற தம் முயற்சியுடைமையாற் கிடைத்த நீருணவும் அவர்க்குத் தேவருணவாக மாறி மெய்யின்பந் தரும் என்பது உறுதி..
கருத்து:
தன்முயற்சியால் உண்டானது நீருணவேயாயினும், அஃது அமிழ்த ஆற்றல் உடையதாய் நலம் பயக்கும்.
விளக்கம்:
பெருமுத்தரையர் என்போர், இச் சிறப்புப் பெயருடன் இச்செய்யுளியற்றிய ஆசிரியர் காலத்தில் ஈகையும் செல்வமும் வாய்ந்து புகழுற்று விளங்கிய ஒருசார் உயர்குடும்பத்தினர் ஆவர்.
"நல்கூர்ந்தக் கண்ணும்பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவாதார்" என்று இந்நூலில் மேலும்1 இவரது மாட்சி கூறப்படுகின்றது.
பிறர் தரும் சோறு ஆர்வார் கயவர் என்றபடி. இடைவிடாத முயற்சியினால் நல்ல உணவும் உண்பதற்கு நேரம் வாயாதவர் என்றும் கருமமே கண்ணாயினார் உயர் உணவிற் கருத்திருத்தாரென்றும் உணர்த்துதற்குக் ‘கருனையைப் பேரும்அறியார்' என்று முயற்சியாளரைக் குறித்தார்.
அவர்நனி விரும்பும் தாளாண்மை நீரும் என்க. நீரென்றது புல்லரிசிச் சோற்றில் ஊறிய நீர். விடும்: துணிவுப் பெருளுணர்த்திற்று.