அஃதன்றி அணங்கல் வணங்கின்று பெண் – நான்மணிக்கடிகை 89
இன்னிசை வெண்பா
மறையறிப அந்தண் புலவர்; முறையொடு
வென்றி யறிப அரசர்கள்; - என்றும்
வணங்கல் அணிகலஞ் சான்றோர்க்கு; அஃதன்றி
அணங்கல் வணங்கின்று பெண் 89
நான்மணிக்கடிகை
பொருளுரை:
அந்தண்மையுடைய அறிஞர்கள் நான்மறைப் பொருளை அறிவார்கள்; மன்னர்கள் நடுவு நிலைமையோடு வெற்றியும் அறிவார்கள்;
பெருந்தகைமை நிறைந்தவர்களுக்கு எப்பொழுதும் வணங்குதலே அணிகலம் போல்வதாம்; அதுமட்டுமல்லாமல், கணவனையல்லாத வேறு தெய்வங்களை பெண்மக்கள் வணங்குதல் இல்லை.
கருத்து:
அந்தணர் மறை யறிப; அரசர் முறையும் வெற்றியும் அறிப; சான்றோர்க்கு அணிகலம் என்றும் வணக்கமுடையராய் இருத்தல்; பெண்டிர் கணவனையன்றி வேறு தெய்வந் தொழார்.
விளக்கவுரை:
புலவருள் அந்தண்மையுடையோர் அந்தணரெனப் படுவராகலின், ‘அந்தண் புலவ' ரென்று விதந்துரைக்கப்பட்டது.
முறை - குடிகளையாளும் அறமுறை; வென்றி - பகைப் புறங்காணும் வெற்றி;
அஃதன்றி யென்றது, வாளா என்னுங் கருத்தில் வந்தது;
அணங்கல் தெய்வத்தை யுணர்த்தியது;
அணங்குதல் - விரும்புதல், அஞ்சுதல்; அணங்கை எனவும் பாடம்