அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனுந் தமராயார் மாட்டே இனிது – நாலடியார் 207

இன்னிசை வெண்பா

நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்; - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனுந்
தமராயார் மாட்டே இனிது 207

- சுற்றந்தழால், நாலடியார்

பொருளுரை:

காலத்தில் பெற்றாலும் தம் உறவாகாதவர் வீட்டின் ஒப்புரவோடு கூடிய சூடான கறியுணவு வேப்பங்காயை ஒத்தது; நீ கேள்; பிற்பகற் போழ்தில் கீரையுணவு இடுவராயினும் உறவினரானோரிடமே இனிமையாயிருக்கும்.

கருத்து:

சுற்றத்தார் உதவியே இன்பந் தரும்.

விளக்கம்:

நாள் என்றது, நாளின் முதற்காலம்; முற்பகல்.

1 நள்ளாதார் - நண்ணாதவர்; அன்பினால் அணுக்கம் இல்லாதவர், உதவும் எண்ணத்தோடு கூடியதாயினும் என்றற்கு ‘வேளாண்மை' என்னுஞ் சொற்கொடுத்துக் கூறப்பட்டது.

‘நாள்வாய்' என வந்தமையின் வெங்கருனை யென்னுமிடத்து ‘வெம்' என்பது வெப்பம் உணர்த்திற்று.

கருனை - கறிகளோடு கூடிய உணவு.

‘கருனை'யென்பதும் ‘அடகு' என்பதும் முறையே உணவின் உயர்வு தாழ்வு குறித்தற்கு வந்தன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Apr-22, 9:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே