உப்பிலிப் புற்கை உயிர்போற் கிளைஞர்மாட்டு எக்கலத் தானும் இனிது – நாலடியார் 206
இன்னிசை வெண்பா
பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலொ(டு) அமரார்கைத்(து) உண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போற் கிளைஞர்மாட்(டு)
எக்கலத் தானும் இனிது 206
- சுற்றந்தழால், நாலடியார்
பொருளுரை:
பொன்னாலான உண்கலத்தில் இட்டுவைத்த புலியின் நகத்தைப் போன்ற சிறந்த சோற்றை, சர்க்கரையோடும் பாலோடும் மனம் பொருந்தாதவரிடத்திலிருந்து உண்ணுதலைவிட,
உப்பும் இல்லாததான புல்லரிசிக் கஞ்சியை உயிர் போன்ற சுற்றத்தாரிடமிருந்து எந்தக் கலத்தினாலும் உண்ணுதல் நன்று.
கருத்து:
உள்ளன்புடைய சுற்றத்தார் எளியவராயினும் அவரே இன்பந் தருபவராவர்.
விளக்கம்:
புழுக்கல், அவித்தெடுக்கப்பட்ட சோறு, அமரார் - உள்ளன்பில்லாதவர்,
உயிர் போற் கிளைஞர் என்றார். உள்ளன்புடையவரென்னும் பொருட்டு,
உதவும் பொருளே நன்மை தருவதன்று, உதவுவோர் சால்பே நன்மை தருவதாமாகலின் இங்ஙனங் கூறினார்