பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும் திங்கள் மும்மாரிக்கு வித்து – திரிகடுகம் 98
இன்னிசை வெண்பா
செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து. 98
- திரிகடுகம்
பொருளுரை:
வேள்விச் செந்தீயை வளர்க்கின்ற அந்தணர்கள் தமக்குரிய அறத்தை மறவாது வாழ்தலும்,
கொடுமையாகிய கோபத்தைக் காட்டுகின்ற அரசன் முறையாக ஆளும் வழியில் சேர்ந்து நடத்தலும்,
பெண்ணுக்கு உரிய குணம் அமைந்தவள் தன் கணவனுடைய குறிப்பின் வழியில் நடத்தலும்
ஆகிய இம் மூன்றும் மாதந்தோறும் பெய்யவேண்டிய மூன்று மழைக்கும் காரணங்களாம்
கருத்துரை:
அந்தணர் மறைவழி நடத்தலாலும், அரசன் செங்கோல் நெறி பிறழாததாலும், மனைவி கணவனுக்கு இசைந்து நடப்பதாலும் திங்கள் மும்மாரி பொழிந்து நாடு செழிக்கும் எனப்படுகிறது.
தீக்களில் வேள்வித்தீ சிறந்ததாதலால் வேள்வித்தீயைச் செந்நீ என்றார்.