சேத்திரத் திருவெண்பா - பாடல் 24 - செழுந் திருமயானம்
சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.
உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர். 24
- சேத்திரத் திருவெண்பா
குறிப்புரை :
(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).
இவ்வெண்பா, '’செழுமை பொருந்திய திருமயானம் எனப்படும் கோயிலுள்ள இறைவனைச் சேர்ந்து வணங்கு’ என்று கூறுகிறது.
பொழிப்புரை:
’நெஞ்சமே! நோயின் தன்மையால் கண் தெளிவாகத் தெரியாமல் உன் பார்வை மறைக்க, இறவாமல் வாழ்வதற்கு ஏதுவான மருந்தாகிய இதனைச் சாப்பிடு என்று சுற்றத்தார் உன் கையைப் பிடித்து எதிரே உள்ள மருந்தைக் காட்டிய பொழுது மெல்ல எழுந்து இருமியபடி, மருந்தினை உண்ண முடியாமல் எனக்கு மருந்து வேண்டாம் என்று சொல்லுமுன் செழுமை பொருந்திய திருமயானம் எனப்படும் கோயிலுள்ள இறைவனைச் சேர்ந்து வணங்கு’ என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.
குறிப்புரை:
உய்யும் மருந்து - இறவாமல் வாழ்வதற்கு ஏதுவான மருந்து. உற்றார் – சுற்றத்தார்,
கண் தெரியாமையால் கையைப் பிடித்துக் காட்ட வேண்டிய நிலை.
பைய எழுந்து - மெல்ல எழுந்து.
உண்ண முடியாமையால் `யான் வேண்டேன்` என்றல்.
`திருமயானம்` என்பது சில தலங்களில் உள்ள கோயில்களின் பெயராய் அமைந்துள்ளது.
திருமயானம் (கச்சி, கடவூர், நாலூர்)
கச்சி மயானம், கடவூர் மயானம், நாலூர் மயானம்.