அவளில்லாமல்

இந்த கவிதையை 1974 ம் வருடம் எழுதியது

இறக்கும் தருவாயில் மனைவி கணவனிடம்..,
நான் இறந்தபிறகு வேறு ஒருத்தியை
மணந்துக்கொள்ள கட்டளையிட்டு
இறந்து விடுகிறாள் . அவள் இறந்தவுடன் கணவன்
"காலதேவனிடம் புலம்புவதை "அவளில்லாமல்"
என்ற தலைப்பில் எழுதியது ..

மனம் ஒன்றை ஏன் படைத்தாய் இறைவா
நினைவு அலையை ஏன் அதில் நீந்தவிட்டாய்
மறக்க முயல்கிறேன் நினைவுகளை இறைவா --ஆனால்
மறக்க முடியவில்லையே இறைவா ..!!

நிலவில்லா வான் உண்டோ இறைவா
நீரில்லா நிலம்தான் உண்டோ இறைவா
அவள் இல்லாமல் நான் ஏது இறைவா
அவளை என்னிடமிருந்து பறித்தது ஏன் ..??

எனை விடுத்து அவளை மட்டும் பறித்தாய்
ஏன் எனையும் சேர்த்து பறித்துக்கொள்
இங்கும் அங்குமாக அலைபாயுதே மனம்
எங்கும் நிலைக்க அருள்செய்வாய் இறைவா ..!!

அன்ன ஆகாரமின்றி உயிர்வாழ்வேன் --ஆனால்
அன்னம் அவளில்லாமல் எப்படி உயிர் வாழ்வேன் --என்
அன்னத்தைத் திருப்பிக் கொடு இறைவா
அன்னதானம் செய்கிறேன் ஏழைகளுக்கு ..!!

பொன் வேண்டாம் இறைவா எனக்கு
மண்ணும் வேண்டாம் இறைவா எனக்கு
இல்லறம் இனிது நடக்க எனக்கு
இல்லாளை அளித்தால் இனிது இறைவா ..!!

மறக்க முயல்கிறேன் மறைந்தவளை ---ஆனால்
மறக்க முடியவில்லை அவள்தன் நினைவை
மறுக்க முயன்றேன் மறுமணம்புரிய -- ஆனால்
வெறுக்க முடியவில்லை தேவியின் கட்டளையை ..!!

அவள் எனக்கிட்ட கட்டளையை
அவள் நெஞ்சம் குளிர செய்கிறேன் -- ஆனால்
அவளுடன் மஞ்சத்தில் மயங்கிய மனம்
அவள் இல்லாமல் எங்ஙனம் உறங்கும் ..??

தேவனே நினைவலைகளை மனதில் படரவிடாமல்
என்னுடனே தொடர விடாமல் அழித்துவிடு
அரச கட்டளையாக இதனை எண்ணாமல்
அன்பு கோரிக்கையாக ஏற்றுக்கொள் இறைவா ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Jun-22, 12:22 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1128

மேலே