நினைப்பவனும் தெய்வம் தான்
ஆயிரம் கஷ்டங்கள்
அணிவகுத்து நின்றாலும்
ஆண்டவனை துதிக்காமல்
அவன் ஒரு நாளும்
இருந்ததில்லை
ஆலயம் போனாலும்
இறைவனின் பாதம் பட்ட
இடத்தையும் வணங்குவான்
மறக்காமல் இருப்பதற்கு
பத்தியும், சூடமும் ஏற்றி
பக்தியை எப்போதும்
புதுப்பித்துக் கொள்வான்
இருக்கும் நிலையும்
எப்போதும் நிலைக்க ,
வேண்டிக் கொள்வான்
கடவுளும் இன்று வரை
கைவிடாமல்—தனது
பார்வைக்குள் வைத்திருந்தார்
நாளெல்லாம் அவன்
நம்பிக்கையோடு
ஆலயத்துக்கு வெளியில்
அமர்ந்து பிச்சையெடுத்து
இன்று வரை
அவன் உயிர் வாழ்வது
இறைவன் கொடுத்தது தானே !
கடவுள் நல்வாழ்வு காட்டாதபோதும்
இறைவனை கடைசி வரை மறவாமல்
நினைப்பவனும் தெய்வம் தான்