பிறப்பிறப்பு மூப்புப் பிணியென்றிந் நான்கும் மறப்பர் மதியிலா மாந்தர் - – அறநெறிச்சாரம் 117

நேரிசை வெண்பா

பிறப்பிறப்பு மூப்புப் பிணியென்றிந் நான்கும்
மறப்பர் மதியிலா மாந்தர் - குறைக்கூடாச்
செல்வம் கிளைபொருள் காமமென்(று) இன்நான்கும்
பொல்லாப் பொறியறுக்கப் பட்டு 117

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

பிறப்பு இறப்பு மூப்பு நோய் என்ற இந்நான்கினையும் அறிவில்லாத மக்கள் மறந்து வாழ்வர்;

அவர் அவைகளை மறத்தற்குக் காரணமாய குறையாத செல்வம், சுற்றம், (மக்கள்) செல்வம், காதல் மனைவி ஆகிய இந்நான்கும் இடையே தீயூழ் வர ஒழிந்து போயினும் போம்,

ஆதலால் அறிவுடையார் பிறப்பு முதலியவற்றை மறவார்.

குறிப்பு:

''குறைகூடாச் செல்வம் கிளைபொருள் காமம் என்றிந் நான்கும் பொல்லாப் பொறியறுக்கப்பட்டுப் போமென்னும் மதியிலா மாந்தர் பிறப்பிறப்பு மூப்புப் பிணியென்றிந் நான்கும் மறப்பர்'' எனக் கொண்டு கூட்டலுமாம்.

பொருள் - மக்கள்; ''தம்பொரு ளென்பதம் மக்கள்'' என்பதனாற் கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jun-22, 8:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே