திருவதிகை வீரட்டானம் - பாடல் 4
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).
பாடல் எண்: 4 - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மடமான் மறிபொற் கலையு மழுப்பாம் பொருகையில் வீணை
குடமால் வரையதிண் டோளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாக மிருநில னேற்ற சுவடும்
தடமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
பொழிப்புரை:
ஒரு கையில் மான்குட்டி, ஒரு கையில் மான் தோல் ஆடை, ஒரு கையில் மழுப்படை, மற்றொரு கையில் பாம்பு, மற்றொரு கையில் வீணை இவற்றை உடையவராய்,
மேற்றிசைப் பெருமலையை ஒத்த திண்ணிய தோள்களும், வில்போல் வளைந்து ஆடுகின்ற கூத்தின் பயிற்சியும், பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடுடைய திருமால் தழுவிப் பொருந்தியிருக்கும் இடப்பாகமும்,
நீர்த்துறைகள் அமைந்த கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டானருடைய அடியாரும், உறவினருமாம் நாங்கள்.
ஆதலின் எங்களுக்கு அஞ்சுவதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனி அஞ்சுவதற்குரிய எதுவும் வரப்போவதும் இல்லை.
குறிப்புரை:
மடமான் - இளமான். மறி - கன்று. கலை - ஆண்;. கலைமான் கன்று ஒரு கையில் உண்டு.
மடமான் மறியும் பொற்கலையும் மழுவும் பாம்பும் வீணையும் என்றதாகக் கொள்ளின் பொற்கலை அழகிய ஆடையாம். மான்தோலை ஆடையாக அணிந்த சிவபெருமான்.
ஒரு கையில் வீணை. வேயுறு தோளிபங்கன் ........ மிக நல்ல வீணை தடவி ..... திங்கள் கங்கை ..... அணிந்து உளமே புகுந்த என்ற பாடலை நாமறிவோம்.
குடமால் வரை - மேற்றிசைப் பெருமலை. வரைய தோள் - மலையை ஒத்த தோள்.
குனிசிலை - வளைந்த வில். சிலைக்கூத்து - வில்போல் வளைந்து குதிக்குங் கூத்து.
குதித்து என்பதன் மரூவே கூத்து.
பயில்வு - பயிற்சி. இடம் - இடப்பால். மால் - திருமால். இருநிலம் - பெரிய மண்ணுலகு.
ஏற்ற – தாங்கிய, சுவடு - அடையாளத் தழும்பு.