திருவதிகை வீரட்டானம் - பாடல் 5

திருவதிகை வீரட்டானம் - பாடல் 5
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).

பாடல் எண்: 5 - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பலபல காமத்த ராகிப்
..பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங்
..கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும்
..வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலும்
..உடையார் ஒருவர் தமர்நாம் 5

அஞ்சுவதி யாதொன்று மில்லை
..அஞ்ச வருவது மில்லை..

பொழிப்புரை:

பலப்பல விருப்பங்களை உடையவராய், அவற்றைச் செயற்படுத்தத் துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண் யானையையும், இருளைப் போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும், வானுயர்ந்த கயிலை மலையையும், நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டானருடைய அடியாரும், உறவினருமாம் நாங்கள்.

ஆதலின் எங்களுக்கு அஞ்சுவதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனி அஞ்சுவதற்குரிய எதுவும் வரப்போவதும் இல்லை.

குறிப்புரை:

பலபல காமத்தர் - பலப்பல விருப்பங்களை உடையவர்கள்.

எண்ணியவாறே எண்ணங்களை இடையூறு நீக்கி ஈடேற்றும் கணபதியை வழிபட்டுக் கேட்கும் வரங்களைப் பலபல காமம் என்றருளினார்.

கலமலக்கிடுதல் - கலந்து பிறழச் செய்தல். நினைத்த வரங்களை எல்லாம் நல்க, அவை ஒன்றொடு ஒன்று கலந்து, பெற்ற முறையில் அன்றிப் பிறழ்ந்து பயன் கொடுக்கின்றமை பற்றிக் கலந்து பிறழ்தலாம். (கலக்கி மலக்கிட்டு)

மலக்கிடுதல் - மலங்கச் செய்தல். மலங்க – கெட, சுழல, பிறழ.

கல என்னும் முதனிலை இங்கே எச்சப் பொருட்டாய் நின்றது.

வலம் ஏந்து இரண்டு சுடர் - இருளை ஒழிக்கும் வலிமை தாங்கிய இருகதிர். ஞாயிறும் திங்களும் கண்ணாக உடையார்.

வான் கயிலாய மலை - சிவலோகம்.

நலம் - முழுகுவார் தம் கழுவாயில்லாத தீவினைகளையும் தீர்க்கும் நன்மை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-22, 4:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே