முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் கண்டு விடும் - பழமொழி நானூறு 130
நேரிசை வெண்பா
நெடியது காண்கிலாய் நீயெளியை; நெஞ்சே!
கொடியது கூறினாய் மன்ற - அடியுளே
முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் கண்டு விடும். 130
- பழமொழி நானூறு
பொருளுரை:
நெஞ்சே! தீய செயல்களைப் பிறர்க்குச் செய்யுமாறு கூறினாய்; ஆதலால் நீ அறிவு இல்லாதாய்;
(பிறர்க்குத் தீங்கு செய்தலால் வரும் பயனை) நெடுங்காலத்திற்குப் பின் அறியாய், அந்த நிலையிலே, பிறன் ஒருவனுக்குத் தீங்கினைப் பகலின் முதற்பகுதியில் செய்தான் தனக்கு வரும் தீங்கினைப் பகலின் பிற்பகுதியில் தப்பாமல் அடைவான்.
கருத்து:
முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.
விளக்கம்:
நெஞ்சே, தீங்கின் பயனை அடைதற்கு நீண்ட நாட்கள் செல்லும் என்று நினைத்தலை ஒழி. உடனேயே பயனை அடைவாய். ஆதலால், யாரிடமும் தீங்குசெய்ய நினைத்தலை விட்டுவிடு.
'முன்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பின்பகல் கண்டு விடும்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.