களிப்பினும் சோரப் பொதியாத வாறு - பழமொழி நானூறு 131

நேரிசை வெண்பா

செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்
தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் – தம்மேற்றாம்
வீரஞ்சொல் லாமையே வீழ்க களிப்பினும்
சோரப் பொதியாத வாறு. 131

- பழமொழி நானூறு

பொருளுரை:

தருக்குற்று ஒழுகும் பகைவரை வென்றவர்கள் தம்மீது புகழ்ந்து பிறர் சிறப்பிக்கும் பொருட்டு களிப்புற்ற இடத்தும் தம்மிடத்து உளவாம் வீரம் சொல்லாது இருத்தலையே விரும்புக;

அது, தன்னிடம் உள்ள குற்றங்களைத் தானே ஒன்று சேர்த்து மிகுத்துக் கூறாதவாறு ஆகும்.

கருத்து:

வீரர்கள் பிறர் பாராட்டும் பொருட்டுத் தம்மைத் தாம் புகழ்தல், தம்முடைய குற்றங்களைத் தாமே கூறுதல் போலாம்.

விளக்கம்:

'பிறர்' என்றார், போரிடத்துத் தன்னைத்தான் சிறப்பித்துக் கூறுதல் அமையும் என்றற்கு. 'சோரப் பொதியாதவாறு' என்பது, சோரம் என்றிருத்தல் வேண்டும். சோரம் குறைவு, குற்றங்கள் எனப்பட்டது.

வீரஞ்சொல்லுதல் தன்னுடைய குற்றங்களைத் தானே கூறுதலை யொக்கும். இஃதே கூறுங் கருத்துடையார் மாற்றிக் கூறினார். வீழ்தல் - விரும்புதல்

'சோரம் பொதியாத வாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-22, 7:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே