கோடையின் வாடை
மதுதரமுடியா மயக்கம் தரும்
மழைகாணாத மண்வயல்...
கங்கையிலும் கிடைக்காத புனிதநீர்
கவின்மிகு அழகுடன் கானல்நீர்...
அமேசான் காணாத அரிய பொக்கிஷம்
சாகா வரம்பெற்ற சப்பாத்திக்கள்ளி
இவளொரு இலையில்லா சிலை
எங்கள் செழுமையின் சாட்சி...
நீந்தத் தெரியாத சிறுவர்கள்
நலன்கருதி வற்றிப்போன கண்மாய்...
எங்கள் உள்ளம் போலவே
வானில் வெள்ளை மேகங்கள்...
மதிய வேளையில் மகளிரின் அணிவகுப்பு
கண்கவர் குடங்களுடன் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு...
மழை வந்தவுடன் இந்த மயக்கம் தீர்ந்திடுமே!
குளிர் வந்தவுடன் இந்தக் கோடை போயிடுமே!
கோடையின் வாடையில் குளிர்காய்ந்த நாங்கள்
குளிரின் வெம்மையில் வெந்து சாவோமே!
மழையே வராதே, எங்கள் மண்ணைத் தொடாதே
மழைதொடாத மண்ணின் மகத்துவத்தை மாற்றாதே...
எங்கள் வேண்டுதலை மண்மகள் நிச்சயம் ஏற்பாள்
கோடைக்கு மாலையிட்ட அவள்
மழையின் குரலுக்கு நிச்சயம் செவிசாய்க்க மாட்டாள்...
அதோ வந்துவிட்டான் எனது நண்பன், நடுவானில் கதிரவன்
ஆஹா! என்னே இதமான கோடையின் வாடை!!!