கடவுளின் கடை

பிஸியான பிசாசும் ஈ ஓட்டும் கடவுளும்..
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


கடை விரித்துள்ளார்கள்
கடவுளும் பிசாசும்
உள்ளங்களுக்குள்ளே !

கனத்துக் கேட்கிறது பிசாசின் கூக்குரல்!

கவர்ச்சியான பொய்மைகள்
உள்ளத்தைக் கொள்ளை கொள்ள
எல்லா உள்ளங்களும் முண்டியடிக்கின்றன !

பிசாசின் பெரிய கடையில்
வளமான வணிகம் !

கத்திகத்தி தொண்டைக் கமற
மெலிந்து போகிறது
கேட்பாரற்ற
மேலோனின் மென்குரல் !

போணியாகாத மெய்மைகளைப்
போற்றிப் பாதுகாக்கிறார்
கடவுள்!

வாங்க எத்தனிக்கும் சிற்சிலரும்
உள்ளே நுழைய இயலாத
குறுகிய வாசல் !

கடவுள் வாசலை இடிக்க வேண்டும்
இன்றேல்
கடையை மூடிட வேண்டும்
முணுமுணுத்துத் திரும்புகின்றனர்
திருப்தியில்லாப் பயனாளிகள் !!

- யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (25-Jun-22, 9:03 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 89

மேலே