கீழே விழும பலன்

கீழே விழும் பலன்

பல்லி விழும் பலன் கேட்டிருப்பீர்கள். கீழே விழும் பலனைப்பற்றிக கேட்டு இருக்கமாட்டீர்கள். எனக்குத் தெரிந்து கீழே விழாத முதியவர்கள் சரித்திரத்தை நான் இன்று வரையில் கேள்விப்பட்டதே இல்லை.கீழே விழுந்து கை,கால் முறித்துக்கொள்ளாதவர்கள் எவரும் இல்லை. அப்படி ஒரு வீட்டில் நடைபெறவில்லை என்னில் அந்த வீட்டில் அனைவரும் முதியோராவதற்கு முன்பே விடை பெற்றுச்சென்று இருக்க வேண்டும். வயதிற்கும் வழுக்கி விழுவதற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு காலங்காலமாக இருந்து வருகிறது. ஏன்? நானே இதுவரையில் 14 அல்லது 15 முறை விழுந்து இருக்கிறேன். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் கீழே விழுந்தால் அதுதான் அவர்களின் கடைசி விழுகை எனலாம்.
After 80 if you have a fall
That will be your final call.இப்படிக் கீழே விழுவதன் பலன் அநேகமாக கை, கால உடையலாம்.அல்லது தலை மோதி மண்டை பிளக்கலாம். ஆயுளுக்கும் நடக்க முடியாமல போகலாம். அல்லது ஒவ்வொரு அசைவுக்கும் அவர்களுக கு உதவி தேவைப் படலாம். எனக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட வீழ்ச்சி எந்த விதமான பலனை எனக்கு அளித்தது என்பதைத்தான் நான் கீழே விவரித்து உள்ளேன்.

அன்றொரு நாள். விடியற்காலை, விடிந்துவிட்ட நேரம். உடம்பை முறுக்கிவிட்டுக்கொண்டு படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியின் துணை கொண்டு கட்டிலில் இருந்து, அதாவது படுக்கையில இருந்து, எழ முயன்றேன். . அதற்காக என் அருகிலிருந்த நாற்காலியின் மீது கை வைத்து அழுத்த , அது என் முழு அழுத்ததிற்கும் ஈடு கொடுக்க மறுத்து தன் போக்கில் சாய, என் நிலை தடுமாறி என் தலை பூமியை நோக்கி மட்டென்று மோதியது. இது நியூட்டனின் இரண்டாவது விதியா, மூன்றாவது விதியா என்று தெரியவில்லை. ஆனால் அது என் தலைவிதி என்று மட்டும் தெரிந்தது. அதாவது நான் தலைகுப்புற விழுந்தேன். தலையில் டணால் என்ற சப்தம். உடனே தரையையும், நாற்காலியையும் தடவிப்பார்த்தேன். அவைகளுக்கு எந்த சேதாரமும் இல்லை என்று தெரிந்தவுடன் என்தலையைத்தொட்டுப் பார்த்தேன். அதற்கும் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்று தெரிந்தவுடன். சரி. தீபாவளி ஆடம் பாம் வெடிக்குப்போகிறது என்ற பயத்தில் சுத்தமாக காது கேட்காதவர்கள் கூட தங்கள காதைப் பொத்திக்கொண்டு இருக்கும்போது அந்த ஆடம்பாம் புஸ்ஸென்று போனால் எப்படி ஏமாறுவோமோ அப்படி இவ்வளவு அமர்க்களமாக விழுந்தும் இது புஸ்வணமக ஆனதில் எனக்கு சற,று வருத்தம்தன். அதே நேரத்தில் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று சொல்வார்களே அப்படி என் பாடிக்கும் பிரெயினுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை . இருப்பினும், என் நண்பர்கள், உற்றார், உறவினர் இவர்களுக்கு இத்தகைய விபத்து நடக்கக்கூடாதே என்ற மேலான நல்லெண்ணத்தில் யாரும் பிளாஸ்டிக் நாற்காலியை நம்பி தங்கள் கனத்தை ஒரு தலைப்பட்சமாக போட வேண்டாம் என்று அறிவிக்க இந்த அற்ப சமாசாரத்தை அன்று Facebookல் போட்டேன். இதற்கான வேறொரு காரணமும் உண்டு.
ஒரு நாள் நாங்கள் பலரும் உணவுக்காக தங்கியிருந்த சீனியர் ஹோமின் வெயிடிங் ஹாலில் போடப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்தபடி எங்கள் சொர்க்க வாசல், அதாவது, டைனிங் ஹால் கதவு திறக்க காத்திருந்தோம். அந்த நாற்காலிகளில் ஒவ்வொன்றிலும் “உடையாதவை (unbreakable)” என்ற ஒரு வாசகம் பொருத்தப் பட்டிருந்தது,

அப்போது பசி யோடு ஒரு இளைஞர் அங்கே காலியாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அவர் அவருடைய அன்புக் குழந்தைகள் இருவரையும் கொஞ்சியபடி. இருந்தார். அந்த இரு குழந்தைகளும் மிகுந்த உற்சாகத்துடன் அவருடன் விளையாடி மகிந்தன. குழ்ந்தைகளுக்கு இருந்த மகிழ்ச்சியில் அவ்விரு குழந்தைகளும் அப்பாவின் மடியில் ஏறி சிரித்தும் குதித்தும் விளையாட, மள மளவென்ற சத்தம். சற்றைக்கு எல்லாம் நாற்காலி உடைந்து, தன்மீது தேவையற்ற கனத்தைப்போட்டவர்கள் மீது பழி வாங்கும் வகையில் அவர்களைக் கீழே தள்ள, அவர்கள் எல்லோரும், அப்பா உட்பட,இளம் வயதினராக இருந்தமையால் யாருக்கும் எந்த உடற் சேதமுன்றி தப்பினார்கள் ஆனால் அந்த unbreakable நாற்காலியோ பாவம் உடைந்து போனது.தன் வாக்குறுதியை, சத்தியத்தை,மீறியது.
நான் அப்போது நினைத்துக் கொண்டேன், லிஃப்டில் எத்தனை பேர், ஏறலாம், எத்தனை கனம் வரையில் தாங்கும் என்று எழுதி இருப்பதைப்போல இந்த நாற்காலிக்கும் ஒரு வரைமுறையை எழுதி வைத்திருக்கலாமோ என்று தோன்றியது. இதை எழுதிய கொஞ்ச நேரத்தில் இன்று இன்னொரு நாற்காலி சேதமானதாகக் கேள்விப் பட்டேன்.

சரி இப்போது என்கதைக்கு வருவோம். நான் தலைகுப்புற விழுந்தும் தலைதப்பிய இந்த மகத்தான நியூஸை இந்தப்பரந்த உலகிற்கு எடுத்துச்சொல்லலாம் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் இதை அன்றே சுடச்சுட Facebookல் போட்டேன்.
நான் எழுதுவதை பொதுவாக யாரும அவ்வளவாகப் படிப்பதில்லை என்ற தைரியத்தில்தான் இந்த பைசா பொறாத சமாசாரத்தை எழுதினேன். எழுதினபிறகுதான் தெரிந்தது எத்தனை பேர் அதைப்படித்தார்கள் என்று. படித்தால் பரவா இல்லையே. இனிமேல் என்ன ஆனாலும் நான் தடுக்கி விழுவதை. தலையே போனாலும் எழுதக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். இப்படி முடிவுக்கு வரக் காரணமென்ன என்று உங்களில் சிலர் கேட்கலாம். கேட்காமல் இருந்தாலும் நான் என்னவோ சொல்லாமல் இருக்கப் போவது இல்லை..
எனக்கு காது கேட்காது என்ற உண்மை உலகப்பிரசித்தம் ஆதலால், எனக்கு போன் செய்வது வெறும் வேஸ்ட் என்பதை பலர் அறிந்து இருந்ததால், எனக்கு நல்ல வேளை உடனடியாக எந்த போனும் வரவில்லை. நான் இந்த நிகழ்ச்சியை மறந்து விட்டு, மறுநாள் பேஸ்புக்கைத்திறக்கிறேன். அதில் நான் விழுந்ததற்கு என்றும் இல்லாத வகையில் 200 பேர் லைக் போட்டு இருந்தார்கள். நான் பெஸ்ட் என்று நினைத்த என் கதைகளுக்கே இதுவரையிலும் இவ்வளவு பேர் லைக் போட்டது இல்லை.
அதுமட்டுமா? எப்படி விழுந்தும் அடி வாங்காமல் தப்பினீர்கள் என்ற விவரத்தை மட்டும் 125 பேர் கம்மெண்டில் கேட்டு இருந்தார்கள். “எப்படி மண்டை உடையாமல் தப்பினீர்கள்?அந்த சீக்ரட்டை எங்களுக்கு சொல்லித்தந்தால் நங்களும் எங்களுக்கு (வய)சாகும் காலத்தில் உங்கள் உக்தியைக் கடைப்பிடித்து எங்கள் மண்டையைக் காப்பாற்றிக் கொள்வோம்” என்று எழுதி இருந்தார்கள் .
வேறு பலரும் எனக்கு வகை வகையான ஆலோசனைகளை, எப்படி விழாமல் இருக்க என்ன என்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்று ஆளுக்கொரு யோசனையை, அவரவர்குத் தோன்றிய விதத்தில் சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஒருவர் கேட்டார், நீங்கள் ஏன் பெட்டில் இருந்து எழுந்தீர்கள்? அதனால்தானே விழுந்தீர்கன என்று.
கெட்டியாக சேரைப் பிடித்துக் கொண்டு எழுந்திருப்பதுதானே. ஏன் கனமே இல்லாத பிளாஸ்டிக் சேரை நம்பி அதன்மேல்தவறாக கனம் போட்டு நாற்காலியை குடை சாயவைத்தீர்கள் என்று இன்னொருவர்.

இனி படுக்கையில் இருந்து எழுவதை அவாய்ட் செய்யுங்கள் என்று எழுதி இருந்தார் மற்றொருவர். இனி ஒருபோதும் இத்தகைய தவறை ( முட்டாள்தனத்தை எனறு சொல்வதற்குப்பதிலாக) செய்யாதீர்கள. இப்படிக்கு உங்கள் உயிர் மீது கரிசனம் கொண்ட உங்கள் அரிய (லூர்) நண்பன் எனறு ஓருவர் எழுதி இருந்தார்.
கீழே விழுவது போல் தோன்றினால் பக்கத்திலுள்ள சுவரை “கெட்டியாகப பிடித்துக்கொள்ள வேண்டியதுதானே” .
உங்கள் அரைகுறை தூக்கத்தினால் இவ்வாறு நிகழ்ந்துவிட்டது. இனி படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது மெதுவாக, நிநானமாக, அவசரப்படாமல், சாவகாசமாக, எழ வேண்டும். எங்கள் துரதிருஷ்டம், மன்னிக்கவும், எங்கள் அதிருஷ்டம், நீங்கள் விழுந்து மண்டை பிளந்து உங்களை எல்லோரும் எடுத்து ஒரு டாக்ஸியில் வாரிப் போட்டுக் கொண்டு போய் பக்கத்தில் இருந்த ஒரு டிஸ்பென்சரிக்கு எடுத்துப்போய் மண்டையில் எட்டு ஸ்டிட்ச் போட வேண்டிய நிலமை ஏற்பட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும்?( நல்ல வேளையாக இத்தோடு நிறுத்திக்கொண்டார்)
( நிறைய செலவு ஆகி இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.)
இப்படி செய்து விட்டீர்களே இனியாவது ஜாக்கிரதையாய் இருங்கள் என்று இதுவரையிலும் எனக்கு அவ்வளவாக தெரியாத ஒரு நண்பர் எழுதி இருந்தார்,
ஒரு சிலர் தங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்துக்களிலிருந்து எப்படி எல்லாம்தப்பித்தார்கள் என்றும், இன்னும் சிலர் தாஙகள் கேள்விப்பட்ட அல்லது படாத
சம்பவங்களை எல்லாம் அவற்றிறகு கண் ,மூக்கு , வாய் என்று வைத்து விஸ்தாரமாக எழுதினார்கள். அவர்கள் எழுதியதை எல்லாம் நான் இங்கு எழுதுவது என்றால் அது பொன்னியின் செல்வன, புத்தகத்தில் முதல பாகம் பாதி சைஸுக்கு வந்துவிடும். எனவே உங்கள், மற்றும் என் நலன் கருதி இதற்குமேலும் அதை எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன்.

திடீரென்று வாட்ஸ் அப் அலறியது, அமெரிக் காவில் இருக்கும் என் மகள் எனக்கு வாட்ஸ். அப்பில் போன் செய்வாள். நான் புளூ டூத் கனெக்‌ஷனால் ஓரளவு தெளிவாய் கேட்க முடியும். எனவே அவள் எனக்கு வாட்ஸ் அப்பில் போன் செய்யவே, அவள் கலிபோர்னியாவிலிருந்து வேறே ஊருக்கு
மாறுவதாக இருந்ததால் நான்
“என்ன புது ஊர் போயாச்சா?” என்று கேட்டேன்.
அவள் “ புது ஊர் இருக்கிற இடத்துலேயேதான இருக்கு. அது எங்கேயும் போகவில்லை. ஆமாம். நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்களாமே” என்று விஷயத்துக்கு வந்தாள் .

நான் விழுந்த செய்தி நியூயார்க் டைம்ஸிலும், வாஷிங்டன் போஸ்டிலும் வந்துவிட்டதா என்ன? உனக்கு எப்படி தெரியும்? என்று கேட்கவே

நீங்கள் உங்கள் Facebook ல் தும்மினால்கூட எழுதுகிறீர்களே. அதைப்பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்றாள் எரிச்சலுடன்.
பிறகு நடந்தது இதோ:

எப்படி விழுந்தீர்கள்?

தொப்பென்று விழுந்தேன்.

அதைக கேடகவில்லை. ஏன் விழுந்தீரகள்?

அது தெரியாது. படுக்கையில் இருந்து முக்காலே அரைக்கால் தூக்கத்தில், நேரம் ஆகிவிட்டதே என்ற பதைபதைப்புடன் என் அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியின் ஒரு பக்கத்தில் கனத்தைப் போட்டு அழுத்தி எழுந்திருக்க டிரை பண்ணினேனா அப்போ அந்தப் பாழாப் போன நாற்காலி

பாழாப்போன நாற்காலியா? .புதுசா .வாங்கினது என்று வாசு சொன்னானே ( வாசு அவள் அண்ணன்). அதுக்குள்ளே அது எப்படி பாழாய்ப்போனது?

அது நன்றாகத்தான் இருக்கு. இருந்தது. அந்த நாற்காலி குடை சாய்ந்து என்னை தலைகுப்புறத் தள்ளவே, அதற்கு அந்த பட்டம்.

சரி. விஷயத்துக்கு வரேன். நாற்காலி சாய்ந்ததில் நான் தலை குப்புற விழுந்து அந்த சிமேண்ட் தரையில் என் தலை ணங் கென்று மோதி..

அமெரிக்கா என்றால். தரையில் கார்பெட் இருக்கும். அங்கு கெட்டித்தரை ஆச்சே

ஆமாம், ஆமாம். கட்டாந்தரைதான் இங்கே

அப்புறம் என்ன ஆச்சு?

கட்டாந்தரைக்கு ஒண்ணும் ஆகலை. நாற்காலிக்கும் ஒண்ணும் ஆகலை

நான் அதைக்கேக்கலை. உங்க தலைக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன்.

ஒன்றும் ஆகவில்லை. நான்பேசும் பேச்சில் இருந்தே தெரியவில்லையா?

உங்க பேச்சில் இருந்துதான் கவலையுடன் நான் கேட்கிறேன்.

எதுவும் ஆகவில்லை. கவலைப்படாதே.

எப்படிக் கவலைப் படாமல் இருக்க முடியும்? நாங்கள் யாரும் பக்கத்தில் இல்லை. நீங்கள் இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.

நான் எவ்வளவோ ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன். அப்படி இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் என்மண்டை பிளந்து இருக்கும்.

நீங்கள் அடிக்கடி கீழே விழுந்து கொண்டு இருக்கிறீர்கள்.

அடிக்கடி இல்லை இதுவரையில், 1990 க் குப்பிறகு, நான் 15 தரம்தான் விழுந்து இருக்கிறேன். அதில் ஒரே ஒரு தரம் தான் என் முதுகுப் பக்கம் விலா எலும்பு ஃப்ராக்சர் ஆச்சு. மத்தத்தடவை எல்லாம்எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லாமல் தப்பிவிட்டேன்.

இதுலே பெருமை வேறே. வாகிங் ஸ்டிக்கை யூஸ் பண்ணுங்க என்றால் கேட்கமட்டேன் என்கிறீர்கள்.

தூங்கும்போது வாக்கிங் ஸ்டிக் எதுக்கு?
கனவுலே நடக்கும்போது விழாமல் இருக்கவா?

ஜோக்கா? தூங்கி எழுந்திருக்கும்போது் இந்த மாதிரி ஒரு தரம் நாற்காலியையும் கண்ணறாவியையும் பிடித்துக்கொண்டு எழுந்திருக்காமல் வாக்கிங் ஸ்டிக்கை யூஸ் பண்ணி எழுந்து இருக்கலாம் இல்லையா?

நான்வாக்கிங் ஸ்டிக்கை ஒருத ரம் யூஸ் பண்ணப்போக, அது தடுக்கி கீழே விழுந்து விட்டேன்

அப்படி வேறு விழுந்தீர்களா? எனக்குத் தெரியாதே

அதை அப்போது Facebookல் எழுத மறந்துட்டேன் போல இருக்கு.

சரி, சரி. இனிமேலாவது ஜாக்கிரதையாக இருங்கள்.
தடுக்கிவிழாமல் நடக்கக்கற்றுக் கொள்ளுங்கள் என்று எப்படி எப்படி எல்லாம் தடுக்கி விழாமல் நடப்பது என்று ஒரு பத்து நிமிஷம் லெக்சர் செய்தாள். அமெரிக்காவில் 90 வயதுக்கும் மேற்பட்ட கிழவர்கள் எப்படி ஓட்டப்பந்தயத்தில் பங்கு கொள்கிறார்கள். எப்படி எக்சசைஸ் செய்கிறார்கள் என்று விளக்கி “உங்களுக்கு ஒரு வீடியோ ஒன்று அனுப்பிகிறேன். அதில் இருக்கிற மாதிரி தினமும் 23 நிமிஷம் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் செய்தால் நீங்களும் அவர்களைப்போல மைல்ரேசில் சேர்ந்து மெடல் வாங்கலாம் என்று எனக்கு இல்லாத ஆசையைத் தூண்டினாள். நான் என்ன அவ்வளவு ஈசியாக மசியக்கூடியவனா? இருந்தாலும் போனில் சர்ச்சை செய்ய வேண்டாம் என்று சரி அப்படியே செய்கிறேன் என்றேன்.

இத்தோடு முடிந்ததா? அன்று இரவு வரையில்
பலரும் தெனாலி ராமனுக்குத்தலைவலி வந்தபோது சொன்ன வைத்தியம் போல சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆகா! நம்மைப்பற்றிக்கவலைப்பட இத்தனை பேர் என று நினைக்கும்போது புல் அரித்தது. இப்படி என்று தெரிந்து இருந்தால் தைரியமாக பல தடவை கீழே விழுந்திருக்கலாமோ என்ற ஏக்கம் தோன்றிவிட்டது.

இன்னும் சிலர பெட் ரூமில் இருந்து இரு கால்களையும் எப்படி வைத்துக்கொண்டு நாற்காலியை எப்படிப்பிடித்துக்கொண்டு எப்படி எழுந்து நடந்து இருக்க வேண்டும் என்று ஓரு அரைப்பக்கத்திற்கு மேலாக எழுதி இருந்தனர். இதற்கான வீடியோ ஒன்றையும் அனுப்பி இருந்தார் ஒருவர்.
வயதான எண்ணமே உங்களுக்குக்கிடையதா? என்ன? இன்னும 22 வயது வாலிபன் என்ற எண்ணமா? உங்க மூஞ்சியை பத்து நாளைக் கொரு தரமாவது கண்ணாடியில் பார்த்துக்கொண்டால் இந்த மாதிரி நீங்கள் அசட்டுத்தனமாக இருந்து இருக்க மாட்டீர்கள் என்று புலம்பியிருந்தார் என் வயதில் பாதி வயதான ஒரு அம்மாள்

நான் கீழே விழுந்தும் தலைதப்பின செய்தி எப்படியோ வைரல் ஆகி எனக்குத்தெரிந்த என் நண்பர்கள், விரோதிகள் என்று அனைவருக்கும் போய்சேர்ந்து விட்டது.
இந்த செய்தியை என் நண்பர் வாட்ஸ் அப்பில் போட அது இந்த உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி விட்டது.
வாட்ஸ் அப்பில் அட்வைசும், ஆறுதலும் பக்கம் பக்கமாக வர ஆரம்பித்தது. மெசஞ்சரில். பல நண்பர்களும் தப்பியதற்கு வாழ்த்துக்களும், (அப்படித்தான்நான்நினைக்கிறேன ) இறைவனுக்கு நன்றியும், ஓரு சிலர் எப்படி தாங்கள் எனக்காக செய்த பிரேயர் என்னை காப்பாற்றியது என்று ஆண்டவனுக்கு நன்றியையும், தாங்கள் வேங்கடாசலபதிக்கு வேண்டிக்கொண்ட ஸ்லோகத்தையும் எழுதி தீர்த்தார்கள் . வேறு சிலர் இ மெயிலில் பத்தி பத்தியாக எனக்கு அட்வைசுகளையும், தங்கள் நல்லெண்ணத்தையும் தொடரும் என்று போட்டு எழுத ஆரம்பித்தைப் பார்த்ததும் வழுக்கி விழுந்து உண்மையிலேயே தலையில் அடிபட்டிருந்தால் எப்படி என்கண்களில் கண்ணீர் வந்திருக்குமோ அப்படி வந்துவிட்டது.ஆனால் இது ஆனந்தக கண்ணீர.
என் தம்பி நான் விழுந்ததைக் கேள்விப்பட்டவுடன் “நான் அப்போதே நினைத்தேன். எப்போது நீ ஒரு பக்கமா சாய்ந்து நடக்க ஆரம்பித்தாயோ, அப்போதே ஒருநாள் நீ கட்டாயம் கீழே விழப்போகிறாய். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடந்தேறும் என்று நினைக்கவில்லை” என்று தன் வருத்தத்தை அவன் நான் கோணலாக நடந்து கொண்டு இருந்த போது எடுத்த ஒரு போட்டோவோடு அனுபபி இருந்தான்.
என் சகோதரிகள் இருவரும் என்னை மிக மிக ஜாக்கிரதையாக இருக்கச்சொல்லி, கூடிய மட்டும் எழுந்தோ, நடந்தோ, படுத்தோ ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்தனர்.

இன்னும் ஒருவர் இவர்களுக்கெல்லாம் ஒரு படியோ இல்லை ஒன்றரை படியோ மேலே போய் நான் தப்பித்ததை ஒரு கவிதையாக செந்தமிழில வெளுத்துக்கட்டிவிட்டார்.
நான் ஆண்டவனுக்கு என்மனமார்ந்த நன்றியைத்தெரிவித்தேன். தலையில் அடிபடாமல் தப்பியதற்கு என்று நீங்கள்நினைக்கலாம். இல்லை, என்னைப்பற்றி நினைக்கவும், கவலைப்படவும் இவ்வளவு ஜன்மங்கள் இருக்கின்றனவே என்று மகிழ்ந்து புளகாங்கிதம் அடைந்தேன்.
இந்த நிகழ்ச்சி மாத்திரம் நடக்காமல் போயிருந்தால் என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து தங்கள் துக்கங்களையும், சந்தோஷங்களையும் பங்கு போட்டுக்கொள்ள இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாமலேயே போயிருக்கும்.
எனவே அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு உள்ளுக்குள் ஒரு சபலம். உண்மையிலேயே விழுந்ததில் என்மண்டை டணால் தங்கவேலு ஆகி இருந்தால் இன்னும் அதிகமான பேர் ஆறுதல்களையும், துக்கத்தையும, சந்தோஷத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருப்பர்களோ, அந்த சான்ஸை மிஸ் பண்ணிவிட்டேனோ என்ற சபலம்தான்.
********
குறிப்பு: இந்த நிகழ்ச்சியை ஒருவருக்குப் படித்துக் காண்பித்தேன். அவருடைய ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
“எதுக்கும் நீங்க ஒரு பிரெயின் ஸ்பெஷலி
ஸ்டுகிட்டே உங்க தலையை ஸ்கேன் பண்ணிப் பார்க்கச்சொல்லிடறது நல்லதுன்னு நினைக்கிறேன்.”

எழுதியவர் : ரா குருசுவாமி (25-Jun-22, 3:49 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 386

மேலே