பெருந்தலைவர் காமராஜர் 100 நூல் ஆசிரியர் தமிழ்ச்செம்மல் வை சங்கரலிங்கனார் நூல் விமர்சனம் கவிஞர் இராஇரவி

பெருந்தலைவர் காமராஜர் 100
நூல் ஆசிரியர் : தமிழ்ச்செம்மல் வை. சங்கரலிங்கனார்!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி!

வெளியீடு : MJ பதிப்பகம், திருச்சி, பக்கங்கள் : 96, விலை : ரூ.100.

******

‘பெருந்தலைவர் காமராஜர் 100’ என்ற தலைப்பில் நூலாசிரியர் புலவர் தமிழ்ச்செம்மல் முனைவர் வை. சங்கரலிங்கனார் அவர்கள், இதுவரை அறிந்திடாத கர்மவீரர் காமராசரின் இளமைக்கால தகவல்கள் 100-ஐ வியக்கும் வண்ணம் வழங்கி உள்ளார். பாராட்டுகள்.

புதுக்கவிதையின் தாத்தா மேத்தா அவர்களின் வைர வரிகளுடன் பதிப்புரை உள்ளது. எழுத்தாளரும், பேச்சாளருமான நெல்லை கவிநேசன் அவர்களும் வாழ்த்துரை வழங்கி உள்ளார். தோரணவாயில்களாக உள்ளன. இன்னும் பலர் வாழ்த்துரை, அணிந்துரை வழங்கி உள்ளனர்.

கர்மவீரர் காமராசரின் வாழ்க்கை வரலாற்றை 100 சிறு தலைப்புகளில் சிறு குறிப்புகளாக வழங்கி உள்ளார்.

நூலாசிரியர் புலவர் வை. சங்கரலிங்கம் அவர்களும் அவரது துணைவியாரும் உடல்தானம் எழுதி வைத்துள்ளனர். இந்த ஒரு தகுதியே போதும், தன்னலமற்ற காமராசரின் வரலாறு எழுதிட.

நூலினைப் படிக்கும் போது, சிறிய தகவல்கள், படிக்கும் வாசகர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து விடுகின்றன. இளைய தலைமுறை, குறிப்பாக மாணவ சமுதாயம் அவசியம் படிக்க வேண்டிய நூல். காமராசர் பற்றி அறிந்து கொள்ள,உதவும் நூல் .காமராசர் பற்றிய மதிப்பீடு எப்போதும் , எல்லோரிடமும் உயர்வானது தான். அந்த மதிப்பீட்டை மேலும் உயர்த்துவதாக இந்த நூல் உள்ளது. நூலாசிரியருக்கு பாராட்டுகள்.

நூலில் நூறு தகவல்கள் இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு :

சாத்தனூர் அணையை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவும் பல இலட்சங்கள் மிச்சப்படுத்தியும் முடித்ததற்காக பொறியாளர்- களையும், தொழிலாளிகளையும் மனதாரப் பாராட்டி அன்றைய முதல்வர் காமராசர் எழுதிய மடல் முதலில் உள்ளது. காமராசாரின் உயர்ந்த உள்ளத்தை, எளிமையை, இனிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

அழகிய விருதுநகரின் மையத்தில் தெப்பக்குளம் நடுவே மண்டபம் என விவரித்ததைப் படித்தபோது எனக்கு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் நினைவிற்கு வந்தது.

காமராசருக்கு பாட்டி வைத்த பெயர் ‘காமாட்சி’, அம்மா சிவகாமி தன் மகனை ‘ராஜா’ என்று அழைப்பார். இரண்டு பெயரும் சேர்ந்து ‘காமராஜர்’ என்றானது. காமராஜர் பெயர்க்காரணம் நூலில் உள்ளது.

காமராஜர் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது கணக்கு வாத்தியார், குடும்பத்தில் உள்ள 5 பேருக்கு, 2 முட்டை வீதம் மொத்தம் எத்தனை என்று கேட்டார். காமராசர் 8 என்று எழுதி இருந்தார். கணக்கில் யாரை விட்டாய்? என்று கேட்டபோது, அப்பாவை என்று சொன்னார். அப்போது அப்பா இறந்து இருந்தார். நெகிழ்ச்சியான நிகழ்வு.

பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது, மாணவர்களிடம் ஒன்றை அணா காசு வாங்கி ஆசிரியர் விழா நடத்தினர். தேங்காய் சில், வெல்லக்கட்டி என்று வழங்கினார். அனைவரும் முண்டியடுத்து வாங்கினர். காமராசருக்கு இல்லை. வீட்டில் அம்மா காமராசரிடன் நீ ஏன் முண்டியடித்து வாங்கவில்லை என்று கேட்டார். காமராசர் பணம் வாங்கிய ஆசிரியர் தான் எல்லோருக்கும் கிடைக்கும்படி பிரிந்து வழங்கி இருக்க வேண்டும் என்று சொன்னார். சிறு வயதிலேயே நியாயம் பேசுபவராக இருந்ததை அறிய முடிந்தது.

காமராசரின் தாய்மாமா கருப்பையாவிற்கு காமராசர் காங்கிரஸ் தலைவர்களின் பேச்சைக் கேட்பது பிடிக்கவில்லை. நமக்கு இதுபோன்ற செயல் ஒத்து வருமா? என கவலைப்பட்டார்.

காமராசர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது, துணி வாங்கிய அம்மணி அம்மாள், மீதம் தந்த பணத்தில் ஒரு அணாவை கீழே போட்டு விட்டு சென்று விட்டார். நேர்மையுடன் கீழே விழுந்த பணத்தை எடுத்து அம்மணி அம்மாளிடம் ஒப்படைத்தார். அந்த அம்மா பாராட்டினார். காமராசர் இளமைக்காலத்திலும் மிக நேர்மையாகவே வாழ்ந்து உள்ளார்.

காமராசர் மாட்டுவண்டி வீரராகவும் திகழ்ந்தார். மேடுபள்ளமான சாலைகளில் வண்டியை ஓட்டி முதல்பரிசை பெற்றார். சகலகலா வல்லவராக விளங்கினார் என்ற தகவலும் நூலில் உள்ளது.

காமராசர், மாமா கருப்பையா கடையில் வேலை பார்த்து வந்தார். மாலையில் காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராஜூலு கூட்டத்திற்கு செல்ல வேண்டும், மாலையில் மாற்றுஆள் அனுப்பி வையுங்கள் என்றார். மாமா மாற்றுஆள் அனுப்பவில்லை. கடையை பூட்டிவிட்டு காமராசர் காங்கிரஸ் கூட்டத்திற்கு சென்று விட்டார். மாமா கருப்பையா, காமராசரின் காங்கிரஸ் ஈடுபாட்டை தடுக்க முயன்று தோற்றுப் போனார் பலமுறை.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் உரை கேட்க சென்று இருந்தார் காமராசர். கியாஸ் லைட் அணைந்து புகை வந்தது. உடன் காமராசர் அதனை சரிசெய்து எரிய வைத்தார். இதனைக் கண்ட ஜார்ஜ் ஜோசப் பாராட்டினார். வரதராஜுலுவின் உரையையும் கேட்டு மகிழ்ந்தார் காமராசர்.

காமராசரின் பாட்டி காமராசரை விடுதலைப் போராட்டம், காங்கிரஸ் இவற்றை எல்லாம் விட்டு விட்டு, கடையைக் கவனி என வற்புறுத்தினார். அதற்கு காமராசர் சொன்னார், பக்கத்து வீட்டு நாய், நம் வீட்டிற்குள் நுழைந்தால் என்ன செய்வீர்கள், அதை விரட்டி விடுகிறீர்கள் இல்லையா? அதுபோலத் தான், ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்து நம் நாட்டை அதிகாரம் செய்கிறார்கள், அதை எப்படி விட்டு விட முடியும்? என்று கேள்வி கேட்டார். பாட்டியால் பதில் பேச முடியவில்லை.

வெள்ளையரை விரட்டும் போராட்டத்திற்கு காமராசர் வெள்ளையரான ஆர்வி நிறுவனத்தின் முதலாளியிடம் உண்டியலில் பணம் வாங்கினார். இதனைப்பார்த்து மற்றவர்களும் பணம் போட்டார்கள்.

காமராசர் தானே வாள்களை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். மற்றவர்கள் காவலர்களுக்கு பயந்து வாள்கள் எடுக்க தயங்கினார்கள். காமராசர் துணிவுடன் செயல்பட்டார்.

இப்படி நூறு தகவல்கள் நூலில் உள்ளன. காமராசர் பற்றி அறிந்துகொள்ள ஆசை உள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். நூலாசிரியர் புலவர் வை. சங்கரலிங்கனாருக்கு பாராட்டுகள்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (3-Jul-22, 6:16 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 165

சிறந்த கட்டுரைகள்

மேலே