பிரிவின்று அதனால் திருவினும் திட்பம் பெறும் - பழமொழி நானூறு 136

நேரிசை வெண்பா

அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடையார் ஆயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட! பிரிவின்(று) அதனால்
திருவினும் திட்பம் பெறும். 136

- பழமொழி நானூறு

பொருளுரை:

பெரிய மலைநாட்டை உடையவனே!, செல்வம் உடையவர்களுக்கு ஆயின் (அவர்தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும், நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன; (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதலில்லை, அத்தன்மையால், செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும்.

கருத்து:

அறிவுச்செல்வம் பொருட்செல்வம் போல் பிரிதலில்லாமையால் அதனையே தேடுதல் வேண்டும்.

விளக்கம்:

'திரிந்தும் வருமால்' எனவே அறிவுச்செல்வம் திரியாது என்பதும், அறிவுச் செல்வத்தை நாம் தேடுதல் வேண்டும் என்பதும் பெறப்படும்.

'திருவினும் திட்பம் பெறும்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-22, 7:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே