வைரப் பூக்கள்

1. சுவர்க்கத்தில் தெய்வக் கண்ணிகள்
சூடிய மௌவல் மலர்கள்
உதிர்ந்து சிதறிய சிதறல்கள்!

2. இருளின் ஆழுமை மேலோங்கிய
நல்லிரவில், கண்ணுக்கு புலப்படாத
கொடியில் பூத்துக் குலுங்கும்
ஜாதிமுல்லை!

3. நிலவு மங்கையின் திருமணப்
பட்டில் பதித்து வைத்த
ஜாதி வைரம்!

4. ஆபரணம் அனியும் மோகம்
மேலோங்க வெண்ணிலா கைகளில்
ஏந்திய வைரங்களி லிருந்து
சிதறிய மிச்சம்!

5. மழலையின் தட்டில்
மீந்திருக்கும் வெற்றுப்
பருக்கைகளின் வெள்ளைச்
சிதரல்கள்!

6. தாயின் மார்பில்
பசியாறிய மழலை
மதுவுண்ட மகிழ்வில்
புண்ணகை பூக்கும்
பொற் பொழுதில்
அதரப் பிளவிலிருந்து
சிதறிய தாய்பால்
துளிகள்!

7. இருள் சூழ்ந்த மையிருட்டில்
அரவம் அற்ற தைரியத்தில்
மறைவிடம் விட்டு அகன்ற
மின்மினிப் பூச்சிகள்!

8. இரவுப் பொழுதில், தனிமையில்
உலாவரும் நிலா பெண்ணுக்கு
காவலுக்காக, அவளை பின்தொடரும்
காவலாளிகள் கூட்டம்!

9. இருள் சூழ்ந்த இரவுப்
பொழுதில், யாருமற்ற தனிமையில்
தெய்வக் கண்ணிகள் உலாவரும்
கண் கொள்ளாக் காட்சி!

10. அப்பழுக் கில்லாத வெண்
மங்கையின் கருங் கூந்தல்
அலங்காரத்தில் பதித்து வைத்துள்ள
வெண் ஜாதி முத்துக்கள்!

11. இருளில் மௌனமாய்
கண்ணீர் உகுக்கும்
ஒருதாயின் சிதறிய
கண்ணீர் துளிகள்!

12. சுருக்குப்பை ஏந்திய
தாயின் கைவிரலின்
நடுக்கத்தில் சிதறிய
வெள்ளிக் காசுகள்!

எழுதியவர் : கவி பாரதீ (10-Jul-22, 9:34 am)
பார்வை : 236

மேலே