கரும வரிசையாற் கல்லாதார் பின்னும் பெருமை யுடையாருஞ் சேறல் – நாலடியார் 249
நேரிசை வெண்பா
கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாருஞ் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப!
பேதைமை யன்ற தறிவு 249
- அறிவுடைமை, நாலடியார்
பொருளுரை:
அரிய தன்மையையுடைய அலைகள் முழங்கும் முழக்கமிக்க கடலின் குளிர்ந்த துறைவனே! தொழில் முறைமையினால் கல்வியறிவில்லாத மூடரை யடுத்தும் கல்விப் பெருமையுடைய அறிஞரும் ஒழுகுதல், அறியாமை யன்று; அதுகாலம் இடம் முதலியவற்றிற்கேற்ப ஒழுகும் அறிவுடைமையாகும்,
கருத்து:
கல்லாதவரிடமும் காரியநிமித்தம் அளவாக ஒழுகிக் கொள்ளுதல் அறிவுடைமையாகும்.
விளக்கம்:
கரும வரிசையால் என்றது, காரணங் கூறியபடி. ‘அருமரபின்கடல்' என்க, ஆழமும் அகலமும் வாய்ந்து உப்பு முத்து முதலிய அரும்பொருள்களுடைமையானும் உலகவொழுக்கத்துக்கு மழை முதலிய கொடைகளால் ஏதுவாயிருத்தலானும் கடலின் அருமரபு பெறப்படும்: