அருமையான அந்தாதிக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் டிஎம் இமாஜான் நூல் விமர்சனம் கவிஞர் இராஇரவி
அருமையான அந்தாதிக்கூ கவிதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் டி.எம். இமாஜான் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
வெளியீடு : மல்டி ஆர்ட் கிரியேசன்ஸ்,
A10, ANSON ROAD, # 27/18 INTERNATIONAL PLAZA, SINGAPORE – 079903.
நூலின் சிங்கப்பூர் விலை : $12.
******
நூலாசிரியர் கவிஞர் டி.என்.இமாஜான் அவர்கள் சகலகலா வல்லவர். சிங்கப்பூரில் இருந்துகொண்டு தமிழ் வளர்க்கும் பண்பாளர். சிங்கார சென்னையில் சந்தித்தபோது நூலாசிரியர் இந்த நூலை என்னிடம் வழங்கினார். நூலாசிரியர் 235 தமிழ் நூல்களும், 8 ஆங்கில நூல்களும் எழுதி உள்ளார். எழுதிய நூல்களின் எண்ணிக்கையைப் பார்த்து பிரிமிப்பு அடைந்தேன். இவ்வளவு ஆற்றல் இருந்தும் எளிமையாகப் பேசிடும் பழகிடும் பண்பாளர். சிங்கப்பூரின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார்.
நூலிலிருந்து பதச்சோறாக சில அருமையான அந்தாதிக்கூ கவிதைகள் காண்போம். ‘அருமையான’ என்ற அடைமொழியை அவரே வழங்கி விட்டார். காரணப்பெயர் தான். கவிதைகள் அருமையாக உள்ளன. சிந்திக்க வைக்கின்றன. திருச்சியில் உலக ஹைக்கூ மாநாட்டில் வெளியிட உள்ளார். அதற்கு முன்பாகவே என்னிடம் நூலை வழங்கி விட்டார். நூலாசிரியரின் 214வது நூல் இது. கவிதை நூல்களில் 35வது நூல் இது.
சிரிப்புக்கு வந்தது பஞ்சம்
பஞ்சம் வந்தது எதனால்
எதனாலென்றால் கோபத்தால்!
உண்மை தான். கோபம் வந்தால் இன்பம், மகிழ்ச்சி, சிரிப்பு காணாமல் போகும். ‘கோபத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு அமர்வாய்’ என்று பொன்மொழி உண்டு. உலகப்பொதுமறை வடித்த திருவள்ளுவர், ‘சினம் தவிர்க்க’ என்றார்.
பட்டாம்பூச்சி தேன் குடிக்கவில்லை
குடிக்காததன் காரணம் தெரியுமா?
தெரியும், பூக்களுக்கு வலிக்குமென்று!
கேள்வி கேட்டு பதில் கூறும் விதமாக வடித்த அந்தாதிக்கூ கவிதைகள் அருமை. சிறப்பு. நல்ல யுத்தி. பெரும்பாலான கவிதைகள் கேள்வி-பதில் பாணியிலேயே வடித்துள்ளார். மலருக்கு வலிக்குமென்று பட்டாம்பூச்சி தேன் குடிக்கவில்லை என்று மலர்நேயம் கற்பிக்கின்றார்.
சூரியன் சுட்டெரிக்கின்றது
சுட்டெரிப்பது எதனால்?
எதனாலா? ஓசோனில் ஓட்டை!
புகை, நச்சு மாசுகளால் ஓசோனில் ஓட்டை விழுந்துள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர். ஓட்டை பெரிதாக ஆக சூரியன் ஓசோன் படலம் இன்றி நேரடியாக பூமிக்கு வருவதால் பூமி வெப்பமயமாகி விடுகின்றது என்ற அறிவியல் கருத்தையும் விழிப்புணர்வு விதைக்கும் விதமாக வடித்தது சிறப்பு.
கடல் கொந்தளிக்கிறது
கொந்தளித்தால் நல்லதா?
நல்லது மீனுக்கு!
கடல் கொந்தளித்தால் மனிதன் தான் கவலைப்பட வேண்டும். ஆனால் மீன்களுக்கு கொண்டாட்டம் தான் என்பதை கடல் கொந்தளிப்பை மீன்களின் பார்வையில் பார்த்தது நன்று.
அப்பாவைத் தினமும் பராமரிக்கிறேன்.
பராமரிப்பதில் எனக்குச் சிரமமில்லை,
சிரமம் பூமாலை வாங்குவதில்!
மூன்றாவது வரியில் எள்ளல் சுவையும் முதல் இரண்டு வரிகளில் வந்ததிலிருந்து திருப்பமும் ஹைக்கூ யுத்தியை கவிதைகள் முழுவதிலும் நன்கு பயன்படுத்தி உள்ளார். இக்கவிதையை பல கோணத்தில் பார்க்கலாம். அப்பா உயிரோடு இருந்தபோது கவனிக்காதவர்கள் இறந்தபின் படத்திற்கு மாலையிட்டு என்ன பயன் என்ற கேள்வியை போலி மனிதர்களைப் பார்த்து கேட்டுள்ளார். இறந்தபின் மாலை வாங்குவதற்கு கூட சிரமம் என்று மனமில்லா மனிதர்கள் உள்ளனர் என்றும் புரிந்து கொள்ளலாம்.
தீபாவளி அருகில் வந்தது
வந்ததும் நன்கு வெடித்தார்
வெடிப்புக்குக் காரணம் வறுமை!
தீபாவளி வருவதால் பணக்கார்களுக்கு எந்தவித சிரமம் இல்லை. மகிழ்ச்சி தான். ஆனால் ஏழை நடுத்தர குடும்பத்தலைவனுக்கோ இந்த தீபாவளி ஏண்டா வருகிறது என்ற வருத்தமே மிஞ்சும். வட்டிக்கு கடன் வாங்கி தீபாவளி கொண்டாடும் நிலையே ஏழைகளுக்கு. எனவே கோபத்தில் வெடிப்பது இயல்பு தான்.
பணம் ஒரு குரங்கு
குரங்கு என்ன செய்கிறது
செய்கிறது தாவுதல்!
பணம் ஒரு குரங்கு தான். ஆனால் பணக்காரர்களிடம் சென்றால் தாவுவதில்லை. நிலையாக நின்று விடும். ஏழைகளிடம் வந்தால் உடனே சென்று விடும். “கையிலே வாங்கினேன், பையிலே போடலை, காசு போன இடம் தெரியலை” என்ற பாடல் தான் இன்று அரங்கேறி வருகின்றது. வருமானம் குறைந்து வருகின்றது, விலைவாசி ஏறி செலவோ பெருகி வருகின்றது. ஏழைகள் நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் இழந்து, வாழ்வது அறியாது வாழ்க்கையை போராட்டமாக நடத்தி வருகின்றனர். இந்நிலை மாறி நல்நிலை பிறக்க வேண்டும்.
எப்போது விடியல் வரும்
வருகைக்காக விழித்திருக்கிறன்
விழித்திருக்கும் இரவுக்காவலன்!
எப்போது விடியல் வரும்? என்று மக்களும் காத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். விடியல் வந்தபாடில்லை. இதோ இதோ என்று ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர். மூன்றாவது வரியில் திருப்பம் என்ற யுத்தியில் இரவுக்காவலன் எதிர்பார்க்கிறான் விடியலை என்று முடித்திருப்பது முத்தாய்ப்பு.
தமிழ்க்குடும்பத்தில் குழந்தை
குழந்தையைத் தூக்கினான்
தூக்கலான ஆங்கிலம்!
உண்மை தான். மம்மி என்றால், ‘பதப்படுத்தப்பட்ட பிணம்’ என்ற பொருள் புரியாமலே ‘மம்மி’ என்று அழைக்க வேண்டுமென்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்கள் பெருகிவிட்ட
அவலநிலை படம்பிடித்து காட்சிப்படுத்தி உள்ளார். ஆங்கிலம் மட்டுமல்ல, தமிங்கிலமும் பேசி தமிழைச் சிதைத்து வருகின்றனர் தமிழகத்தில்.
போதை மருந்து கடத்தல்
கடத்துவது ஒரு பெண்
பெண்ணின் கண்ணில் மயக்கம்!
காதலைப்பாடாத கவிஞன் இல்லை, காதலைப் பாடாதவன் கவிஞரே இல்லை என்பதைப் போல நூலாசிரியரான கவிஞர் டி.என். இமாஜான் காதலை எழுதி உள்ளார். ‘கஞ்சா வச்ச கண்ணு’ என்ற திரைப்படப் பாடலும் நினைவிற்கு வந்தது. கன்னியரின் கண்களில் போதை உண்டு என்கிறார். நானோ மின்சாரம் உள்ளது என்கிறேன். அறிவியல் அறிஞர்கள் தான் இதற்கு விடை கூற வேண்டும். மொத்தத்தில் அருமையான அந்தாதிக்கூ கவிதைகள். பாராட்டுக்கள்.
--